Monday, January 19, 2015

பிரயாகை-80-ஐந்து அகங்களின் மையம்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

முதன்முதலில் கர்ணன் அஸ்தினபுரிக்கு வரும்நாளில் வண்டியில் துயின்றுகொண்டு வரும் அதிரதன் விழித்தெழும்போது ரதத்தில் செல்லும் அர்ஜுனனைப்பார்த்து நம்மகன் எதற்கு ரத்தில் செல்கின்றான் என்று ராதையிடம் கேட்டு வசவுவாங்கிக்கட்டிக்கொள்வான். கர்ணனையும் அர்ஜுனனையும் ஒரே அச்சில் பார்க்கும் அதிரதன் விழிகள் அவை.

துர்க்கையாலத்தில் கர்ணனைப்பார்த்த பாஞ்சாலி பின்பு லெட்சுமியாலத்தில் அர்ஜுனனைப்பார்க்கையில் அந்த ஒரே அச்சியின் இருவடிவங்களைக்கண்டுக்கொள்கின்றாள்.

அந்த இருவடிவங்களில் ஒன்று காதல் ஒன்று காமம். காதலுக்கு முன்பு காமமா? காமத்திற்கு முன்பு காதலா? காமத்திற்கு முன்பு காதல் என்றால் அது ஒரு பெண்ணை அன்னையாகத்தான் நோக்கும். காமத்திற்கு பின்பு காதல் என்றால் அது ஒரு பெண்ணை மனைவியாக நோக்கும்.

கர்ணன் முதலில் பாஞ்சாலியைப்பார்த்தான் அதுவும் துர்க்கை ஆலயத்தில் பார்த்தான் என்பதுதான் எத்தனை அற்புதமான குறிப்புகள் நிறைந்தது. துர்க்கைமுன் யாரும் காதல்கொண்டு நிற்கமுடியும் அந்த காதலால் அவளை விட்டு பிரியவும் முடியாது. அவளிடமிருந்து கணம்தோறும் பெருகும் தாய்மைக்கண்டு அவள் முன் குழந்தையாகமால் தொடவும் முடியாது. பாலையின் தெய்வம் துர்க்கை அவள் தனித்தவள். அவள் முன் நிற்பவனும் தனித்தவன். பாலையின் காதல்கவிதைக்கூட பிரிவின் உச்சத்தையே பிழிந்து வைக்கிறது. வலியே அங்கு தவம். அறிந்தோ அறியாமலே துர்க்கை ஆலயத்தில் பாஞ்சாலியை சந்தித்த கர்ணனும், துரியனும் வரம் வாங்க செல்லவில்லை வலிவாங்க சென்று உள்ளார்கள்.

அர்ஜுனன் கர்ணன் இருவரும் தாயால் விலக்கப்பட்டவர்கள். இருவரும் தாயிக்காக ஏங்கியவர்கள். ஏன் கார்ணன் பாஞ்சாலியை காதலின் மூலம் உள்ளமாக்கினான், அர்ஜுனன் காமத்தின் மூலம் பாஞ்சாலியை உடலாக்கினான். தன்னை விலக்கிய தாயின் அகம் என்ன? என்ற வினா கர்ணனின் அடிமனதில் இருந்தே தீரும். தன்னை விலக்கும் தாயின் அகம் என்ன என்பதை அர்ஜுனன் நினைக்கவில்லை மாறாக அவள் உடல்தன்னை ஏன்விலக்குகின்றது என்பதை நோக்குகின்றான். இந்த மனநிலையே இருவரின் காதலும் காமமாய் எழுந்து பாஞ்சாலி முன் வந்து நிற்கின்றது. 

லட்சுமி கோயிலுக்குள் செல்லும் பாஞ்சாலியைப்பார்க்காமல் லெட்சுமியை தரிசித்து லெட்சுமியாகிவரும் பாஞ்சாலியை சந்தித்த அர்ஜுனனுக்கு யார் தந்த வரம் இது. மனைவி மகாலெட்சுமிபோல் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.மகாலெட்சுமி வரம்வாங்கி அவரும் பாஞ்சாலியை அர்ஜுனன் கண்ணுக்கு காட்டிய மகாலெட்சுமியின் திருவருள் கடாச்சம் எத்தனை பெரிய அழகிய நிமித்தம். பூவோடு படியேறிப்போகும் அர்ஜுனனும், அன்னை தரிசனம் முடிந்து படியிறங்கி வரும் பாஞ்சாலியும். ஒருவருக்குள் ஒருவர் கண்கள் வழியாக ஏறி இறங்கும் அற்புத காதல் விளையாட்டு.

காதல் தோற்பன் மூலமும் காமம் வெல்வதன் மூலமும் பெண்ணுக்குள் வாழ்கின்றது. மகாலெட்சுமியின் குறியீடான செல்வத்தை அடங்கா ஆசைக்கொண்டவனாலேயே வென்று தன்வயப்படுத்த முடியும். அதன் முதல் வாயில் கண். கண்வழியாக பாஞ்சாலியை காணும் அர்ஜுனனும், உள்ளம் வழியாக பாஞ்சாலியை காணும் கர்ணனும் ஆணின் அகம் பிரியும் இடத்தை பருவடிவாக்கி காட்டுகின்றார்கள். அர்ஜுனன் கண்ணை சந்திக்கும் பாஞ்சாலியும், கர்ணன் நெஞ்சை சந்திக்கும் பாஞ்சாலியும் ஒரு வடிவின் இரு குணங்கள்.

எங்கோ இருக்கும் சூரியனைக்கண்டு தாமரை மலர்கின்றது. அந்த சூரியனிடம் தாமரைக்கு காதல் இருக்கலாம் ஆனால் வண்டு அல்லவா வந்து பூவில் விழுந்து தேனை சுவைத்து செல்கின்றது. கர்ணனின் சூரிய கவசத்தில் மலரும் பாஞ்சாலிக்கண் என்னும் தாமரைப்பூவில் அர்ஜுனன் கண்ணென்னும் வண்டு வந்துவிழுந்து தேன்குடிக்கிறது.

காதல் காமம் இரண்டிலும் சமன் இழக்காத பாஞ்சாலி தருமனைக்கண்டுதான் திகைக்கிறாள். அவன் சொல்லறிந்தவன் என்பதற்காக மட்டும்இல்லை. அன்னைவிழிக்கொண்டவன் என்பதாள். துருபதனிடம் குழந்தையாக இருக்கும்போதே அன்னையும் பெண்தான் என்று சொன்ப்பாஞ்சாலி இன்று ஆணுக்குள் அன்னைவிழி காணும் நேரத்திற்கு பின்புதான் அகம் சற்று அசைகிறாள். காமத்தாலோ, காதலாலோ திசைவிளக்கி வெளிநோக்கா திரௌபதி இப்போது திரைவிளக்கி வெளிநோக்குகின்றாள். தன்னை திறந்துக்கொள்ளும் இடம் அது.  காமம், காதல் இரண்டாலும் கட்டப்படும் பெண்களுக்கு உடலுக்கு அப்பால் பொதுவெளியை காட்டும் தருமன் நிலையழிக்கின்றான். சொல்லும் பொருளுக்கும் அப்பால் இருக்கும் ஒரு தரிசனத்தை காட்டும் தருமனை பாஞ்சாலிப்பார்ப்பது சரஸ்வதிக்கோயில் என்பது எத்தனை அழகு.

ஒரு பெண்ணிடம் தாயாய் இருப்பது ஒரு அகம், காதலனாய் இருப்பது ஒரு அகம், காமனாய் இருப்பது ஒரு அகம். தாசனாய் இருப்பது ஒரு அகம். குழந்தையாய் இருப்பது ஒரு அகம்,

இந்த பிரபஞ்ச பெருவெளியின் வீதியின் ஏதோ ஒரு மூலையில் இருந்து எழுந்துவரும் லட்சோப லட்ச மக்களில் ஒருவனாக இருந்து எழுந்து வரும் அவன்தான் அவளுக்கு பிரயமான அனைத்தையும் செய்வான். அவளுக்காக..அவளுக்ககா..அவளுக்காக.. அவளுக்ககா மட்டும்.  பீமன் இருந்து எழந்துவரும் இடம் அற்புதம்.   அவனைப்பயன்படுத்தி தூக்கி எறியும்போதுகூட அவன் அவளுக்காக வாழ்வன். அவனைப்பயன்படுத்துவதற்காகவே அவளும் வாழ்வாள். பீமன் தாசமார்க்கத்தின் உச்சம்.

பெரும் வல்லமைக்கொண்ட பாஞ்சாலியை ஐந்து அகங்களுக்கு மையத்தில் நிறுத்திய வெண்முரசு வாழ்க! பிரயாகை என்னும் பெயர் வாழ்க!

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.