Monday, January 26, 2015

பிரயாகை-86-தலையில் கண்ணுள்ளவன்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

எது நடக்குமோ அதுதான் நடக்கும், ஆனால் அது இப்படித்தான் நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது.

“அஞ்சவேண்டாம் அன்னையே, நாம் வெல்வோம்” என்று அர்ஜுனன் சொன்னதுதான் நடந்தது. சொன்னபடி செய்தவனும் அர்ஜுனன்தான். அந்த செயலும் அவன் அறியாமல் நடப்பதுதான் வாழ்க்கையின் ரகசியம் என்று நினைக்கிறேன்.

கிந்தூரம் ஒருவில்தான் ஆனால் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வில்.  அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வில்லாக நினைத்து கையால்கின்றார்கள். ஒவ்வொருவரையும் அது ஒவ்வொரு விதத்தில் கையாளல்கிறது  அல்லது கவுக்கிறது.

கிந்தூரம் கனமென்றும், கனமில்லை என்றும், மனமென்றும், உதடென்றும், உடலென்றும், இமை என்றும் எத்தனை எத்தனைவிதமாக வடிவுக்கொண்டு விளையாடுகின்றது.

கண்ணனிடம் கிந்தூரம் தோழிபோல, கர்ணனிடம் புன்னகைமின்னும் உதடுபோல, அர்ஜுனன்இடம் விழிகொண்ட இமைபோல கிந்தூரம் இருக்கின்றது.

கண்ணனிடம் கிந்தூரம் தோழிபோல் இருப்பதால் கண்ணனும் திரௌபதியும் இரண்டல்ல ஒன்று என்றுக்காட்டுகின்றான் கண்ணன்.

கிந்தூரம் கர்ணனிடம் புன்னகைஒளிக்காட்டுகின்றது. அதில் அவன் நிழல் நீரோடையென தெரிகிறது. அப்படி என்றால் திரௌபதிக்குள் கர்ணனின் ஒரு நிழல் காதல் என்று நெளிந்துப்போகின்றது. நதிக்கும் அந்த நிழல் கைக்குகிட்டுவதில்லை.  அந்த நிகழுக்கு உரிய கர்ணனுக்கும் அந்த நிழல் கைக்கு கிட்டுவதில்லை. அந்த நிழல் அந்த கணத்தின் ஒரு ஓவியம் அதுதான் அவ்வளவுதான் கர்ணன்மீது திரௌபதிக்கு இருந்த காதல். 

அவன் கிந்தூரத்தை நெருங்க நெருங்க அவள்விலகிப்போவதை கர்ணன் உணர்வதுதான் அழகு. அது அந்த நிழலின் அலைபிம்பம் மட்டும்தான்.  அதையும்தாண்டி அவன் அந்த கிந்தூரத்தைதொடும்போது அது தொடுதல் விலக்கும் குழந்தையாகும் தருணத்தில் கர்ணன் தன் ஆண்மை என்னும் ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக நிற்கும் தருணத்தை அடைந்திருப்பான். காதலியை தொடும்நேரத்தில் அவள் குழந்தை என்று அறிந்தால்  ஆணின் ஆண்மை தூக்கில் தொங்கிவிடாதா?  சத்திரியர் அல்லாதவர்களை சத்திரியர்களாக ஆக்கும் பரசுராமன் கர்ணனை சத்திரயன் ஆகக்கூடாது என்ற கணத்தில் எழும் வலிமனநிலை வந்து உறையும் கணம் அல்லவா அது. பெரும் வில் ஞானம் தந்துபின் ஷத்ரத்தை எழவிடாமல் செய்த பரசுராமன். பெரும்காதல் தந்து ஆண்மையை எழவிடாமல் செய்த பாஞ்சாலி. எதிரியாக நின்று சிரிக்கும் அர்ஜுனன் வஞ்சத்தை வெளியிடாமல் இரத்தப்பாசத்தைக்காட்டும்  புன்னகை. அன்று அர்ஜுனன் புன்னகையில் முழுக்க முழுக்க நீ சூதன் என்ற வஞ்சம் இருந்திருந்தால் அந்த சினத்தில் கர்ணன் ஷத்ரம் எழுந்து வென்று இருப்பானே.  கர்ணன் என்ன பாவம் செய்தான் உச்சத்தில் சென்று பாதளத்தை அறியும் தருணத்தை பெறுவதற்கு.  

கர்ணன் சினத்தால்தான் தோற்றான். அந்த சினம் யார்மீது? மண்மீதா? தன்மீதா? விண்மீதா? பாஞ்சாலிமீதா? பரசுராமன்மீதா? யார்மீதும் இல்லை. உண்மையின்மீது. பாதி உண்மைதான் இங்கு பார்க்கப்படுகின்றது என்பதை அவன் மட்டுமே அறிந்து இருக்கிறான். எப்போதும் பாதி மூடியவிழியோடு அவன் யோகத்தில் இந்து அதையே கண்டும் கொள்கின்றான். நிறுவவும்செய்கின்றான்.

கேசினிக்கிளியை அடிக்காதே என்று எது அர்ஜுனனுக்கு சொல்லியதோ அதுதான் கர்ணனுக்கும் அடிக்காதே என்று சொல்லியிருக்கும். அதன் சொல்லை கர்ணன் கேட்டான். அதன் சொல்லை அர்ஜுனன் கேட்கவி்ல்லை. அதன் சொல்லை கேட்டுக் கட்டுண்டதால் கர்ணன் சினம்கொண்டான். அதன் சொல்லை கேட்காமல் இருக்க அர்ஜுனன் சினம்கொண்டான்.

கர்ணன் சினம் வில்லில் தோல்வி ஆனால் தன்னில் வெற்றி. அர்ஜுனன் சினம் வில்லில் வெற்றி ஆனால் தன்னில் தோல்வி. உண்மையில் பாதிதான் கண்ணால் பார்க்கப்படுகின்றது. மீதிபாதி உண்மை அகக்கண்ணால் பார்க்கப்படுகின்றது.

புறக்கண்ணால் பார்க்கப்படும் உண்மைகளை கர்ணன் சரியாக பார்க்கின்றானோ இல்லையோ அகக்கண்ணால் பார்க்கும் உண்மையை எப்போதும் சரியாக பார்க்கிறான். கண்ணன் இன்னும் எழுவில்லை என்பதை ஏன் கர்ணன் மறந்தான். மறந்தவன்பின் ஏன் கண்ணனை பார்த்தான். அவசரத்தில் தப்பு செய்து, பின் சாவகாசமாய் சங்கடப்படும் பிறவிக்கர்ணன். இது குந்தி அவனை கருக்கொண்டபோது செய்த பிழை.

அர்ஜுனன்  அகக்கண்ணால் பார்க்கும் பார்வையை சரியாகப்பார்க்கின்றானோ இல்லையோ புறக்கண்ணால் பார்க்கும் பார்வையை சரியாக பார்க்கிறான். கண்ணன் எழும்வரை காத்திருந்த அர்ஜுனன் பின் எழுந்துப்போகின்றான். கண்ணனை நோக்கிப்போகும் பார்வையை தடுத்து குறியில் நிலைக்கின்றான். குருவிடம் கற்று குருவை வெல்லும் சீடன்.

அன்புள்ள ஜெ. இந்த பகுதியில் கண்ணன் வில்லேந்தினான் என்று காட்டியபோது ஏன் என்று நினைத்தேன்?. கண்ணன் வில்லேந்தியதால்தான் உண்மையின் மையம் என்னவென்று அறியமுடிகின்றது.

சினத்தால் கர்ணன் கேசினிகிளியை அடிக்கவில்லை. சினத்தால் அர்ஜுனன் கேசினிக்கிளியை அடித்தான். சினமே இல்லாமல் கேசினிக்கிளியை அடிக்கவும் முடியம், அடிக்காமல் விடவும் முடியும் என்பதை கண்ணன் காட்டிப்போகின்றான். உண்மையின் மையம் அதுதான். வெல்வதும் தோற்பதும் உண்மையின் பாதிப்பாதிதான். பாதியைப்பெறுபவன் வெறுமையையே சுமக்கின்றான். கண்ணன்தான் முழுமையை சுமந்துச்செல்கின்றான்.  

கேசினிக்கிளியை   கர்ணன் வென்று இருந்தாள் பாஞ்சாலியின் கூந்தல் கர்ணன் கையை கட்டியிருக்கும். அர்ஜுனன் வென்றதால் பாஞ்சாலியின் கூந்தல் அர்ஜுனன் கையை கட்டிவிட்டது.

கண்ணனின் புன்னகையில் கர்ணன் காண்பது அன்னையின் கனிவு. அர்ஜுனன் காண்பது முதுதந்தையின் எள்ளல். கர்ணன் தப்பிவிட்டான். அர்ஜுனன் மாட்டிக்கிட்டான்.
//அவன் விழிதூக்கி யாதவனை நோக்கினான்அங்கே புன்னகைஇருந்ததுஅறிந்த புன்னகைகடந்த புன்னகைஇனிய எள்ளல்கொண்ட முதுதந்தையின் புன்னகை-பிரயாகை86.

கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தைபார்த்தான்அந்தப்புன்னகை அங்கிருந்ததுஅறிந்ததுஅன்னையின்கனிவென குளிர்ந்தது.-பிரயாகை85//


சேசினிக்கிளியை அடிக்காதே என்று அர்ஜுனன் அகம் அடம்பிடித்தபோது அவன் அகம் படித்தகுறள் இதுதான்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.  பாஞ்சாலிக்கூந்தலுக்காக அர்ஜுனன் வில் இனி எத்தனை குருதியில் குளிக்கவேண்டும்.

இந்த நீலவண்டு கண்ணன் பயலுக்கு மட்டும் இந்த குறள் எப்படி முன்னமே தெரிந்துவிடுகின்றது?. அவனுக்கு தலையில் கண்ணு இருக்கு ஜெ. அது சரியாக பார்த்துவிடுகின்றது.   //அவன்கருங்குழலில் சூடிய மயிற்பீலியின் விழி அண்மையில் எவரோவந்தது போல் வியந்து வானை நோக்கியது//

தலையில் கண்ணுள்ளவன் தாள்போற்றி. அந்த தாளை தாங்கிவரும் வெண்முரசுப்போற்றி.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.