Monday, January 19, 2015

ஐந்து முடிச்சு




இனிய ஜெயம்,

வெண்முரசில் நிலங்களின் வகைகள்தான் எத்தனை. அவற்றில் நிகழும் சடங்குகள், திருமண நிகழ்சிகள் இவற்றின் பண்பு பேதங்கள்தான் எத்தனை,?

இடும்பியின் மணம், ஒரு வகை, காந்தாரியின் மணம் ஒரு வகை, திரௌபதியின் மணம் வேறு வகை. ஒவ்வொன்றிலும் எத்தனை துல்லியமான நிகழ்ச்சி விவரிப்பு.

இந்த விவரிப்புகள் எல்லாம் 'இன்றை' சேர்ந்த நவீன மனம் சொல்வது போலவே இல்லை. எதோ காலத்தின் பாதாள அடுக்கில் புதைந்துபோன 'அன்றை'சேர்ந்த ஆழ்மனம் ஒன்று, எழுந்து வந்து மீண்டும் நினைவு கூறி அனைத்தையும் சொல்வது போல, ஒரு எல்லையில் பீதியாகக் கூட இருக்கிறது.

விலக்கிவைக்கப்பட்ட சிகண்டி மண நிகழ்வுக்குள் நுழைகையில் , சண்டி மண மேடையில், வராகி பார்வையாளர் வரிசையில் என எண்ணம் ஒன்று தோன்றி விதிர்க்க வைத்தது.

இன்றைய அத்யாத்தின் உணர்வு நிலை 'பீதி' என்றே சொல்வேன்.  சண்டி ஆலயத்தில்  நிகழ்ந்த நரபலிக்கு ஜிவ்ஹன் உடன்  காத்திருக்கும் கபாலிகன் சித்திரம் இன்று வேறு ஆழம் கொள்கிறது.

தீர்க்க சியாமர்  இறந்த அன்று ஒரு கபாலிகன் வருகிறான். அவன் துரியனை விலக்கி வைக்க சொல்லி, ஹச்தினாபுரிக்கு வரவிருக்கும் குருதி  மழை குறித்து விதுரர் வசம் முன் உரைக்கிறான்.

இங்கே பாஞ்சாலத்தில் ஒரு கபாலிகன்  குருதிகொள்ள திரௌபதியை வாழ்த்தி அனுப்புகிறான்.

கபாலிகர்கள் வழியே அனைத்தும் ஒரு சரடில் கோர்க்கப்பட்டு விடுகிறது. விதி எனும் மீள விடுபட இயலா சரடு.

கடலூர் சீனு