Friday, January 30, 2015

எரிவதென்பது...



ஜெ

பிரயாகையின் அந்த அரக்குமாளிகை நிகழ்ச்சியை வாசித்தேன். நீங்கள் அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட விதம் ,அதில் உள்ள பொருட்கள், அதை அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள், அவர்கள் எப்படித்தப்பினார்கள் என்றெல்லாம் தெளிவாகச் சொல்கிறீர்கள். இந்த micro details அவையெல்லாம் சேர்ந்து அங்கே உண்மையில் தீ நிகழ்ச்சி நடப்பது போலவும் அதில் நாமும் சிக்கி தப்பித்துக்கொள்வதுபோலவும்தான் எண்ணச்செய்தது

ஆனால் பிறகுதான் விமர்சனத் தளத்திலே வந்திருந்த ஏராளமான கடிதத்தை வாசித்தேன். அந்த தீ நிகழ்ச்சியை ஒரு குறியீடாக வாசிக்கலாம் என்று தெரிந்த்து. அப்படி தோன்றியதுமே பெரிய பதற்ரம்  வந்தது. நினைக்க நினைக்க மனதுக்குள் விரிந்துகொண்டே போயிற்று

எரிந்து அழிவது என்பது சாமானியமானது இல்லை. எங்கள் மொத்தச் சொத்தும் எங்கள் அம்மாச்சியும் அவரது மூன்று பிள்ளைகளான தாய்மாமன்களாலும் சேர்ந்து எடுத்துக்கொண்டார்கள். அம்மா மட்டும்தான். அப்பா சின்னவயதிலேயே தவறிவிட்டர். ஒன்றுமே இல்லாமல் தெருவிலே நின்றோம். அம்மா சத்துணவு ஆயா வேலைக்குப் போனார்கள்

அதன்பின் நானும் அண்ணனும் படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். இன்றைக்கு அம்மாவுக்கு ஒன்றும் குறை இல்லை. ஆனால் அம்மா அப்படி மறக்கவே இல்லை. நினைத்து நினைத்து எரிந்துகொண்டே இருக்கும். அவளுக்கு அந்த துரோகம் பெரிய  ஒரு தீ போல.

அம்மாச்சி செத்துப்போன செய்தி கேட்டபோது அம்மா போய் அந்த சிதையிலே மண்ணை அள்ளி போட்டு தூற்றி அழுதுவிட்டு வந்தது. மாமன்கள் அம்மாவை விறகு கொள்ளியால் அடிக்க ஊர்க்காரர்கள் தடுத்தார்கள். ஒருநாள் அம்மா எங்கள் வீட்டுக்கு பக்கத்திலே குடிசையில் தீ வைத்தபோது கையை விரித்துக்கொண்டு ‘தீ தீ’ என்று சொல்லிக்கொண்டே ஓடி போனாள். அப்போது முகம் பைத்தியம் போல இருந்தது. அந்த காட்சியை மறக்கவே முடியாது

அரக்குமாளிகை நிகழ்ச்சியை இப்போது வாசிக்கும்போது நீங்கள் சொன்ன சித்திரம் மனசிலே வந்து அம்மாவை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுவதுபோல் இருந்தது. பயங்கரமான ஒரு கனவு போல. ஒரு வீடே உருகி வழிவது என்றால்.... அது பெரிய கெட்ட கனவு. அதைத்தான் அற்புதமாகச் சொல்லியிருந்தீர்கள். எங்கள் அம்மாவும் ஒரு குந்திதான்

சிவகுமார்