ஜெ
தருமனின் செய்தி வருவதற்கு முன்னமே என்னவோ நடக்கப்போகிறது சுபகாரியம் என்று விதுரருக்குத் தோன்றுகிறதே அதுதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஏனென்றால் எனக்கு இரண்டு முறை அப்படி தோன்றியிருக்கிறது. [அதேமாதிரி நாலைந்து முறை கெட்டதும் தோன்றியிருக்கிறது. சொல்லப்போனால் கெட்டதுதான் அதிகம் முறை தோன்றியிருக்கிறது. என் தாயார் கல்லுக்குண்டு மாதிரி இருக்கும்போதே அம்மாவுக்கு திதி செய்வதுமாதிரி தோன்றியது ஒருநாள். அன்றைக்கு மறுநாள் அம்மா தூக்கத்திலேயே காலமானார்கள்]
அப்படி தோன்றியதுமே சீச்சீ இதெல்லாமா நடக்கப்போகிறது என்று உடனே நம்முடைய மனசு எச்சரிக்கை ஆகிறது. அதை அப்படியே போட்டு மூடிவிட முயல்கிறது. ஆனால் அது பெரும்பாலும் நடக்கிறது. சொல்லப்போனால் அது விஷ்ஃபுல் சிந்தனை இல்லை என்றால் நடந்துவிடுகிறது. உண்மையிலே என்னதான் நடக்கிறது என்று நான் ஆச்சரியம் பட்டிருக்கிறேன். அதை இங்கே வாசித்தபோது அது நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று தோன்றியது. நாமெல்லாருமே யோகிகள்தான் அவ்வப்போது என்று என் குரு சொல்வார் [ராமச்சந்திரா மிஷன்] அது ஞாபகம் வந்தது
சுவாமி
சுவாமி அவர்களுக்கு,
இது நான் ஒரு குறிப்பில் எழுதியது
இந்த அத்தியாயத்தில் ஒரு intuition விவகாரம் இருக்கிறது. இந்த அத்தியாயத்தின் பெரும்பகுதி அதற்கே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தருமனின் ஓலை வருவது நாலைந்து பத்திகள் நீளும் கதைதான். அந்த மனநிலைவிவரிப்பை தள்ளித்தள்ளி கடந்து கதை முடிவை வாசித்தாலே என்ன நடந்தது என அறிந்துகொள்ளலாம். நான் கோரும் வாசிப்பு அது அல்ல.
அஸ்தினபுரியில் எல்லாமே எதிர்மறையாக இருக்கிறது. ஆனால் திடீரென்று நல்லதே நடக்கும் என்று விதுரருக்குத் தோன்றுகிறது. ஏன் என்றால் தர்க்கபூர்வமாக தெரியாது. திருதராஷ்டிரனின் நடத்தையில் இருந்து தெரிவதாக நினைத்துக்கொள்கிறார். எதிர்பார்க்கிறார். காத்திருக்கிரார். நடக்காதோ, வெறும் மனப்பிரமைதானோ என தோன்றுகிறது. ஆனால் நடந்துவிடுகிறது. எல்லாமே சுபமாக முடிகிறது
நடக்காமலே போவதாக எழுதுவதுதான் சாதாரணமாக கதை எழுத்தாளர்கள் எழுதும் டிவிஸ்ட். அது ஆசிரியனும் எழுத்தாளனும் கொள்ளும் விளையாட்டு. அதில் எனக்கு ஆர்வமில்லை. ஏனென்றால் என் பிரச்சினை இது எப்படி நிகழ்கிறது என ஆராய்வது மட்டுமே. இது புனைவுசர்ந்த விளையாட்டு அல்ல, வாழ்க்கை ஆராய்ச்சி. புனைவு விளையாட்டை இத்தனை கடும் உழைப்பில் வருசக்கணக்காக நான் செய்யவேண்டியதில்லை.
இந்த உள்ளுணர்வின் விஷயம் மிகமிக அபூர்வமாக வாழ்க்கையின் சாராம்சமான சில இடங்களில் நமக்கெல்லாம் நிகழ்கிறது. எப்படி என்பதுதான் என் கேள்வி. அதைத்தான் அந்த மன ஊசலாட்டம் வழியாகச் சொல்லி, ஊகித்து, விளக்க முடியுமா என்று பார்க்கிறென்.
அதிலும் ஒரு கூரிய விஷயம் உள்ளது. விதுரர் அந்த அவையில் சிறிது நேரம் மௌனமாக இருக்கிறார். ஒலியின்மையை உணர்கிறார். அது ஒரு ஆழ்நிலை. மேலே மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தாலும் ஆழத்தில் அது அடங்கும். தியானம் கொள்ளும். அப்படி சற்று நேரம் இருந்தமையால்தான் அந்த உள்ளுணர்வு அவருக்கு வருகிறது
அது நிகழ்வதில் நம்பிக்கை- அவநம்பிக்கை- மீண்டும் நம்பிக்கை என்று மனம் ஊசலாடுகிறது. அதைத்தான் பக்கம் பக்கமாக எழுதியிருந்தேன். அந்த மனநிலையை வாசகன் தன் மனநிலையாக கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறேன்
இதெல்லாம்தான் நான் வாசகன் ஊகிக்கவும், உய்த்துணரவும் விரும்பும் விஷயங்கள். வாழ்க்கையிலும் இதெல்லாம் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.
ஜெ