இனிய ஜெயம்,
ஒரு ஒற்றன் தனது சொல்லில் எப்படி இருக்கவேண்டும் என்பது கடந்த இரண்டு அத்யாங்களில் நன்கு துலங்குகிறது. ஒரு மனிதனின் உடல் மொழியை துல்லியமாக விவரிப்பதன் வழியே , அவன் அகத்தில், புறத்தால் அவன் அலைக்கழியும் நிலையை, கேட்பவர் முழுமையாக யூகித்து அறியும் வண்ணம் ஒற்றர்கள் உரைக்கிறார்கள்.
குறிப்பாக இன்று திருதுறாச்ற்றர் அறைக்கு செல்லும் கைடபர் நிலை உரைக்கப்படும் விதம்.
ஒலியின்மையின் எடையை விதுரர் உணரும் கணம், உண்மையில் தலையில் பாரம் ஏறியது போல முதுகு துவண்டு பிரம்மை தட்டியது. தரையில் வீழும் திரைச் சீலை ஒளி, அங்கிருந்து வனம் குறித்த நினைவு, மனதில் பறவைகள் ஒலி என இன்று விதுரரின் அகம், அதன் நிலை மிக மிக துல்லியமாக விவரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. திருதா பாண்டவர்களின் கடிதம் கண்டு மனம் பூரிக்கையில், விதுரரின் விழிகள் ஒளி வீழும் சாளரத்தில் நிலைப்பது, வாசிப்பனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது.
இன்றைய அத்யாத்தின் உச்ச காட்சி அனுபவம் இது. இங்கே கச்சிதமாக வந்து விழுந்திருக்கிறது சண்முகவேல் அவர்களின் ஓவியம். இனிய ஜெயம் இந்த முறை,[அல்லது மீண்டும் ஒரு முறை] உங்கள் காட்சி விவரிப்பை, சண்முகவேல் தன் தூரிகையால் முந்தி விட்டார்.
தருமனின் கடித வரிகளை ஒரு பிரகடனம் போல இரு முறை வாசித்தேன். ஆதவன் தனது பொற்கிரணத்தின் ஒரு கீற்றை காட்டிவிட்டான். சொல்லால் பெருந்தன்மையால் அனைத்தையும், கடந்துவிட்டான், இணைத்து விட்டான் ,வென்று விட்டான்.
துரியன் அண்ணன் அல்லவா தர்மன். அவனால் வேறு எப்படி இருக்கமுடியும் ?
கடலூர் சீனு