ஜெ,
பிராயகையின் உச்சம் என்பது திரௌபதியை காளியாகவே காட்டியிருப்பதுதான். ஆனால் நேரடியாகச் சொல்லவும் இல்லை. வாசக மனதில் அப்படி ஒரு நினைப்பு வருவதுபோல எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் முக்கியமானது. அவள் ஆரம்பத்தில் ஒரு சின்னப்பெண்ணாக வரும்போது சக்கரவர்த்தினியின் குணங்கள் கொண்டவளாக காட்டப்பட்டிருக்கிறாள்.
ஆனால் அடுத்து வரும்போது அவள் நேரடியாகவே உதிரபலி வாங்கும் கொற்றவையின் இடத்தில் இருந்து காட்டப்படுகிறாள். ஐந்து தேவிகளையும் அவள் வணங்கும் காட்சியும் கேசினி குலத்தின் கடவுளின் கோயிலில் ஐந்தாக கூந்தலை பகிர்ந்து அதிலே ரதத்தை பூசிக்கொள்வதும் அவளை கொற்ரவையாக காட்டுகின்றன. வரவிருக்கும் கதைக்கு சரியான தொடக்கம்
ஆகவேதான் அவளை நீங்கள் பேசவேவிடவில்லை. அவள் கொஞ்சமாவது பேசுவது மாயையிடம். அது அவளுடைய ஆல்டர் ஈகோ. அதிலும் மாயைதான் அதிகம் பேசுகிறாள். கடைசியில் வரும் சுயம்வரக்காட்சிகளிலே அவளை நீங்கள் பேசவே விடவில்லை. பேசாமலேயே அவள் இருப்பது கோயிலில் தெய்வச்சிலை இருப்பதைப்போலவே இருக்கிறது. அதுதான் அவளுக்கு அழுத்ததை அளிக்கிறது
அவளை பேசவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடைசியில் அவள் ஐந்துபேரை ஏற்றுக்கொண்ட காட்சிகளை எல்லாம் பேச்சே இல்லாமல் அமைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அது அவளுடைய மர்மத்தை அதிகமாக ஆக்குகிறது. அவள் மிகச் சதாரணமாக இருக்கிறாள் என்பதே ஒரு பெரிய விஷயம்
சரவணன்