Thursday, January 29, 2015

மழைத்தவளை



அன்புள்ள ஜெமோ

மழைப்பாடலையே நான் இப்போதுதான் முடித்தேன். மழைப்பாடலில் நாயகன் என்று எனக்கு விதுரனைத்தான் சொல்லத் தோன்றியது. விதுரனுக்கும் சத்யவதிக்குமான உரையாடலை பலமுறை வாசித்து ரசித்தேன். சிலசமயம் முதிய பெண்கள் பேரன்களுடன் அப்படிக் கொஞ்சுவதைக் கண்டிருக்கிறேன்

அதேபோல மழைப்பாடல். மழை வந்துகொண்டே இருக்கிறது. முதலில் மழை பெய்யத்தொடங்குகிறது. பிறகு மழைக்கான ஏக்கம். அப்படியே மழைப்பிரளயம். கடைசியில் மழையில் போய் நாவல் முடிகிறது. எல்லாவகையிலும் கச்சிதமான முழுமையான ஒரு நாவல் என்று தோன்றியது. அதன் கட்டமைப்பைப்பற்றி எண்ணி வியந்தேன். மழையை விதுரன் ஏங்குகிறான். விதுரன் தான் மழையை ஏங்கும் அந்தத் தவளை

மழைப்பாடலில் விதுரனுக்கும் அவன் மனைவிக்குமான உறவும் அற்புதமானது. அவள் அவன் அன்பை உணரும் இடம். அவன் அவள் படுத்த இடத்தில் படுப்பது. அற்புதமான ஒரு சினிமாவின் காட்சி போல தோன்றியது

விதுரன் என்ற மழைத்தவளையின் ஒலி நாவல் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. நாவலில் உள்ள எல்லா சமபவங்களையும் பெரிய கண்களுடன் அவன் பார்த்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

கணேஷ் பொன்னம்பலம்