ஆசிரியருக்கு,.
இந்த intuition, instinct , reflex action போன்றவை நாம் உணர்வது ,அறிவது அல்ல. அவைகளை வகுத்து பகுத்து விரித்து உரைத்து விடவும் முடியாது, இவைகளை பிரித்து வித்தியாசப் படுத்தி பொருள் காண்பதும் சாத்தியமல்ல.
ஒன்றை மட்டும் சொல்ல முடியும் நாம் அறிவதை அறியச் செய்பவர் ஒரு நடிப்புடன் கட்டுப்படுத்தி திரித்து அறியச் செய்து விட முடியும். ஆனால் நாம் உணர்வது உன்றை அவ்வாறு செய்ய முடியாது. பிரயாகை 89-90 ம் நமது கட்டுப் பாட்டில் இல்லாத நாம் உணர்வதை மட்டுமே கொண்டு அறிகிற அனுபவம்.
திருதுராஷ்டிரன் கௌரவர்களை கைது செய்ய ஆவன செய்தாலும் உண்மையில் கௌரவர்கள் தவறு செய்ய வில்லை என எப்படியாவது ஒரு செய்தி வராதா என உள்ளூர இச்சையுடன் இருக்கிரான். அவனுக்குத் தேவையானது அவனுக்கு சமாதானமாகும் வகையில் காண்பிக்கப் படும் ஒரு உண்மையின் நிழலாட்டம். அதை நம்பவும் கொண்டாடவும் முழுவிசையுடன் தயாராகவே இருக்கிறான். விதுரனும் இதை உணர்கிறான்.
விதுரனும் தர்மனும் பொய்யுரைத்தாலும், அது நண்மைக்கே என்றாலும் அது இன்றைய கொடி முனையில் அமர்ந்த குருவியாக அவர்கள் உரைத்த அப்பொய் அவர்களை சுற்றிக் கொண்டே இருக்கும். அதே குருவியின் சிறகடிப்பை திருதுராஷ்டிரனும் உணரக் கூடும். நண்மைக்கே என்றாலும் பொய்மை பொய்மையே.
இன்று குண்டாசி-பீமன் வழியாக நாம் உணர்வது ஆழ்மனதிற்கும் அதனடியில் உள்ளவைக்கும் அது வெளிப்படும் முறையும் அதை அறியும் முறையும். செவி மூலம் சொல்வழியாக கருத்தை அறியலாம், காணல் மூலம் முக அசைவுகள் வழியாக மனம் அறியலாம் , ஆனால்ஆழ்மனம் உணர்ந்துள்ள உண்மையின் உள்ளக் கிடக்கையை அது உணர்ந்து அதிரும் உடலை அதைத் தொடும் உடல் மூலம் மட்டுமே உணர முடியும், ஸ்பரிசம் விழியிலும் மொழியிலும் மேலானது திரிக்க முடியாதது தூயது.
மனதின் ஆழத்தில் நெளியும் உருவற்ற பிம்பங்களை தொட்டுக் கடத்தியிருக்கிறது பிரயகையின் கடந்த இரு நாட்கள்.
கிருஷ்ணன்.