Wednesday, January 21, 2015

திருமண மந்திரம்



ஜெ

பாஞ்சாலி சுயம்வரத்தில் [பிரயாகை’ – 91]] திருமண மந்திரங்களை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறீர்கள். பலர் கவனித்திருக்க மாட்டார்க்ள். நான் அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர்களின் இந்துமதம் எங்கே போகிறது என்ற புத்தகத்திலேதான் இந்த மந்திரத்தை வாசித்தேன். அதற்கு முன்பு பல திருமணங்களிலே கேட்டாலும் கவனித்திருக்கவில்லை.

முதலில் வாசித்தபோது என்ன இது என்றுதான் முதலிலே தோன்றியது. அந்த புத்தகத்தை முழுசாக வாசித்தபோது தாத்தாச்சாரியார் ஒரு அட்டு என்ற எண்ணம் வந்தது. அவருக்கு கற்பனையோ கவித்துவமோ மரபை புரிந்துகொள்ளும் மனமோ இல்லை. இந்த அளவுக்குத்தான் அவரது மனம் என்று தெரிந்தது. ஆனால் அது ஒரு பழைமையான குலச்சடங்கு என்றும் அக்காலத்தைய நம்பிக்கையைத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்றும் எண்ணினேன்.

ஆகவேதான் இங்கே இந்த பாடலை வாசித்ததுமே படபடப்பாக இருந்தது. முதலில் நிமித்திகன் குலச்சடங்கின் பகுதியாக சொல்வது அந்த வேதமந்திரத்தின் அர்த்ததை. அதன்பின் வேதமந்திரம் வருகிறது. இதிலே ஒரு சிறப்பான தலைகீழ தனம் உள்ளது பாஞ்சாலர்களைப்போன்ற தொன்மையான பழங்குடிகள் தொன்மையான பைசாசிக பாசையிலே சொன்னதைத்தான் வேதம் வேதமந்திரமாக சொல்லியிருக்கலாம். இரண்டும் ஒரே விஷயம்தான்

ஸோம: ப்ரதமோ விவிதே
 கந்தர்வோ விவித உத்தர: 
த்ருத்யோ அகநிஷடே பதி
துரீயஸ்தே மனுஷ்யஜா!

என்ற வேதமந்திரம்

இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள். 
இசைநிறைந்த கனவுகளுக்கு நீர் இவளைக் கையளித்தது.
 பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள்.
 நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும். 
அம்மூன்றும் ஆன கணவனால் இவள் நிறைவடைவாளாக! 

என்று மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சோமன் மயக்கமளிக்கும் நீர். அதன்பின் இசைத்தெய்வமான கந்தர்வன். அதன்பின்னர் அகநெருப்பாகிய அக்கினி. கடைசியாக கணவன். கன்னித்தன்மையை இதைவிடக் கவித்துவகாமச் சொல்ல முடியுமா என்ன?

“உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ 
நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச 
ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!”

என்ற மந்திரத்தை

பிரபஞ்சவடிவம் கொண்ட காதலனே 
இவள் படுக்கையை விட்டு அகல்க. 
இனி இவள் மானுடக்காதலனுடன் அமைக 

என்று மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். விஸ்வவசு என்பதை பிரபஞ்சவடிவம் கொண்ட காதலன் என தமிழில் வாசிப்பதே சிலிர்ப்பூட்டுகிறது

தொன்மையான மனங்கள். அவர்களுக்கு தர்க்கமே தெரியவில்லை. நேரடியாகவே கவிதைக்குள் போய்விட்டார்கள்


அரவிந்தன்