ஜெ
வெண்முரசின் முக்கியமான அழகு என்பதே அது படகுகளை வர்ணிப்பதுதான் என்று தோன்றிவிட்டது. நதிகளின் அலைகளையும் கடல்களையும் அதில் செல்லும் விதவிதமான படகுகளையும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது இந்த நாவல்கள். எத்தனை படகுத்துறைகள். முதலில் படகுத்துறையைக் கண்டது சால்வனை சந்திப்ப்தற்காக அமபை போகும் இடத்தில்தான். மிக நுணுக்கமான சித்திரம். கங்கைக்குள் நிறைய பெரிய மரங்களை நிறுத்தி அதன்மேல் துறையை எழுப்பியிருந்தார்கள். அது ஆயிரங்காலட்டையின் கால் போல இருந்தது. நீர் உள்லே அலையடித்து அந்த தூண்களில் மோதிக்கொண்டிருந்தது
அங்கே ஆரம்பித்து உவமைகள் வர்ண்னைகள் வந்துகொண்டே இருந்தன. எதுவுமே திரும்ப வரவில்லை.படகின் முனையில் அம்பை இருப்பது அகல் விளக்கில் சுடர் இருப்பது போல. படகு பாய் சுருக்குவது கொக்கு சிறகு குவிப்பது போல. மீன்கூட்டம் போல துறையை அணைந்தன படகுகள். பெரிய பன்றியின் மடியில் பால்குடிக்கும் பன்றிக்கூட்டிகள் போல சிறியபடகுகள்.
வண்ணக்கடலில் பெரிய கடல்துறைமுகங்கள் வந்தன. முதல் நாவலிலேயே பீஷ்மர் தேவபால புரத்தை பார்க்கும் பெரிய சித்திரம் வந்துவிட்டது. அதன்பிறகு ஒரு பாரததரிசனமாகவே வந்தது. எவ்வளவோ துறைமுகங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. உவமைகள் திரும்ப வருகின்றதா என்று நான் பென்சிலை வைத்து மார்க் செய்துகொண்டே வந்தேன். ஆச்சரியம்தான். இவ்வளவு சொன்னபிறகும் கூட பாய்களைப்பற்றியும் படகுகளைப்பற்றியும் சொல்ல உங்களிடம் இருக்கிறது
இன்னும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. பிரியமுள்ள ஜெ, படகுகளைப்பற்றி மட்டும் சொல்லிக்கொண்டே இருங்கள். எவ்வளவு சொல்லமுடிகிறது என்றுதான் பார்ப்போமே
செல்வன்