Sunday, January 25, 2015

பிரயாகை-85-புன்னகைக்கடியில்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்-என்கின்றார் ஓளவையார்.

கிந்தூரம் வில்லைத்தொட அனைவரும் அஞ்சிவிட்டார்கள். போட்டிக்கு வாவென்று இல்லாத வாய்கொண்டு சொல்லாத சொல்லால் அழைத்துக்கொண்டு இருக்கிறது கிந்தூரம். அந்த வில் கர்ணனை வாவென்று அழைத்ததா? 

அந்த வில் தன்னை அழைப்பதற்காக காத்திருக்கிறான் கர்ணன். அந்த வில் அவனை அழைக்கவில்லை.

ஷத்திரியர் அவையோ கர்ணனை பார்த்து அமைதிக்காக்கின்றது. திரௌபதிக்கும், கர்ணனுக்கும் கந்தர்வகணத்தில் கந்தர்வ மணம் முடிந்துவிட்டது என்று சொன்ன துரியோதனன்கூட எழுந்து சென்று வெற்றிப்பெறு என்று சொல்லவில்லை. துச்சாதனன்,சகுனி, கணிகர் யாரும் அவனை  எழுந்துப்போ என்று சொல்லவில்லை அந்த முகக்குறிப்பைக்கூட தரவில்லை.

பெண்ணின் தந்தை துருபதன், பெண்ணின் சகோதர்கள் யாவரும் கர்ணனைப்பார்க்காமல் இருக்கு சித்தத்தை இறுக்கி உடலை இயல்பாக வைத்துக்கொண்டு உள்ளார்கள். பிருஷதி கர்ணன் வந்துவிடுவானோ என்று பதறிக்கொண்டு இருக்கிறாள். கர்ணன் வந்தது நெஞ்சில் கைவைத்துவிட்டாள். 

திரௌபதி அவன்மீது இருந்த காதல் கொஞ்சமும் இல்லாமல் அந்த காதல்தடம் கடல்அலையில் கழுவியதுபோல் வெட்டவெளியில் எழுந்திய ஓவியம்போல் இருந்த இடம் சுட்ட முடியாமல் ஆகிவிட்டது. திரௌபதியும் கர்ணனை அழைக்கவில்லை. அவன் எழவேண்டும் என்றுசூட நினைக்கவில்லை. கர்ணன் பார்வையில் அவள் துயில்வதுபோல் ஆகிவிட்டாள்.

அப்படி என்றால் கர்ணன் அங்கு யாருக்குமே தேவை இல்லை. யாருமே அவனை மதிக்கவில்லை. அழைப்புக்காக காத்திருந்த கர்ணனை பின் எழுந்து செல்லவைத்தது எது?. கனவில் விழி மூடி இருந்தவன் கழுத்தை எது திருப்பியது?. எது எழுந்துப்போக வைத்தது? ஏன் அவன் தவம் கலைந்தது? 

தவத்தில் இருப்பவன் தவன் கலைந்து மோகத்தில் விழுந்த கணம் அது. மோகத்தில் விளைந்த காமம்அது. காமத்தில் கொள்ளும் வீரம்அது. அவன் அந்த திசையிலேயே சென்று இருக்கலாம். ஏன் அர்ஜுனனைப்பார்த்தான்? அவன் இதழில் ஏன் புன்னகையைப்பார்த்தான்? ஏன் கண்ணனைப்பார்த்தான்? கண்ணன் இதழில் புன்னகையைப்பார்த்தான்?

அர்ஜுனன் புன்னகை காட்டியது குந்தியின் முகமாக இருக்கலாம். கண்ணன் புன்னகை காட்டியது மதியாதவர் தலைவாசலில் நிற்பவனே என்று குருவின் பாதத்தைக் காட்டி இருக்கலாம். இரண்டுமே அவனுக்கு வலியை உண்டாக்குபவை.

புன்னகைக்கவேண்டிய திரௌபதியின் இதழ் உலர்ந்து சுருங்கிய மென்மலர்போல் இருந்தன. மூன்று வாய்களின் முரணான உதடுகள் கர்ணன் இதயத்தில் வலியை அன்றி எதை ஏற்படுத்தும்.

காதலால் காமம், காமத்தால் மோகம், மோகத்தால் விருப்பு, விருப்பால் செயல், செயலில் புலன் விலகள், புலன்விலகளால் சினம், சினத்தால் தோல்வி. தோல்வியில் ஏளனம்.

மானிட மனம் நாம் தோற்றுவிட்டோம் என்பதில் வருந்துவதில்லை. மற்றவன் தோற்றுவிட்டான் என்பதில் மகிழ்கின்றது. தோல்வியின் மூலம் அவனும் நம்மில் ஒருவன். நம்மில் ஒருவனாக இருந்தாலும் நாம் ஷத்ரியன் அவன் சூதன் என்று அவனை கீழ் இறக்கிப்பார்க்கப்படுகின்றது.

யார் வெற்றிப்பெற்றார்கள் என்பதைவிட யார் தோற்கடிப்படவேண்டும் என்பதுதான் மானிடர்களின் அகம் போடும் நாடகம்.

நாம் அடிமையாகின்றோம் என்பதை விட பக்கத்துநாட்டு மன்னன் தோற்கவேண்டும் என்ற எண்ணம்தானே வெள்ளையர்களை பாரத மண்ணில் கால்ஊன்றவைத்தது.  ஒட்டுமொத்த ஷத்ரியமன்னர்களுக்கும் திரௌபதி தோற்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் இந்த போட்டியில் கர்ணன் வெல்லமுடியும். சூதன் தோற்கவேண்டும் என்ற எண்ணம்தான் அனைவர் மனதிலும் உள்ளது.

பாரி மன்னனை மூவேந்தரும் வஞ்சித்துக்கொன்றதுபோல கர்ணன் திரௌபதியை வென்று இருந்தாள் கொல்லப்பட்டு இருப்பான். நட்பைப்கூட இழந்து இருப்பான். துரியோதன்போன்றவர்கள் மேல் இருக்கும் நண்பராகத்தான் இருக்கமுடியும். கீழிருக்கும் நண்பராக இருக்கமுடியாது. அப்படி இருந்தால் அவன் பீமனுடன் இன்றும் நண்பனாக இருந்திருப்பான். தன் உயிரை கரடியிடம்இருந்து மீட்டவன் என்பதால்தான் அவன் பீமனையே வெறுக்கின்றான். கர்ணனின் தோல்விக்குபின்னால் நட்புமட்டுமாவது வாழும் என்பதுதான் உண்மை. கர்ணனுக்கு துரியன் ஒருவனாவது இருக்கிறான்.

கர்ணன் தோல்விக்கு பிறகுதான் கண்ணன் புன்னகை சொன்னது இதுதான் என்பதை அறிந்து இருப்பான்.

கர்ணன் கண்ட அர்ஜுனன் புன்னகை மண்டை உடைந்து சாகச்சொல்கிறது, கர்ணன் கண்ட கண்ணன் புன்னகை இறுதியில்  அன்னையின் கனிவென குளிர்கின்றது.

கண்ணன் புன்னகை கர்ணனிடம் சொல்வது தாயிக்காக வாழ்வென்று சொல்கின்றதோ?

அர்ஜுனன் புன்னகை, கண்ணன் புன்னகை, கிந்தூரத்தை வசப்படுத்தி கர்ணன் ஒவ்வொரு புன்னகையுடன் கிளிகளை அடித்து வெல்வது என்று புன்னகையால் ஆன இந்த பிரயாகை-85. கர்ணன் வாழ்வில் புன்னகைக்கடியில் உள்ள கண்ணீரையே காட்டுகின்றது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.