Thursday, January 22, 2015

திரௌபதி என்னும் பேரன்னைகிருஷ்ணன் அந்த கேசினிக் கிளியை அடிக்காமல் விட்டதும், அதை அடிக்க அர்ஜுனன் தயங்கியதும், கர்ணன் தோற்றதும் நாம் விவாதித்து அறிய வேண்டிய இடங்கள். நம் குழுமத்திலும் சரி, வெண்முரசு விவாத தளத்திலும் சரி திரௌபதியின் மனநிலையைப் பற்றி எழுதிவர்கள் அவளை அதிகாரத்துக்காக கர்ணனைத் துறந்ததாகவே எழுதியிருக்கிறார்கள். அவள் கண்ணனை விரும்பியதாகக் கருதவும் இடமிருக்கிறது. ஆனால் வெண்முரசு என்ன சொல்கிறது? திரௌபதி அதிகார வெறி பிடித்தவளா? ஆசைக்காக காதலைத் துறந்த சந்தர்ப்பவாதியா? (விட்டால் வசந்த சேனை, வட்டமிடும் வல்லூறு என்று வசனம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்)

எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. திரௌபதியின் அக ஊசலாட்டங்கள் மிக விரிவாகவே அன்னை விழி பகுதியில் வருகின்றன. அவள் ஓர் எளிய பருவப் பெண்ணாக காதல் கொண்டது கர்ணனிடம் தான்.. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவள் சாதாரணப் பெண் அல்லவே. அவளின் முடிவு பல்லாயிரம் மக்களின், தேசங்களின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போவது. அன்றிருந்த அரசியல் சமநிலையை அரசு சூழ்தலில் வல்லவளான அவளை விட யாருக்குத் தெளிவாக விளங்கியிருக்க முடியும்? அவளைத் திருமணம் செய்யப் போகிறவனுக்கு அனைத்து ஷத்ரியர்களின் பகையும் கிடைக்கும் என்பதும் அவளுக்கு தெரியும். ஆக அவளால் எளிய பெண்களைப் போல முடிவினை எடுக்க முடியாது. 

அவள் கர்ணனை நிராகரித்ததற்கான காரணத்தை என் புரிதலை இக்கடிதத்தில் எழுதியிருக்கிறேன். சுருக்கமாக கர்ணன் ஷத்ரியன் இல்லை என்பதும், அவனைத் திருமணம் செய்தால் அது நிச்சயம் அவனுக்கு தீமையை மட்டுமே அளிக்கும் என்பதும் தான் முக்கியமான காரணங்கள். ஆனால் கர்ணனை இழப்பது என்பது அவளைப் பொருத்தவரை இறப்புக்குச் சமமானது. அந்த இழப்பை எவ்வாறேனும் சரியாக்க முடியுமா என்பதை அறியவே அவள் மாயையுடனான தொடர் உரையாடலை நிகழ்த்துகிறாள். இறுதியில் தான் யார் என்பதையும், தன் கடமை என்னவென்பதையும் கேசினி அன்னையின் ஆலயத்தில் கண்டடைகிறாள். 

அந்த ஆலயம் வரும் வரை யாரைத் தேர்வு செய்வது என்று குழம்பிக்கொண்டே வருகிறாள். அந்த ஆலயம் வரும் வரை அவளில் தான் ஓர் பேரழகியான சக்கரவர்த்தினி என்ற தன்னுணர்வும் இருந்தது. எல்லா ஆலயங்களிலும் அவளை இளவரசியாகவே நடத்தினர். ஆனால் மூதன்னையான கேசினியின் ஆலயத்தில் இருக்கும் மூன்று மூதன்னையரும் அவளை ஓர் மணம் கொள்ளப் போகும் கன்னியாக,தன் கன்னிமையைக் காக்கும் வனத் தெய்வத்துக்கு விடை கொடுக்க வேண்டுகின்ற ஓர் இளம் பெண்ணாக மட்டுமே காண்கின்றனர். அந்த தெய்வத்துக்கு குருதிப் பலி கொடுத்து மலை ஏற்றுகின்றனர்.

கேசினி அன்னை வளத்துக்கான தெய்வம். அவளின் ஆலயத்திலேயே முளைவிட்ட பயிர்களையே அன்னை முன் படைத்திருக்கிறார்கள். அங்கே கூறப்படும் பாஞ்சாலத்தின் தோற்றத்தைப் பற்றிய கதையில் வரும் உக்ரசண்டிகை அன்னையையே தன் கூந்தலின் இரு இழைகளால் காட்டிய ஐந்து புதல்வர்களின் அன்னை தானே கேசினித் தாய். அந்த கதையில் அவள் தன்னைக் கண்டுகொள்கிறாள். தன்னால் பாரதத்தின் அரசியலிலும், குலங்களிலும் ஒரு பெரிய கலைத்தடுக்கல் (shuffling) நடைபெறப் போகிறது என்பதையும், அதற்கு பெருங்குருதி சிந்தப்போகிறது என்பதையும் அவள் அறிந்து கொள்கிறாள். 

இதில் மிகப் பெரிய குறியீடாக வருவது திரௌபதியின் கேசம். கேசம் என்பது நீண்ட வால். அதை திரௌபதியின் அறிவாகக் கொள்ளலாம். ஆம், வாலறிவு. திரௌபதி பிறந்ததிலிருந்தே நிறைந்த அறிவுடன், பெரிய பெண்ணாகத் தான் இருந்ததாக அறிகிறோம். அவள் தான் பாஞ்சாலத்தை பிறந்ததிலிருந்தே ஆண்டும் வருகிறாள். கர்ணனைப் பார்த்த போது அவளிடம் சிறு சஞ்சலம். அதைத் தொடர்ந்து அவள் சந்திப்பவர்களும் அவளை மேலும் மேலும் அலைகழிக்கிரார்கள். இங்கே கேசினி அன்னை ஆலயத்தில் அவள் தன் பிறப்பின் நோக்கத்தைக் கண்டுகொள்கிறாள். உணர்வால் அல்ல, அறிவால் முடிவெடுக்க வேண்டியவள் அவள். அதை உணர்ந்ததால் தான் ஆலயத்திலிருந்து வரும் போது அவள் அழுகிறாள். தன் இழப்பை உணர்கிறாள். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவை அவள் விதியிடம் விட்டு விடுகிறாள். அதனால் தான் அணங்கு கொண்டவள் போல் அழுத்தமாக யாரையும் ஏறிட்டு நோக்காமல் தன்னேற்பில் இருக்கிறாள். நடப்பது போல் நடக்கட்டும் என்று.

இந்த அத்தியாயங்களில் ஆறு தெய்வங்கள் வருகின்றன. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி, ராதை மற்றும் உக்ர சண்டிகை. ஊருக்கு வெளியே சதுப்பில் உறையும் உக்ர சண்டிகை தான் ஐந்து தெய்வங்களாக ஊருக்குள் உறைகிறது. உண்மையில் இந்த ஆறு தெய்வங்களும் உறையும் பேரன்னை தான் திரௌபதி. அவளின் கேசத்தை, ஐந்து பிரிகளாகப் பிரித்து அவள் கட்டி வைத்திருக்கும் வரையில் அவள் மானிடப் பெண்ணாக பெரும் சக்கரவர்த்தினியாக முடிவுகளை எடுத்து வருகிறாள். எப்போது அவள் கேசத்தை அவிழ்த்து ஒற்றை ஒழுக்காக ஆக்குகிறார்களோ அன்று அவளில் உறையும் அந்த உக்ர சண்டிகை எழுந்து வருகிறாள். அவள் மானிடருக்குரிய தெய்வம் அல்ல. அவளின் நியாயங்களும் மானிடருக்குரியவை அல்ல. அனைவருக்கும் உரிய பெரு நியாயத்தை அவள் நிகழ்த்தப் போகிறாள்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்

குழுமத்தில் விவாதிப்பதற்கு எழுதப்பட்டது. தொடர்புக்கு....