Thursday, January 22, 2015

பிரயாகை-83 வெறுமையின் சுவை.




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஏன் அழுகின்றோம்? அல்லது ஏன் அழமாட்டேன் என்கின்றோம்? என்று நினைக்கும்போது அர்த்தமற்ற கேள்வி என்று தள்ளிவிட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனாலும் அந்த கேள்விக்குள் ஒரு அர்த்தம் இருப்பதாகவேப்படுகின்றது. அதனால் அந்த கேள்வி வந்துக்கொண்டே இருக்கிறது.

அழுது முடித்து, ஏன் அழுதோம் என்று நினைத்தால் “ஒன்றுமில்லை”. ஐயோ.. இப்ப அழவேண்டுமே, அழுகை வரமாட்டேன் என்கின்றதே என்று நினைத்தாலும் “சரிபோ.. ஒன்றுமில்லை”.  அந்த ஒன்றும் இல்லை என்பதில் உள்ள சுவையை அறிவதற்கு கண்ணீர் தேவைப்படுகின்றது. அது வெறுமையின் சுவை.

மண்ணோடு மண்ணாக கலந்து உருண்டு விளையாண்ட ஊரைப்பிரிந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வேறு ஊருக்கு சென்ற அன்று வந்த கண்ணீர் நண்பர்களுக்காக என்று நினைத்தேன். பிரிந்து செல்லச்செல்ல நண்பர்கள் இல்லை அந்த மண்ணென்று நினைத்தேன். ஒராண்டு கழித்து அந்த ஊருக்கு சென்று நண்பர்களைப்பார்த்தேன். விளையாண்ட இடங்களைப்பார்த்தேன் பிரிந்தேன். மீண்டும் அதேபோல் நெஞ்சடைத்து அழுகை வந்தால் நன்று என்று நினைத்தேன். சிரிப்புதான் வந்தது. அது நானேஇல்லை. இந்த நான் வேறு.  அப்படி என்றால் நான் அன்று அழுதது வேறு யாருக்காவும் இல்லை என்னை பிரிந்ததற்காகத்தான் அழுதேனா?

எதை எதையோ பிரிகின்றோம் என்று அழுதுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் நாம் பிரிவதில்லை. ஒவ்வொன்றிலிருந்தும் நம்மைநாம் பிரிந்துப்போகின்றோம். பிரித்துப்போகின்றோம். நம்மை நாம் பிரிந்துப்போவதுதான் பிரித்துப்போவதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது.

துருபதன் தனது மகள் திரௌபதியின் சுயம்வர நிகழ்வில் ஆற்றும் உரையில்(பிரயாகை-82) திரௌபதியை எனக்கும் என்மைந்தருக்கும் அன்னையாகி என்குடியை நிறைப்பவள் என்கின்றான். ஒரு பேரரசன், பாரதவர்ஷத்தின் அத்தனை மன்னர்களை விருந்துக்கு அழைக்கும் தகுதிப்படைத்தவன் தனது அரண்மனையை குடியென்கின்றான். அந்த சொல்லின்வழியாக அனைத்தையும் இழந்து திரௌபதி என்னும் அன்னையின் முன் குழந்தை என்றாகி மட்டும் அடையாளம் படுகின்றான். திரௌபதியை வளர்ச்சியை நோக்கிதான் அழைத்துச்செல்கிறான் ஆனாலும் அந்த பிரிவில் அவன் தன்னை இழந்துப்போகின்றான். திரௌபதி என்னும் குழந்தையாகிய அன்னையின் மைந்தன் என்பதை இழந்து இனி என்றும் ஒரு தந்தையாக மட்டும் நிற்கும் நிலையை அடையப்போகின்றான். பெண்ணைப்பெற்ற தந்தை எல்லாம் அடையப்போகும் அந்த கணம்தான் என்றாலும் அந்த கணம் அவர்கள் அவர்கள் மட்டும் அடையும் கணம். மகளில்இருந்து தன்னை பிரித்துக்கொள்ளும் தருணம். தன்னைபிரித்து மகளை மட்டும் அனுப்பும் தருணம். 

//எனக்கும் என் மைந்தருக்கும் அன்னையாகி என் குடியைநிறைப்பவள்.” துருபதன் அச்சொற்களில் சற்றே அகம் விம்மிநிறுத்தினார்//

நாளை திரௌபதி வாயும் வயிறுமாகி வந்து அன்னையாக நிற்கும்போது துருபதன் சிரித்துக்கொள்வான். அவள் அன்னையாகி நின்றபோதும் தன்னை குழந்தையாக்கிய அன்னையான அந்த திரௌபதி அல்ல இவள் என்று உணர்ந்துக்கொள்வான்.  வாழ்க்கையின் ஒவ்வாரு கணமும் இப்படி ஒன்று ஒன்றை பிரித்து பிரிந்து திரும்பி வராத ஒன்றாக நகர்ந்துப்போய்கொண்டே இருக்கிறது.  சில கணங்கள் நமது சிந்தையை அழுத்தி இனி திரும்பி வராது என்று அகத்தை விம்ம வைக்கின்றது.

துருபதன் இந்த இடத்தில் நேரடியாக வெளிப்படும் வெறுமையை பிருஷதி  ஒவ்வொரு பொருளில் தேடி கடைசியாக அறிகின்றாள். கண்ணீர்விட்டு கண்டடைகிறாள். துருபதன்போல் அவள் திரௌதியை அன்னை என்று ஒன்றைமையத்தில் வைத்து கொண்டாடவில்லை. பொன்னில்,மணியில், பொருளில், கையில் என்று திரௌபதியை விரி்த்துவைத்து கொண்டாடியவள். அவள் அகம் ஒரு விம்மளுடன் எப்படி நிறுத்திக்கொள்ளமுடியும். கண்ணீர்விட்டு கரைத்தாலும் அவள் திரௌபதியை பிரிந்துவிடமுடியுமா? பிருஷதியின் மனநிலையை இன்று துருபதன் மனநிலையில் வைத்துப்பார்க்கும்போதுதான் அவள் ஏன் திரௌபதி விஷயத்தில் ஒவ்வொருவரிடமும் இப்படி நடந்துக்கொள்கின்றாள் என்பது தெரிகின்றது.

ஒவ்வொரு முறையும் திரௌதியிடம் தோற்றுப்போகும்போதும் பிருஷதி தனது தோல்வியாலேயே கடுகடு என்று இருக்கிறாள் என்றுநினைத்தேன். திரௌபதி பிறந்தநாளில் இருந்தே இவளை இழந்துப்போகவேண்டியநாள் ஒன்று உள்ளது என்பதை அறிந்தே அப்படி இருக்கிறாள் என்பதை இன்று கண்டேன். ஒருமுறையாவது தனது மகள் தனக்கு ஆறுதல்தருவாள் என்று ஏங்குகின்றாள். தனக்கு தன்மகள் ஆறுதல்தந்து மகளின் குழந்தையாக ஆகும் ஒரு தருணம் வாய்க்கும் என்று இன்றுகூட ஏங்கும் பிருஷதி அனைத்து தாய்களின் அகம். கடைசியிலும் அவள் திரௌபதியிடம் தோற்கிறாள்.

//அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒருகணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படிசொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சுவிட்டாள்//

துருபதன் அகம்விம்முவதற்கும், பிருஷதி விடும் பெருமூச்சுக்கும் எத்தனை பெரும் பொருத்தம். அன்பு என்னதான் வீம்புபிடித்தாலும் கடைசியில் சுயபலிக்கொண்டுவிடுகின்றது.

//எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள்!அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன்கைகளை எப்போது பற்றப்போகிறேன்?” என்றாள்பொருளற்றசொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தைஅவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல்இவை என்னுடையவை அல்ல அல்லவா?//

பிருஷதியின் அகம் வழியாக அம்மாபிள்ளையா? அப்பாபிள்ளையா? என்ற விளையாட்டைப்பார்க்கையில். அம்மாவை தோற்கடித்தாலும் பெண்பிள்ளைகள் எல்லாம் அம்மாபிள்ளைதானோ? அதை அறிந்தேதான் பெண்பிள்ளைகள் எல்லாம் அம்மாவிடம் கண்ணாமூச்சிவிளையாடுகின்றார்களோ

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.