Monday, January 26, 2015

தெய்வமும் பெண்ணும்




ஜெ

பாஞ்சாலியின் குணச்சித்திரத்தை நிறையச் சொன்னதுபோலவும் இருக்கிறது .சும்மா கோடிட்டுக்காட்டியிருப்பது போலவும் இருக்கிறது. அவள் பிறப்பதற்கான முகாந்திரம் பிரயாகையிலே விரிவாக இருக்கிறது. அதன்பிறகு அவளை சிறுமியாகப்பார்க்கையில் அவள் சமநிலையும் அழகும் கொண்ட பிறவிச்சக்கரவர்த்தினி என்று சொல்லப்படுகிறது

அதன்பின்னர் வெவ்வேறு சிறிய நிகழ்ச்சிகள்தான் வருகின்றன. பாஞ்சாலி நெருப்பின்மகள் என்று வியாசர் சொல்லியிருந்ததை  ஒரு பெரிய படிமம் மாதிரி வளர்த்துக்கொண்டே செல்கிறீர்கள். கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண் என்று பாரதி பாஞ்சாலியின் பிறப்பைப்பற்றி பேசியிருக்கிறார். இந்த கனல்மகள் என்ற படிமம் அவளுடைய குணச்சித்திரத்துக்கு ஒரு பெரிய மாயைமூடியை அளித்துவிடுகிறது

இனிமேல் வரும் பல சிக்கல்களில் அவள் எப்படி எதிர்வினை செய்யப்போகிறாள் என்பதை ஒட்டியே அவளுடைய குணச்சித்திரம் முழுமையடையும் என்று நினைக்கிறேன். அவள் நடைமுறைவாழ்க்கையிலே எப்படி இருக்கிறாள் என்று காட்டவேண்டும். இதுவரை அவளை ஒரு மித் ஆகவே காட்டியிருக்கிறீர்கள்

ஆனால் அப்படி நடைமுறை வாழ்க்கையாகக் காட்டும்போது அவளுடைய மித் அழிந்தும்போய்விடக்கூடாது. அவள் கோயில்சிலைமாதிரியும் இருக்கவேண்டும். பெரிய சவால்தான்

கிருஷ்ணகுமார் எம்