Friday, January 23, 2015

எரியாட்டு




தீயை அணையாமல் காக்கும் பொறுப்பு திரௌபதிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே அவள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறாள். கடுங்காற்றால் அது அணையவிருக்கும் சமயத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அழித்து அவ்வெரியைப் பாதுகாக்கிறாள். அவ்வாறு செய்யவேண்டும் என்ற எண்ணம் அந்தநொடிவரை அவளுக்கு வரவில்லை. நொடிப்பொழுதில் அம்முடிவை எடுத்து மாயையை அச்சத்தில் ஆழ்த்துகிறாள். அச்செய்கையின்பின் கடுங்காற்றே எரியைப் பெருக்கிக்கொள்கிறது. தீ அணையாமலிருக்க ஆடையவிழ்ப்பை நிகழ்த்தவும் அவள் தயங்க‌வில்லை.

மீதமுள்ள கதை அனைத்தும், திரௌபதி இனி நிகழ்த்தவிருப்பவை அனைத்தும், பிரயாகையின் இறுதி அத்தியாயத்திலேயே குறிப்புணர்த்தப்பட்டுவிட்டனவா? இப்போது சிலகணங்களில் நிகழ்ந்தவைதான் விரிந்த காலத்தில் பின்பு நிகழவுள்ளதா? ஏதோ சிலகணங்களில் நெருப்பை நிலைநிறுத்தத்தான் இத்தனை பெரிய அழிவா? இவ்வழிவு நிகழ்ந்தபின் மாயையின் கண்களில் தெரியும் துருவன் எவ்வளவு பொருள்கொண்டதாக ஆகிறது? நொடிக்குநொடி நிலைமாறும் பிரபஞ்சத்தில் நிலைபேற்றை அறியச்செய்யும் ஒருவன்! அதை வாசிக்கும்போது சிலிர்த்தது.

உக்ரசண்டிகை ஆலயத்தில் திரௌபதி நிகழ்த்தும் பூஜை மழைப்பாடலில் கலிக்கு நிகழ்ந்த பூஜையை நினைவுபடுத்தியது. கலிவழிபாட்டின் பிறகே கலியின் வடிவமான துரியனைக் காந்தாரி சூல்கொள்கிறாள். இதோ இப்போது திரௌபதி உக்ரசண்டிகையாக, குருதிகொள் கொற்றவையாக‌ அஸ்தினபுரி நுழையவிருக்கிறாள். அவள் நிகழ்த்தும் எரியாட்டை அடுத்தடுத்த நூல்களில் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.