Monday, January 19, 2015

துர்வாசர் முதல் துர்வாசர் வரை

[திரௌபதியும் பீமனும் யட்சகானத்தில்]

அன்புள்ள ஜெமோ

பிரயாகை மழைபபடலை நிறையவகையிலே ஒத்திருக்கிறது. நகரம் காடு என்று கதை இரண்டு வேறுவேறு நிலங்கள் வழியாகச் செல்கிறது. வெவ்வேறு வாழ்க்கைகளைக் காட்டுகிறது. மிகவிரிவான சித்தரிப்பின் வழியாக நாம் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்களைக் கடந்து செல்கிறோம். அற்புதமான சித்திரங்கள்.

ஆரம்பத்திலேயே இது உளவியல் நாவல் என்று ஆரம்பித்துக்காட்டிவிட்டீர்கள். துருவனின் கதையே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. அதில் உள்ள அந்த துக்கமும் தனிமையும் நாவலில் வேறுவேறு வகையில் வந்துகொண்டே இருக்கிறது. வர ஆரம்பித்து மூன்றுமாதம் ஆகவில்லை. அதற்குள் கதை எங்கெங்கோ போய் என்னென்னவோ ஆகிவிட்டது.

நீண்ட விவாதங்களை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தமிழிலே எந்த நாவலைப்பற்றியும் இந்த அளவுக்குப் பேசப்பட்டதில்லை என்று தோன்றுகிறது. அவ்வளவு விரிவான விவாதங்கள். எவ்வளவு பேசியிருக்கிறார்கள். நாவலே நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது விவாதங்களையும் சேர்க்கும்போது ஒரு மழை முடிந்தது போல இல்லை. மழைக்காலமே முடிந்தது போல இருக்கிறது.

இப்போது ஒவ்வொரு கதாபாத்திரமாக நினைத்து நினைத்துப்பர்க்கிறேன். இந்த நாவல் ஆரம்பித்தது துருபதனை அர்ஜுனன் ஜெயித்து அவமானப்படுத்தும் இடத்தில். அங்கே துருபதன் சென்று சந்திப்பது துர்வாசமுனிவரை. அவர் சொல்லிய ஆலோசனையை அவன் கருத்தில்கொள்லவில்லை. அங்கே ஆரம்பிக்கிறது. துருபதன் அடைந்த துக்கம் இப்போதும் மனசிலே நிற்கிறது. அவன் இப்படி மாறி வெற்றிக்களிப்புடன் சிரித்துக்கொண்டு நிற்கிறான்

திருமணத்தை நடத்திவைக்கவும் அதே துர்வாசர் வருகிறார். எல்லாம் சுழன்று வந்து கச்சிதமாக முடிந்துவிட்டன. இத்தனை வடிவ ஒருமை இயல்பாகவே நடந்திருப்பதை நினைத்து நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.


சித்ரா