இனிய ஜெயம்,
என்ன சொல்ல? கர்ணன் தோற்று வெளி ஏறியவுடன் பிரயாகை முடிந்தது போல ஒரு இனிய துயர். இல்லை இல்லை என மனதின் ஒரு மூலை துடித்துக் கொண்டே இருந்தது. ஓலை வருகைக்கு முன்னான விதுரர் போல காத்திருந்தேன். இதோ தொடர்கிறது பிரயாகையின் பெரும் பயணம்.
சில நாட்கள் நண்பரின் படகில் ஏறி கடலுக்குள் சென்று விடுவேன். படகில் நின்று தூரத்தில் நோக்க, கரையும் நகரமும் கடலில் மிதக்கும் படகுபோல , தள்ளாடித் ததும்பும். கடல் நிலை போலவும், நிலம் நிலையற்றது போலவும் உளமயக்கு கொடுக்கும். மனம் எங்கோ ததும்பி ததும்பி நிலை கொள்ளும். ஒரே சிக்கல் படகில் படபடக்கும் கொடி. தேசியக் கொடி, கட்சிக் கொடி, படகு எந்த கிராமத்தை சேர்ந்தது எனும் அடையாளக் கொடி , மூன்றும் காற்றில் படபடத்து ஒரு கோழிச் சண்டைக்குள் நிற்ப்பது போல தோன்றி மனதின் ஒருமையை சிதைத்து விடும்.
இன்று விதுரர் இன்னும் நெருக்கமாக ஆகிறார். குண்டாசி அவரை தந்தையே என விளிக்கும் உள்ளே எதோ உடைந்தது. ஆம் குண்டாசிக்கு விதுரந்தான் தந்தையாக இருக்க இயலும். முடிவின்றி மன்னிக்கும் தந்தை. திருதா வசம் இல்லாதது. விதுரர் வசம் என்றும் வாழ்வது . திருதா தண்டிக்கும் நீதி கொண்டவர். விதுரர் மன்னிக்கும் கருணை கொண்டவர். ஏற்றுக்கொள்ளாதவர் தண்டிப்பார். புரிந்து கொள்பவரே மன்னிப்பார். ஆம் குண்டாசிக்கு விதுரர்தான் தந்தையாக இருக்க இயலும்.
கோடி மிருகங்கள் கொண்ட மனதில் , தாய் 'தன் குட்டியை' மட்டும் வாசனையால் அறிகிறது. மனிதனும் தன் இயல்பால் அடிப்படயில் மிருகம் தானே. விதுரன் பாண்டவர் ஒவ்வொருவரையும் வாசனையால் அறிவது. பேரழகு. உடல் உடலை அள்ளிப் பற்ற, வாசனையால் ஆன்மா ஆன்மாவை அள்ளிப் பற்ற...மனம் பொங்க வைக்கும் தருணம். விழி அற்ற திருதா வுக்கு இது எத்தனை பங்கு இருக்கும்?
குண்டாசியை பீமனின் ஆன்மா மன்னித்து விட்டது உடல்? இனிய ஜெயம் நீங்கள் உருவாக்கிய வாழ்க்கைத் தருணங்களில் இணையற்ற ஒன்று என இதையே சொல்வேன்.
பீமன் அன்னம் வழியாகவே புடவியை அறிய அவனது குரு அவனுக்கு கர்ப்பிக்கிறார். எனில் அனைத்தும் மேல், பீமனுக்கு அவன் உடல் இதற்க்கான கருவி. பீமனுக்கு இது ஞானத்தின் அழிவு.
இந்தக் கோபம் கொண்டவனால் கூட அறிய இயலாது. நான்தான் அவனை மன்னித்து விட்டேனே. பின் ஏன் அவனைக் கொன்றேன் என பீமனே பின்னர் திகைக்கலாம்.
அன்றுஸ்தானகர் பீமனைக் கண்டு நகைப்பார்.
கடலூர் சீனு