பிரயாகையின் முடிவைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக பேச்சே இல்லை. திரைப்படம் போல இருக்கிறது. வெறும் காட்சிகள். அதிலும் துர்க்கையும் தோழியும்போல பாஞ்சாலியும் மாயையும் நடந்துசெல்லும் காட்சிகள் . தீயிலே செல்கிறார்கள்.
பாஞ்சாலி என்ற தொன்மத்தை ஒரேசமயம் அவளுடைய தெய்வத்தன்மைக்கும் பங்கம் வராமல் மனித உணர்ச்சிகளும் குறையாமல் தொடங்கிவைத்துவிட்டீர்கள். எப்படி அவள் மேலே செல்வாள் என்று யோசிக்க முடிகிறது
அந்த ஐந்து முக அக்கினியை இந்த ஐந்து கணவர்களும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது ஆர்வம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது
ஆரம்பத்தில் நீங்கள் கோரைப்புல் பற்றி எழுதியதை மீண்டும் போய் வாசித்தேன். அங்கேயே இந்த தீக்கான அஸ்திவாரத்தைப் போட்டுவிட்டீர்கள்.
அதேபோல ஆரம்பத்திலிருந்தே எல்லா கதாபாத்திரங்களும் முழுசாக வந்துவிட்டார்கள். பத்ரர் கருணர் ரிஷபர் எல்லாரும்.
இத்தனை துல்லியமாக திட்டபோட்டு எழுதுகிறீர்கள். ஆனால் அது அவ்வப்போது எழுதப்படுகிறது பின்னாடி போய் திருத்த முடியாது என்பது பெரிய ஆச்சரியம்
ராஜசேகர்
அன்புள்ள ராஜசேகர்
திட்டம்போட்டு எழுதுவதில்லை. இத்தனைபெரிய திட்டத்தை எவரும் போடமுடியாது
ஜெ