Saturday, January 24, 2015

பிரயாகை-84-மனதின் எடை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மனித மனம் ஆழமானது என்பது கற்பிக்பட்டு உள்ளது. அதைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறன். அப்படித்தான் வாழ்க்கையும் இருக்கிறது.

பிரயாகை-84 மனம் ஆழம் என்பதில் இருந்து விலகி மனதின் எடை என்ன? மனம் கனமானதா? கனமற்றதா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. மனதின் படிமமாக வில் அமைந்து உள்ளதால்.

மனம் ஆழம் என்றவர்கள்தான், கல்மனம், மலர்மனம் என்றும் சொல்கின்றார்கள். மென்மையானதை கடினமாக இருக்கும் என்று நினைத்து வலிமையை குவித்து தூக்கும்போது நிலைதடுமாறவேண்டும். கனமானதை கனமற்றது என்று நினைத்து எளிதாக தூக்கநிலைத்தாலும் சமநிலை தடுமாறவேண்டும். மனம் இந்த சமநிலை தடுமாற்றத்தத்தைதான் அனைவருக்கும் தருகின்றது. அது மனதின் ஆழத்தால் ஏற்படுவதில்லை. ஒருவரின் மனதின் எடையை நாம் மாற்றி அறிந்துக்கொள்வதால் எற்படுவது. குளத்தில் படியில்லை என்று நினைத்து கால்விடும்போது படிதடுத்தால் கால்மோதி வலியும், குளத்தில் படியிருக்கு என்று நினைத்து கால்வைக்கும்போது படியில்லாவிட்டால் கால் இழுக்கப்பட்டு பதற்றமும் ஏற்படும். கிந்தூரம் என்னும் வில்லின் முன் அனைவரும் அதைத்தான் அடைகிறார்கள்.

கிந்தூரம் என்னும் வில் திரௌபதியின் மனம். அதை முற்றிலும் வெல்லமுடியாது என்பதை அர்ஜுனன் அறிந்து இருப்பது அழகு. அவன் மட்டும்தான் திரௌபதியின் கண்ணைக் கண்கொண்டு பார்த்தவன். கண் அகத்தின் கதவு. உள்ளே இருப்பதை அதன் மூலமே அறியமுடியும். இலக்கை குறிதவறாமல் பார்க்கும் அர்ஜுனனுக்கு கிடைத்த வாய்ப்பு அது. திரௌபதியை உடல்முழுவதாலும் அறியும் துரியோதன் ஒருபோதும் இலக்கை குறிபார்க்க முடியாது. அவன் குறி சிதறிக்கொண்டே இருக்கும்.  உள்ளத்தால் பார்க்கும் கர்ணன் விழிக்கதவுகள் திறந்தால் மட்டுமே உள்நுழைய முடியும். கதவுகள் சாத்தப்பட்டு தடுக்கப்படும் ஒளியாகிவிடுவான் கர்ணன். தன் முனைப்பு மூலமே இலக்கை அடைந்துவிடலாம் என்று நினைக்கும் கர்ணன் வெற்றிக்கு தன்முனைப்பு மட்டும்போதாது என்பதை அறியாமல் அமர்ந்திருக்கிறான். இலக்கும் இவன் வரவேண்டும் வெல்லவேண்டும் என்று உள்யோகத்தில் இருக்கவேண்டும். சூரியன் வந்தால் விடிந்துவிடும் ஆனால் கதவுகள் திறக்காமல் சூரியன் வந்தாலும் விடையல் இல்லை. கர்ணன் உணரும் காலம்வரும். 

ஜராசந்தனையும், துரியோதனனையும் திரௌபதி ஒரே விதத்தில் நடத்துகின்றாள். இவருமே அவள் தங்களைப்பார்க்கவில்லை என்பதை அறிகின்றார்கள். கிந்தூரம்முன்பு அவர்கள் இருவரின் ஆணவமும் நசுங்குகின்றது. இருவருமே மண்ணை அறைகின்றார்கள். ஜராசந்தன் உடம்பால் அறைகின்றான். துரியோதன் கையால் அறைகின்றான். பெண்ணுக்காக மண்ணுக்காக சினம்கொள்ளும் அகங்கள் மனிதர்கள் உடையது. பொருள்பொதிந்தது. இவர்கள் இருவருக்குமே பீமன்தான் எமன் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். 

திருஷ்டத்தூய்மனன் ஏதோ சொல்ல திரௌபதி புன்னகைத்தாள். அவன் என்ன சொல்லி இருப்பான் என்பது தெரிகின்றது. அவன்தான் வெல்லவேண்டும் என்று அவள் முடிவும் எடுத்துவிட்டாள். இனி அவனை அன்றி அவள் யாரையும் பார்க்கப்போவதில்லை.  அவள் மனமென்னும் கிந்தூரம் அவனுக்காக காத்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இங்கே என்று சுழன்று சுத்தி வந்த அர்ஜுனனும் பீமனும் அந்த வில்லின் சூட்சுமத்தை கண்’டு கொண்டார்கள். அந்த வில்லில் வாழும் மலைத்தெய்வம் திரௌபதியின் மனம் என்று கண்டுக்கொண்டார்கள்.

திரௌபதியின் மனமே யாரையும் தூக்கவும் ஏந்தவும் இடமளிக்கிறது அதனாலேயே அதை வென்றுவிடலாம் என்றும் அனைவரும் நினைக்கிறார்கள். இதில கர்ணன் உச்சம். ஆனால் அது முற்றிலும் வெல்லமுடியாதது என்பதை அர்ஜுனன் மட்டுமே அறிந்து இருக்கிறான். கர்ணன் அறியாத ஒன்று அது. அந்த அறியாமையே அவனுக்கு வலியாகி நிற்கும். 

அவளை வென்றால் கிந்தூரத்தை வெல்லலாம் என்பதை அறிந்த பீமனும், அர்ஜுனனும் என்ன செய்வார்கள் பார்ப்போம்.

துரியோதனனுக்கு இளவரசுப்பட்டம் கட்டும் அன்று அஸ்தினபுரம் வந்த பலராமன் அதை இல்லாமல் செய்தான். இன்று திரௌபதி சுயம்வரத்தில் வணிகர்கள் வாயில் வழியாக வந்த பலராமன் அதை இல்லாமல் செய்வானே? எதையுமே முற்றும் குழப்பும் பலராமன் கொண்டு இங்கு கண்ணன் எதை குழப்பி உள்ளான் என்ற எண்ணதில் அமர்ந்திருக்கும் சகுனியும். கணிகரரும் எப்படி சிரிக்கமுடியும்.
//பலராமர் உரக்க கைநீட்டி கிருஷ்ணனை நோக்கி ஏதோ சொன்னபடிசென்று அவன் அருகே அமர்ந்துகொண்டார்அரசர் அவையில்சகுனியையும் கணிகரையும் தவிர பிறர் அவரை நோக்கி சிரித்தனர்//

கண்ணன் பலராமனை வைத்துதான் எதோ இங்கு செய்வான் என்று நினைக்கின்றேன். சகுனி கணிகர் மௌனம் அதையே சொல்கிறது.

திரௌபதியைக்கண்ட அர்ஜுனன் மனம் பட்டத்து யானை, பெண் சூரியன் என்று காவிய சொற்சுவையில் மூழ்க இந்த தருமன் காவியம் கற்றவன் ஏன் பகடை சூதாடி என்று சொல்கின்றான். இதுதான் காலத்தின் நிமித்தம் என்பதோ? ஊழ் வலியதுதான்.
//தருமன் புன்னகையுடன் “சுயம்வரம்தான் இவ்வுலகில் பெண்ணுக்குஅளிக்கப்படும் உச்சநிலை வாழ்த்துசூதில் ஒரே ஒரு கணத்தில்அனைத்தையும் முடிவுசெய்வதாக பகடை மாறிவிடுகிறதுஅப்போதுஅதில் ஆயிரம் கரங்களுடன் ஊழின் பெருந்தெய்வம் வந்துகுடியேறுகிறது” என்றான்அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்டாலும்பொருள்கொள்ளாதவனாக திரௌபதியை நோக்கிக்கொண்டிருந்தான்//

கர்ணனும், அர்ஜுனனும் உடலால் மட்டுமல்லாமல் உள்ளத்தாலும் ஒருவரை ஒருவர் பிரதிபளித்து அந்த அந்த கணத்தில் ஒன்றாகவே இருக்க இடையில் இந்த ஜயத்ரதன் அவர்களை ஒத்து நடிப்பதும் ஆச்சர்யப்பட வைத்தது. ஜயத்ரதன் கிந்தூரத்தை எடுக்கும்போது திரௌபதி விழி பாதி சரிந்திருப்பதும் அவனும் திரௌபதியை எந்த அளவுக்கு நெருங்கி இருக்கிறான் என்பதும் தெரிகின்றது. இவனும் திரௌபதி வாழ்வில் அவள் பார்வைக்கு தப்பமுடியாதவன்தான்.

சக்கரவர்ததி ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டு. வாழும் தருமன் ஒரு சக்கரவர்த்தினியை வெல்லும் விழாவில் தம்பி தோற்றுவிடுவானோ என்று எரிச்சல்படுகின்ற இடத்தில் இந்த தருமனை ஆண் என்று எப்படி சொல்லமுடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பே அவனை அன்னை என்று சொன்ன மாயையை திரௌபதியை நினைத்து பெருமைப்படுகின்றேன். அன்னையால் மட்டும்தான் பிள்ளைகள் வென்றதை தான் வென்றதாய் நம்பமுடியும். குந்தியை வணங்கிவிட்டு மணவிழாவுக்கு வந்த தருமன் வானைப்பார்த்தபோதே தான் பாண்டு என்பதை அறிந்தே வருகிறான். அதன் வழியாக அறமாகிய துருவனை நினைத்தே வருகிறான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.