Saturday, January 31, 2015

இடைவெளிகள்



அன்புள்ள ஜெமோ

கதாபாத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் உறவுகளெல்லாம் மிகச்சிக்கலாக ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கின்றன என்று தோன்றுகிறது. முதலில் எல்லாம் தெளிவாக இருக்கிறது. பின்னர் சிந்தனை செய்தால் எல்லாமே சிக்கலாகி கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பகுதி சொல்லாமலேயே விடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவரைப்பற்றி என்ன நினைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிறையபகுதிகள் சொல்லப்படவில்லை. கர்ணன். தருமன் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது சொல்லப்படாமலேயே உள்ளது. ஆகவே விதவிதமாக யோசிக்கவேண்டியிருக்கிறது. இப்படி இருக்குமோ அப்படி ஆகியிருக்குமோ என்றெல்லாம் எண்ணம் போகிறது. வெண்முரசின் பிரச்சினை இதுதான் என்று நினைக்கிறேன்

சபரி


அன்புள்ள சபரி,

நவீன இலக்கியப் படைப்பின் இலக்கணங்களில் முக்கியமானது கொஞ்சம் மட்டுமே சொல்லி பெரும்பகுதியை வாசகன் ஊகிக்கும்படி விட்டுவிடுவதே. இதை நவீன இலக்கியத் திறனாய்வில் subtext என்று சொல்வார்கள். நவீன இலக்கிய படைப்பு அதன் கூறுமுறையிலேயே இடைவெளிகளை உருவாக்கும். இதை gaps என்பார்கள். இதை நான் என் ‘நாவல் கோட்பாடு’ என்ற நூலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 1991ல் வந்த நூல். கிழக்கு பிரசுரமகா மீண்டும் வந்துள்ளது

இந்த ஆழ்பிரதி முழுக்கமுழுக்க வாசகனின் கற்பனையால் நிறைக்கப்படவேண்டியது. நவீன இலக்கியம் அளிக்கும் இலக்கிய அனுபவமென்பதே இதுதான். சொல்லப்பட்டதை தெரிந்துகொள்ளுவது அலல வாசிப்பு. இடைவெளிகளை நிரப்பி நமது இலக்கிய உலகை நாமே உருவாக்கிக்கொள்வதுதான். ஆகவே இடைவெளிகளும் விடுபடல்களும் ஆசிரியனால் நிரப்பித்தரவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். அது உங்கள் கற்பனைக்காக விடப்பட்டிருப்பதுதான்

ஜெ