Sunday, January 25, 2015

அரசுகள் அமைந்த விதம்




அக்கால அரசியல் மற்றும் அரசுகள் அமைந்த விதத்தைப் பற்றி வெண்முரசு மிக விரிவானதோர் சித்திரத்தை அளிக்கிறது. எந்த ஒரு அரசும் குலங்களால் ஆனவையே. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குலத்தலைவர். அவரின் கருத்து அரசின் முக்கிய முடிவுகளைக் கட்டுப்படுத்துகிறது. குலங்கள் இணைந்து தான் பெரிய அரசு உருவாகிறது. உற்பத்தி, சேமிப்பு, உபரி, உபரியால் வரும் வாணிகம், வாணிகத்தினால் வரும் செல்வம், அதற்கான பாதுகாப்பு, நிலையான வாணிகத்துக்கான அரசாங்கம் என்னும் சட்டகத்தில் தான் அக்கால அரசாங்கங்கள் அமைகின்றன. உபரியையும், பாதுகாப்பையும் உறுதிப் படுத்தவே மன்னன் இருக்கிறான். 

ஆனால் மன்னனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் தான் இருக்கிறது. நேரடியாக அல்ல, குடித் தலைவர்கள், குலத் தலைவர்கள் என்னும் அமைப்பு வழியாக. திருதராஷ்டிரர் பட்டமளிப்பின் போது குலத் தலைவர்களின் எதிர்ப்பு மிக முக்கியமான ஓர் தரப்பாகக் கொள்ளப் படுகிறது. உண்மையில் சகுனிக்கு அது கடும் எரிச்சலையும், அதிருப்தியையும் தருகிறது. அவன் வந்திருக்கும் பாலை நில அரசில், அரச குடும்பமே அனைத்து முடிவுகளையும் எடுக்கும். ஏனென்றால் அங்கிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பே உரிமைகளை விடவும் அவசியம். (அங்கும் குலத் தலைவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் உதவுகிறார்கள். ஆனால் அரசன் அவர்களை மீறவும் வழி இருப்பதாக சகுனி நம்புகிறான்.) எனவே தலைவன் சொல்லைத் தட்டாமல் கேட்டாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. 

ஆனால் அஸ்தினாபுரி மற்றும் பாரத அரசுகளின் நிலை சற்று வேறு. இங்கிருக்கும் பெரும்பாலான அரசுகள் உற்பத்தியை மையப் படுத்தியவை. எனவே உழைக்கும் மக்களின் கருத்துக்களை மன்னன் கேட்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆக உற்பத்தியைச் செய்பவர்கள், அதை பண்டமாற்று செய்து வணிகமாக்குபவர்கள், அவர்களைப் பாதுகாப்பவர்கள் என மூன்றடுக்குகள் சமூகத்தில் தானாகவே உருவாகி வருகின்றன. இப்போது இம்மூன்று வகையினரையும் தலைமையேற்று செல்ல வேண்டியவன் அரசன். அந்த அரசர்கள், அரசுகள் நிலையாக இருந்தாக வேண்டிய அவசியம் சமூகத்துக்கு இருந்தது. அதற்கு இந்த சமூக அடுக்குகள் நிலையாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. பெருந்திரளானவர்களை ஒன்றாக்க கருத்தியல் ரீதியான இணைப்பு தேவைப்பட்டது. அதற்கு மதங்கள் உருவாயின. அம்மதங்களை நிலையாக வைத்திருக்கவும், அதற்கான சடங்குகளைச் செய்யவும் வைதீகர்கள் உருவாகி வந்தனர். இப்படித் தான் நால்வருண முறை உருவாகியது. 

வெண்முரசின் காலத்தில் வெவ்வேறு பகுதிகள் இந்த அரசியலமைப்பின் வெவ்வேறு படி நிலைகளில் இருந்தன. பெரும்பாலான யாதவ அரசுகள், குடித் தலைவர்களாலேயே ஆளப் பட்டன. ஆசுர அரசுகளின் நிலையும் அவ்வாறே. இதனிடையே ஏகச்சக்கரபுரி போன்ற எந்த அரசுக்கும் கட்டுப்படாத பகுதிகளும் இருந்து தான் வருகின்றன. பாஞ்சாலம் குலங்களின் கூட்டு எவ்வாறு ஓர் நிலையான அரசினைத் தர இயலும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பிதாமகரின் கங்கர் குலம் வெறும் வீரர்களால் மட்டுமே ஆனதாக இருந்தது. அங்கும் நிலையான அரசு அமைந்த போது நால்வருணங்களாக அவர்கள் பிரிந்து அவையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரே துணுக்குறுவார், முதற்கனலில்.

இப்போதும் துரியோதனனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பதற்கு மக்களிடையே சகுனியின் ஒற்றர்கள் ஏற்படுத்தும் பிளவுகள் எவ்விதத்திலும் இன்றைய செய்தியாளர்கள் ஏற்படுத்தும் பிளவுகளுக்குக் குறைவானதல்ல. உண்மையில் அந்த அத்தியாயத்தில் ஜெ இன்றைய டீக்கடை அரசு சூழ்பவர்களை மிக நேர்த்தியாக வாரியிருப்பார். (உண்மையில் இந்த TCS ஆட்குறைப்பு பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த அத்தியாயம் வேறு நினைவுக்கு வந்து முகத்தில் ஓர் சிரிப்பை தந்து செல்கிறது!!!) அப்பிளவுகள் குலத் தலைவர்களுக்குச் சென்று, அவர்கள் மூலமாக அரசவைக்குச் செல்கிறது.

உண்மையில் பாரதப் போர் என்பது கிருஷ்ணனாலோ, திரௌபதியாலொ சில வருடங்களில் ஏற்பட்டதல்ல. அது மக்களுக்கிடையே அடியில் உருவாகி வந்த பிளவுகளின் பரு வடிவம் தான். அதைத் தான் ஷத்ரிய, யாதவர்களிடையான பிளவாக அஸ்தினபுரியில் வெளிப்படுகிறது. அப்பிளவின் அடிப்படையிலே தான் இந்திரப்பிரஸ்தம் அமைக்கப் படப் போகிறது.  அவ்வகையில் அது இரு இனக் குழுக்களுக்கிடையேயான போராக பரிணாமம் எடுக்கப் போகிறது. திரௌபதியின் அவமானமோ, தர்மனின் தோல்வியோ இத்தகைய பிளவுகளுக்கு ஓர் முகம் தான். ரயிலில் வந்த இளவரசனைக் கொன்றதைக் காரணம் காட்டி துவக்கப் பட்ட உலக யுத்தம் போல, இவையெல்லாம் ஓர் சாக்கு தான்.

இந்த பின்னணியில் பிரயாகையில் வரும் மக்கள் கூட்டத்தின் விவரிப்புகளைப் பார்த்தால் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் மீது இருக்கும் அச்சம் புரியும். அதைத் தான் குந்தியும், பீஷ்மரும், விதுரரும் வெளிப்படுத்துகிறார்கள். 

உண்மையில் மக்கள் அத்தகையவர்களா? இக்கேள்வியை சற்று வேறு விதமாக கேட்போம். உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்களா? நான் அப்படிப்பட்டவனா? இல்லை என்று தைரியமாகக் கூற முடியவில்லை. என் வாழ்வின் அனுபவங்கள் என்று பேசும் போது நிச்சயம் ஏதாவது விதிகளை மீறிய ஓர் நிகழ்வையே முதலில் சுட்டுகிறேன். குறைந்த பட்சம், "55 speed zone ல 75 ல போயிருக்கேன். ஒரு தடவ கூட மாட்டுனதில்லை" என்றோ அல்லது ஏதோ பெரிய இடர்களுக்கு நடுவே சிறப்பாக செயல்பட்டேன் என்றோ தான் முதலில் கூறுகிறேன். நண்பர்கள் சந்தித்துப் பேசும் போது கூட எதிர்மறையான செய்திகளைத் தானே அதிகம் பேசுகிறோம். TCS ஆட்குறைப்பு முதல் உலகம் அழிவது வரை அத்தகைய பேச்சுகள் தானே நம் உரையாடல்களிலே பெரும் நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. 

வெண்முரசில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு பதிவு மக்கள் எவ்வாறேனும் வரலாறில் இடம் பெறத் துடிக்கிறார்கள் என்பது. அதற்காகத் தன வீட்டைக் கூட கொளுத்திக்கொள்வார்கள் என்று கூட ஒரு இடத்தில் வருகிறது. உண்மையில் மக்கள் கூட்டம் என்னும் போது அங்கு மானுடத்தின் கீழ்மையே மேலோங்கும். அதைக் கட்டுக்குள் வைப்பவனே தலைவன். 

அத்தகையதோர் தலைவன் தங்களைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருப்பது மன்னர்களிடையேயான தனி அரசியல். 

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.