Thursday, January 29, 2015

பிரயாகை-91 பொற்காலம்
அன்புள்ள ஜெ வணக்கம்.

எல்லா பெண்களையும் அம்மாவாக நினைக்கும் அகம் அமைந்துவிட்டாள் எவ்வளவு நிறைவாக இருக்கும். ஆனால் எந்த பெண்ணையும் அம்மாவாகவோ, அம்மாவிடத்திலோ வைத்து நினைக்கமுடியாத வயது ஒன்று இருக்கிறது.

காலம் விசித்திரமானது கனவுக்கன்னியை அம்மாவாக நினைக்க வைக்கும் காலத்தையும் உருவாக்குகின்றது. பேத்தி முதல், பாட்டிவரை உள்ள அனைவரையும் அம்மாக நினைக்கவைக்கும் அகக்கனிவையும் தந்துவிடுகின்றது.  அது வருவதற்குள்தான் எத்தனைபாடு. வழுக்கி வழுக்கி அந்த இடத்தில் நிற்கமுடியாமல் நிலைக்கமுடியாமல்போகும் போகும் பெரும் திரள்கூட்டத்தில் யாரோ ஒருவர் அசைவின்றி அங்கு நிற்கின்றார். நீயும் நில் என்று நம்பிக்கை தருகின்றார். வழுக்கினாலும் அவர்களை கண்டவர்கள் அங்கு செல்லவிழைகின்றார்கள். செல்கின்றார்கள். நிற்கின்றார்கள்.  
நிறைவாக என்னதான் என்று எண்ணிப்பார்த்தால் பெண்ணெல்லாம் கடல்போல ஆகி காமம் அலையடிக்கும் தருணத்தில் அதில் முத்துபோல, பவழம்போல அன்னை மின்னிமின்னி செல்கின்றாள். அதுதான்..அதுதான்..அதுதான் எத்தனைபெரிய ஆழமான விரிவான காமத்தை அங்கு கண்டாலும் கற்பனை செய்துக்கொண்டாலும் அதற்கும் அப்பால் பெண் அன்னையாக இருக்கிறாள். அன்னை அவள் வளர்வதோ, தேய்வாதோ பெருகுவதோ சுருங்குவதோ இல்லை.  அன்னைக்கு பாதுகாப்பாக இருக்கும் உடல்தான் வளர்கின்றது தேய்கின்றது பெருக்கின்றது சுருங்’குகின்றது. அந்த உடம்பைத்தான் பெண் என்று நினைத்து திரிந்தகாலம் ஒன்று உண்டு. இதுதான் பெண்ணா? இது பெண் என்றால் அம்மா என்று சொல்கின்றோமே அது எது என்று எண்ணி எண்ணி ஒய்ந்தபோது உங்கள் எழுத்து காட்டிக்கொடுத்தது அம்மா உடம்பல்ல  அந்த உடம்புக்குள் இருக்கும் அகம் என்று. எத்தனையோ பெண்களின் வழியாக அந்த மாறாத அம்மா என்னும் மையம், உலகம் முழுவதற்குமான அம்மா என்ற அந்த உச்சம், அனைவருக்கும் உள் உள்ள அந்த அம்மா என்னும் அழிவின்மை இலக்கியத்தில் கிடைத்தது. 

இந்த நேரத்தில் இலக்கிய கர்த்தாக்கள் அனைவரையும் வணங்குகின்றேன். உங்கள் எழுத்துகள் எத்தனை ஆழத்தில் இறங்கினாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அந்த அம்மாவில் வந்து மையம் கொண்டு அசைவின்மையை அடைவதில் மகிழ்கின்றேன். 

காமம் உடல்பிடித்து இழுக்கும்போதும், காதல் மனம்பிடித்து இழுக்கும்போதும் ஆண்மனம் தேடும் அசைவின்மை அம்மாதான். அந்த அம்மாக்கள் புனிதமானவர்களாக இருந்துக்கொண்டு ஆணையும் புனிதப்படித்திப்போகின்றார்கள். அந்த மையத்தை தெரிந்துக்கொள்ள இலக்கியத்தை ஆடியாக்கின்றீர்கள் ஜெ. இங்கு நான் அம்மா என்று சொல்லும் ஒரு உடம்பு அல்ல. அது அம்மாமட்டும் அகம் மட்டும் அறியும் ஒன்று.

திரௌபதி கொற்றவை ஆலயத்திற்கு வருவதில் ஆரம்பித்து இதோ மணமேடையில் வந்து நின்று  கபாலிகர் மண்டையோட்டு பலியேற்பு கிண்ணத்தில் செங்காந்தள்மலர் காணிக்கையிடும்வரையிலும்  விரிந்துபோகும் பிரயாகை-91வரை, ஒரு பெண் ஆணின் இதயத்தில் என்ன என்னச்செய்வாள் என்பதின் வழியாக சென்று அன்னையாக வந்து நிற்கும் தருணம்வரை சென்றது.

கபாலிகன் மட்டும் இல்லை நானும் “அன்னையே வாழ்க“ என்று வாழ்த்தி வணங்குகின்றேன்.

திரௌபதி என்பவள் ஒரு பெண்ணா இல்லை ஒட்டுமொத்த மானிட பெண்களின் ஒரு மூலவிதை அவளுக்குள் எல்லாம் இருக்கிறது. அவளிடம் இல்லாத எதுவும் பெண்களிடம் இல்லை, பெண்களிடம் இல்லாதது எல்லாம் அவளிடம் இருக்கலாம் அதில் ஒன்று அவள்  தந்தைக்கும் கணவனுக்கும் அன்னையாக இருத்தல். அன்னைக்கும் தோழியாகிய மாயைக்கும் அருகில் இருந்துக்கொண்டு அப்பால் இருத்தல், வெல்வான் கண்ணன் என்று தெரிந்தும் அதற்காக அகம் பதறாமல் தோழிபோல் மடியில் கைபிணைத்து வைத்து இடக்கால் சற்று நெகிழ நீட்டி கனமின்றி இருப்பாள். இது தோழிக்கு உரியநிலை அதை இன்னும் நெருக்கமாக நினைத்தால் அண்ணன் என்ற நிலை. தன் காதல் முழுமைக்கும் உரிய அண்ணன் என்ற நிலை. தனக்கு ஒரு ஆண் பிறந்தால் அந்த அண்ணன்போல் பிறக்கவேண்டும் என்று ஆசைக்கொள்ளும் தங்கைநிலை. அம்மாவயிற்றில் பிறந்து எனக்கு அண்ணனானதால் காதலன் ஆகமுடியாமல் போய்விட்டதே என்றெங்கும் பாசநிலை.  அந்த திரௌபதிதான்  எங்கோ உலக அன்னைகளுக்கும் அப்பால் சென்று அவளுக்குள் இருக்கும் பெண்ணின் பெருதக்கயாதென்று கண்டு அவள் நிற்கின்றாள். அந்த திரௌபதி மானிடப்பெண்கிளின் ஆலமரசிறுவிதை.

அம்மாவைத்தாண்டி  பெண்கள் தெய்வாம்சம் என்று காட்டிப்போகும் உச்சநிலை, இந்த வெண்முரசுதான் எத்தனை மகத்தானது. திரௌபதி காதல் காமம் என்பதை எல்லாம் ஆண்கள் மனதில் விதைத்து தானும் அதில் ஒரு பாத்திரமாக ஆடி அசைந்து அப்பால் சென்று போன நாட்களைப்பார்க்கின்றேன். காதல் காமம் அதெல்லாம் ஒன்றுமே இல்லை இந்த பெருவாழ்வில் என்று காட்டுவதற்காக வந்த பெரும் பிறவி என்று இன்று திரௌபதி தோன்றுகின்றாள். மலையே குழம்பாக உருகி ஓடும் ஒரு காலத்தில் அதில் ஒரு பனித்துளி விழும் நிலை என்னவாக இருக்கும் என்று ஓசித்தால் அதுதான் வாழ்வில் காதலும், காமமும்.  பஞ்சபூதங்களையும் பெண்வடிவாக்கி வைத்ததுபோல் ஆகி நிற்கின்றாள் திரௌபதி. திரௌபதி நீராட்டு அறையில் நீராடும்போது பிருஷதி காணும்போது அவள் நீரின் வடிவம். சுயவரமண்டபத்திற்கும் வரும்போது அவள் வானின் வடிவம். ஆலயத்திற்கு சாமிகும்பிடவரும்போது காற்றின் வடிவம். சுயம்வர மண்டபத்தில் பாண்டவர்கள் யுத்தம் செய்யும்போது குருதியும் மலரிதழும் படிந்த முகத்தோடு இருப்பது மண்ணின் வடிவம் இன்று திரௌபதி அனலின் வடிவம். இந்த ஐந்து வடிவங்களில் உருகொள்ளும் பாஞ்சாலிக்கு பாண்டவர்கள் என்னும் ஐந்து கணவர்கள் அவளுக்குள் காமத்தை எழுப்பும் கணவர்களாக இருக்க முடியாது மாறாக அவளுக்கு தேங்கி இருக்கும் ஐம்பூதங்களின் சொருபத்தை கொண்டாடும் வழிபடும் பூசகர்களாகத்தான் இருக்கமுடியும். அவர்கள் ஐவரும் ஒருவர் கண்டதை இன்னொருவர் காணமுடியாது. திரௌபதியும் ஒருவருக்கு காட்டிய தரிசனத்தை மற்றொருவருக்கு காட்டப்போவது இல்லை. மானிடக்குணங்கள் நிறம்பி பெண்ணாக திரௌபதியை படைத்து மானிடக்குணங்களின் கீழ்மைகள் தொடாத பெரும் வெளியில் கொண்டு திரௌபதியை நிருத்தியவிதத்தில் வெண்முரசை பெருவெளியில் வைத்து உள்ளீர்கள் ஜெ. இன்னும் அழகாக இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படி சொல்லிப்பார்க்கின்றேன். வானத்தில் வரைந்த திரௌபதி ஒவியத்தை மண்ணில் ஆடிவைத்து குனிந்து பார்த்து மண்ணில் உள்ளது என்று காட்டுகின்றீர்கள். 


பிரயாகை-91ல் ஒவ்வொரு குலத்தாரும் ஒவ்வொரு மலர்கிளைகளை பாண்டவர்களுக்கு பரிசளிக்கின்றார்கள். மருதக்கிளையை அர்ஜுனன் வாங்குகின்றான். வேங்கையை பீமன் வாங்குகின்றான். கடம்பை நகுலன் வாங்குகின்றான். செண்பகத்தை சகாதேவன் வாங்குகின்றான். பாலையை தருமன் வாங்குகின்றான். இந்த மலர்கிளைகள்தான் அவர்களின்அகமாக உள்ளது. தருமன் பாலையை வாங்கியதுதான் எத்தனை பொருள் பொதிந்தது. எப்போதும் திரௌபதி அவனுக்கு பலிகொள்ளும் கொற்றவைதான். இதோ இன்று திரௌபதி வைக்கும் நெருப்பில் நரிகள் ஓடுவது ஒரு குறிப்பு அதனோடு பாலை மரம் ஒன்று தழைப்பொசிங்கி தவிப்பது ஒரு குறிப்பு.  பெரும் வெம்மைக்கொண்ட பாலையில் தருமன் என்றும் தனது பசுமையை தாங்கி வாழும் எளியவன் ஆனால் சாகவரம் கொண்ட திடநெஞ்சன். துப்பாக்கி குண்டு பாயும் தருணத்தில் ”ஹே ராம்” என்று இயல்பாய் அதுதான் சொருபம் என்று சொல்லிச்செல்பவன்.  

இவர்கள் அனைவரையும் வெல்லும் மனநிலையில் நின்று மண்டையோட்டில் காந்தள் மலர்வைத்த திரௌபதி சிகரம். காந்தள் மலருக்கு பெண்களின் விரல்கள் உவமையாக்கப்படுகின்றது. அந்த காந்தல்மலரும் அந்த மண்டையோடும் அவள் மாகாளி என்று காட்டுகின்றது. சிவந்த விரல்தாங்கும் மானிட மண்டையோடு, காளி பயங்கரி சூலிலினி மாதங்கி கண்களில் தெரிகின்றாள். மாகாளியாக இருந்தாளும் அவள்தான் இங்கொரு எளிய பெண்குழந்தை. துருபதனையும், பிருஷதியையும் கண்ணீர்விடவைக்கும் சின்னக்குழந்தை.

அன்புள்ள ஜெ பிரயாகை என்னும் அற்புத நூலாகிய வாழ்வுக்குள் மலரவைத்த பொற்காலத்தை எண்ணி மகிழ்கின்றேன். நன்றி பலநூறு.


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.