ஆசிரியருக்கு,
பிரயாகை அற்புதமான அனுபவமாக இருந்தது. அடுத்து இந்திரபிரஸ்த நகரத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றோம்.
திரவுபதி,இடும்பி , கடோதகஜன், ஜராசந்தன், பகன் , அஸ்வத்தாமன் போன்றவர்களை உங்கள் எழுத்தில் சந்திக்கும் பொழுது புதிய பரிணாமங்களை பார்க்க முடிகின்றது. நீங்கள் எல்லா கதாபாத்திரங்களையும் கருப்பு, வெள்ளைக்குள் அடக்காமல் கொண்டு செல்வது அலாதியான அனுபவமாக இருக்கின்றது. நவீன நாவலாக இங்கு பாரதம் இருக்கின்றது. திருமண சடங்குகள், பலி கொடைகள், கோவில் வழிப்பாட்டு முறைகள் போன்றவை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் வருகின்றது. கங்கைகரை மக்கள் வாழ்வின் சடங்குகள் மிக விரிவாக பதியப்பட்டு இருக்கின்றது.
காவிரி கரையில் இருந்து வந்த எனக்கு கங்கை கரை நாகரீகம் பற்றி மிக விஸ்தீரனமாக படிக்க முடிகின்றது.
அன்புடன்
நிர்மல்.
அன்புள்ள நிர்மல்
எனக்கு இந்தியாவின் திருமணச்சடங்குகள் மற்றும் திருவிழாச்சடங்குகளில் ஓர் ஆர்வம் இளமை முதலே உண்டு. விரிவாகபயணம்செய்து பார்த்திருக்கிறேன். அவை நாமறியாத தொன்மையான பழங்குடிவாழ்க்கையின் ஆழத்துடன் நம்மைக் கட்டுகின்றன என்று நினைப்பேன்
வெண்முரசில் அந்த இணைப்பு கவிதைமூலம் நிகழ்ந்துள்ளது
ஜெ