Saturday, January 17, 2015

தோலுரித்தல்




நான் பீமனின் குணாதிசயத்தை வைத்து அதை பார்த்தேன். அந்த தோலுரித்தலை ஒரு படிமமாக எடுத்து கொண்டேன். பிரயாகையில் பீமன் பேசும் பேச்சு கசப்பு நிறைந்தது. எந்த வித அலங்காரங்களும் இல்லாமல் உண்மையை போட்டு உடைப்பது. அதன் படி அவனை நான் புரிந்து கொண்டது, ஒரு மனிதரை காட்டி இவர் மனிதர் என்று சொன்னால் பீமன் அந்த மனிதனின் தோலை சற்றே உரித்து சதையை காட்டி இது தான் மனிதர் நீங்கள் பார்ப்பது வெறும் மேல் பூச்சு என்று சொல்லுவான். இது பிரயாகையின் ஆரம்பத்திலிருந்தே பீமனின் குணாதிசயத்தை விளக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வைத்திருந்தேன்.

இந்த தோலுரித்தல் காட்சி எனக்கு அதையே நினைவு படுத்தியது. பீமன் மனிதர்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவன் போல் தெரிகிறான். மனிதனை உந்தி தள்ளும் விசைகளை அவர்களின் உணர்வுகளையே அவன் நேரடியாக பார்க்கிறான், அது தான் உன்மையான மனிதன் என்கிறான். அவன் பிச்சைக்காரர்களுடன் உணவுன்பதும், காட்டை விரும்புவதும் இதற்காகவே.

ஆனால் உன்மை என்பது அவன் நினைத்தது போல் அல்ல என்று இந்த காட்சி அவனுக்கு சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியதாக தோன்றியது அந்த எருமைக்கு தோலுரிக்கப்படுகையில் அதில் ரத்தம் வருவதில்லை. அந்த சதை பரப்பே அவனுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. காட்டில் அவன் வேட்டையாடி உண்ட உணவுகளை அவன் தோலுரிக்கையில் அதில் ரத்தம் வழிந்திருக்கும். ஏனேனில் ரத்தம் வராமல் தோலுரிப்பது நேர்த்தியாக செய்ய வேண்டிய ஒரு காரியம்.

விளங்கின் தசை பரப்பு என்பது உலகின் உன்மை. அதை பீமன் இது வரை பார்த்ததில்லை. அவன் உன்மை என்று நினைத்து கொண்டு பார்த்ததெல்லாம் ரத்தம் தோய்ந்த விலங்கின் சதை. அந்த ரத்தம் என்பது பீமனின் கசப்பு அவனுளிருக்கும் விஷம். உன்மையை அவன் அவனுடைய கசப்பை சேர்த்து பார்க்கிறான். அதுவே உன்மை என நினைத்து கொள்கிறான். ஆனால் முதல் முறை அந்த உன்மையை அவன் கசப்பில்லாமல் நேரடியாக பார்க்கும் போது அதை அவன் அகம் தாங்குவதில்லை. உன்மை இன்னும் பச்சையானது. உலகியல் பார்வை கொண்ட மனிதர்களுக்கு அது மிகவும் பயங்கரமானது.

இது என்னைடைய தனிப்பட்ட புரிதல். 

ஹரீஷ்

குழும விவாதம்