Saturday, January 17, 2015

ஐவரை மணக்கும் இடம்



அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் நான் மிக முக்கியமாக நினைத்த காட்சி ஐந்து கணவர்களை பாஞ்சாலி எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறாள் என்பது. அதை மிகச்சாதாரணமாகக் கடந்துசென்றுவிட்டீர்கள். அது ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு ஏதாவது காரணம் உண்டா என்ன? அந்த மனநிலைகளை விரிவாகச் சொல்வீர்கள் என்று நினைத்தேன்

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்,

பாஞ்சாலியின் அகம் முழுக்கமுழுக்க முன்னரே வந்துவிட்டது, அவள் ஐந்து ஆலயங்களைத் தொழும் இடத்தி. ஐந்து தேவியர் என்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதே அந்த அகநிலையை விவரிக்கத்தான்

அதற்கான காரணம் அவளை அர்ஜுனன் வென்றதுமே நாவல் உச்சத்தை அடைந்து விடும். அதன் பின் அம்மனநிலைகளைப் பேசமுடியாது. அழகியல் ரீதியாக வீழ்ச்சி இருக்கும் என்பது

ஆகவே  பிறகு சொல்லவேண்டியது என்ன நடந்தது என்பதே. அதைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்

ஐந்துபேரை அவள் மணந்துகொண்டது உங்களுக்கும் எனக்கும் நம் நடுத்தர வர்க்க ஒழுக்கவியலுக்கு பெரிய விஷயங்கள். மகாபாரதத்தில் அது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆகவே அதை எளிதாகக் கடந்துசென்றேன்

அதை மகாபாரதத்தில் முக்கியமாக நினைப்பது மகாபாரதத்துக்கே எதிரான வாசிப்பு. அந்தப்பகுதிகள் முழுக்க பிற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தவர்களின் ஒழுக்க அதிர்ச்சியை தவிர்க்கும்படி

வெண்முரசு அதை  ஓர் அரசியல் நடவடிக்கையாக , குலமுறையகா மட்டுமே பார்க்கிறது.
.
ஜெ