பீமனால் திருதராஷ்டிரரை நிந்திக்கவோ, வெறுக்கவோ, தள்ளி வைக்கவோ முடியாது. தன் மகனுக்கு அவன் அறிமுகப்படுத்தும் முதல் குடும்ப உறுப்பினரே திருதராஷ்டிரர் தான். அவரை மட்டுமல்ல அவனால் கௌரவர்களையும் கூட வெறுக்க முடியாது. அவனுக்கு விதுரருடன் என்றுமே பெரிய ஒட்டுதல் இருந்தது இல்லை. எனவே தான் அவன் கடைசியாக ஆர்வமே இல்லாமல் வருகிறான். ஆனால் வந்தவுடன் அவன் காண்பது குண்டாசியைத் தான். குண்டாசி, அவனுக்கு மிகவும் அணுக்கமான இளையவன் அல்லவா? அவனை துரியோதனன் மற்றும் திருதராஷ்டிரரின் சிறிய வடிவமாக அல்லவா பீமன் அவனைக் கொஞ்சியிருக்கிறான். அவனை இப்படி உடல் அழிந்து பார்க்கையில் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அந்த களேபரத்தில் தான் அவன் விதுரரை கவனிக்கக் கூட இல்லை.
ஆனாலும் ஒரு நுட்பமான விலகலை அவன் உடல் நிகழ்த்தி விட்டது. அதை குண்டாசியும் உணர்ந்து கொண்டுவிட்டான். உண்மையில் குண்டாசி சிரிப்பது அவன் தன் தலை பீமனால் உடையப் போவதைக் குறித்துக் கூட இல்லை. மனிதர்களின் கீழ்மையை நினைத்து, வாழ்வின் நிலையாமையை நினைத்து, தன்னையும், பீமனையும் தங்களைப் போன்ற மற்றவர்களையும் முடிவில்லாமல் மன்னித்துக் கொண்டிருக்க வேண்டியதை நினைத்து. இதையெல்லாம் அவனுக்கு தன் சிரிப்பாலேயே கற்றுக் கொடுத்த ஸ்தானிக முனிவரை நினைத்து.
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்