அன்புள்ள ஜெமோ
ஒரு சிறிய சந்தேகம். மகாபாரதம் முழுக்கவே இமையமலையடிவாரம் முதல் விந்தியமலைச்சாரல் வரை இருந்த நிலப்பரப்பிலே நடக்கிறது. நீங்கள் எழுதியிருக்கும் சித்திரங்களில் கங்கைக்கரைகளும் இமையமலையின் அற்புதமான சரிவுகளும் சமவெளிகளும் மலையிடுக்குகளும் அடர்காடுகளும் வருகின்றன.
இமையமலையைப்பற்றிய சித்திரங்களில் சதசிருங்கம் போகும் வழியில் உள்ள கந்தமாதனமலை மிக அற்புதமாகச் சொல்லப்பட்டது. அது மகாபாரதத்தில் உள்ளதுதானா? சதசிருங்கம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல அர்ஜுனன் பிறந்த மலைச்சரிவும் மகாபாரதத்தில் ஓரளவு சொல்லப்பட்டிருக்கிறது
என்னுடைய கேள்வி இமையத்தின் மலை உச்சிகளை மகாபாரதகாலத்தில் அறிந்திருந்தார்களா? மலைச்சிகரங்களை வர்ணித்திருக்கிறார்களா? அதேபோல ஆழ்கடல் வர்ணனைகள் நிறைய மகாபாரதத்தில் உள்ளனவா?
சரவணன்
அன்புள்ள சரவணன்,
மகாபாரதம் காட்டும் நிலக்காட்சிகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளவே முடியும். தனித்தனியாக நினைவில் எடுக்க்க முடியவில்லை
கைலாசம் தவிர பிற மலைமுடிகளைப்பற்றி மகாபாரதம் சொல்லவில்லை. பனிமலைமுடிகள் என்ற பெயரில்தான் ஹிமாலயம் என்ற பெயரே அமைந்தது. ஹிமம் என்றால் உறைவெண்பனி. கோமுகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. அன்றைய சூழலில் அதுவரைக்கும் சென்றிருப்பதே வியப்புக்குரியதுதான்
அதேபோல பாலைநில வர்ணனைகளும் குறைவாகவே உள்ளன. தார்ப்பாலைவனம் ஒருவேளை இன்றளவு வெறுமையுடன் அன்று இருந்திருக்காது
சமுத்திரவர்ணனைகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை கடலோடிகளின் நோக்கில் துல்லியமாக இல்லை. பெரும்பாலும் செவிவழிச்செய்திகளாக, கரையோர அனுபவங்களாகவே மகாபாரதத்தில் உள்ளன. கடலுக்குள் ஏராளமான பெரும் முதலைகள் உள்ளன என்ற வரிகளை அடிக்கடிக் காணமுடிகிறது
மகாபாரதம் அளிக்கும் அழகிய சித்திரம் இமையத்தை நதிகள் அரித்து உருவாக்கும் canyon களையும் மலைப்பள்ளத்தாக்குகளையும் குறித்ததுதான்
ஜெ