[பௌத்த மரபின் மாரன் சிலை. கிறிஸ்தவ சாத்தானுக்கு முன்வடிவம். எதிர்மறைச் சக்தி.]
வெண்முரசு தினமும் இரு பகுதிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்ற அளவில் சுவாரசியமாய்ச் செல்கிறது. தினமும் வாசித்துவிடுகிறேன்.
நேற்றைய (15.01.2015) பகுதியில் வந்த தருமனின் கடிதத்தை வாசிக்கையில் வந்த உவகை அதிகம். மூன்றுமுறை வாசித்தேன். திருதராஷ்ட்ரரும், விதுரரும் அடைந்த கிளர்ச்சியின், மகிழ்ச்சியின் ஒரு பங்கு எனக்கும் இருந்தது.
இதுதான், இன்றுவந்ததுதான் இந்தத்தொடரின் உச்சமாக இருக்கும் என. ஆனால், ஒவ்வொரு மாதமும் 10 முறை இப்படி எண்ண வைத்துவிடுகிறீர்கள்.
மஹாபாரதத்தை நான் விரும்பும் மொழியில், அதிகபட்ச சிரத்தையுடன் படைப்பூக்கத்தின் உச்சியில் இருக்கும் ஒருவர் எழுதி படிக்க கிடைத்திருப்பதை அதிருஷ்டமாக எண்ணுகிறேன்.
முழுதும் நிறைவாய் முடிக்க என் வாழ்த்துகள். ஏனெனில், எல்லாம் தெரிந்த சான்றோர்களும், மிகப்பெரும் சாதனையாளர்களும் உங்களை உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக உற்சாகத்தைக் குறைக்கும் செயலிலேயே தொடர்ந்து இருக்கிறார்கள். வெண்முரசை ஒரு ஹைப்பர் டெக்ஸ்ட் நாவல் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள், ஆடியோவும் சேர்க்கப்போவதாக சொல்லி இருந்தீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஜெயக்குமார்
அன்புள்ள ஜெயக்குமார்
நன்றி
பிரயாகை இறுதியை நெருங்குகிறது. ஒருவகை வெறுமை எல்லா முழுநாவல்களிலும் இறுதியில் வந்து சேர்கிறது
இம்முயற்சி அல்ல எந்தப் பெருமுயற்சியும் சூழலில் இருந்து எதிர்ப்பை, ஊக்கம் குறைக்கும் சொற்களைத்தான் பெறும். அது நுட்பமான ஒரு மானுட மனநிலை.
மானுட மனம் status quo விரும்பும்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது குலைவுகளை ஏற்பதில்லை. அவ்வெதிர்ப்பே பலவகையில் வெளியாகும்
அதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். ஒரு பெருஞ்செயலை முடிக்கும் விசையை அதைச் செய்பவர் அவ்வெதிர்ப்புகள் வழியாகவெ அடைகிறார். அந்தச் சோதனையுடன் ‘மாரன்’ எப்போதும் வருவான்
ஜெ