அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
இருபது ஆண்டுக்கு முன்பு ஒருமுறை ஒரு வீட்டில் பெண்பார்க்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டேன். யானை இருந்தக்கொட்டாரத்தை யானைப்போனபின்பு பார்த்ததுபோல் இருந்தது பெண்வீடு. கொட்டாரமே அங்கு எவ்வளவு பெரிய யானை இருந்து இருக்கும் என்பதை தெரிவிக்கும். யானை இல்லாதபோதுப் பார்த்தால்தான் அது எவ்வளவு பெரிய கொட்டாரம் என்பதும் தெரியும்.
வீட்டுக்குள் நுழைந்தபோது கண்ட பெயர் பலகை ஒன்று இன்றும் மனதில் ஆடிக்கொண்டே இருக்கிறது. அந்த பெயர் பலகை ஞாபகம் வரும்போது எல்லாம் விழித்திருக்கும்போதே பெரும்கனவில் சிக்கி திகைத்தெழும் உணர்வுக்கு ஆட்படுவேன்.
அது இரண்டு பிரட்டானியா பிஸ்கெட் டின் தகரத்தை இணைத்து உருவாக்கப்பட்ட பெயர் பலகை. கறுப்பு வண்ணம் பூசி வெள்ளை எழுத்தில் “கள்ளுக்கடை எண்-2” என்று எழுதி அடியில் ஊரின் பெயர். அரசுபதிவு எண். உரிமை என்று பெண்ணின் தந்தைப்பெயர் இருந்தது. நான் அந்த பெயர்பலகையைக்கண்ட காலத்திற்கு முன் பத்தாண்டுக்கு முற்பட்டது அந்த பெயர்பலகை. அதை கழுவி துடைத்து ஒரு பூசைப்படம்போல தொங்கவிட்டு இருந்தார்கள். அந்த நாளின் முக்கியம்போல அதுவும் ஒரு முக்கியம் என்பதுபோல அது அங்கு தொங்கிக்கொண்டு இருந்தது. அதற்கு இல்லாத விழியால் அது எல்லோரையும் பார்த்தப்படி.
பெண்பார்க்கும் சடங்கு எல்லாம் என்னைவிட்டுபோய்விட அந்த பலகையிலேயெ நான் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஆனந்தவிகடன் பின் அட்டையில் வெளியிடப்பட்ட 3Dபடம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கி முழு உருவத்தை ஆழத்தில் காட்டுவதுபோல ஒரு குடும்பத்தின் காட்சி ஆழத்தில் துளங்கியது. யானைக்கட்டி வாழ்ந்த தம்பிரான் மாதரி. கள்ளுக்கடை கட்டி வாழ்ந்த தம்பிரான் அவர். அவரும் போய்விட்டார் யானையும் போய்விட்டது, யானைப்போகும்போது உள்ளிருந்த பண்டம் பாத்திரத்தையும் மிதித்து நசுக்கி இழுத்துப்போய்விட்டது. யானையின் முகப்படம் மட்டும் சுவற்றில் தொங்கி இது யானை இருந்த வீடு என்று காட்டிக்கொண்டு இருந்தது. சில்லரை நாணயங்களை எண்ணாமல் தண்ணீர் இறைக்கும் சாலால் அளந்த குடும்பம். அந்த ஒரு பெயர்ப்பலகையின் வழியாக அந்த குடும்பத்தார் பார்த்தது தங்கள் குடும்பத்தின் யானையை. அவர்கள் காட்டியது பெண்பார்க்கவந்தவர்களுக்கு இங்கு இல்லாத யானையை.
அடையாளம்தான் மனிதனுக்கு எத்தனை அவசியமாக இருக்கிறது. அடையாளத்தோடு இருக்கும் மனிதனுக்கு யானை பலம். அதற்குள்தான் எத்தனை பெரிய கதை இருக்கிறது. கதைக்குள்ளுதான் எத்தனை பெரிய வாழ்க்கை இருக்கிறது. நாள்கணக்கில் பேசிச்சொல்ல முடியாத வார்த்தைகளை வாழ்க்கையை உயரத்தைப்பள்ளத்தை அந்த அடையாளங்கள் சொல்லிச்செல்கின்றன. அடையாளங்கள் மௌனத்தின் பாஷையில் கதை எழுதுகின்றன ஆனால் எழுத்துப்பிழையே இல்லாமல் எழுதுகின்றன.
வெண்முரசு-82யைப்படிக்கும்போது அந்த பெயர் பலகை மனதில் வந்து அசைந்து ஆடிப்போனது.
//பலருடைய பெயர்களைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை.அவர்கள் இந்த மணத்தன்னேற்பில் பங்கெடுத்துவெல்லப்போவதுமில்லை. ஆனால் தொன்மையான ஒருஷத்ரியகுலத்தின் இளவரசிக்கான மணநிகழ்வுக்கு அழைக்கப்படுவதேஓர் அடையாளம்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சக்ரவர்த்திகள் போல பட்டாலும்பொன்னாலும் வைரங்களாலும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.ஆயினும் அவர்களின் குல அடையாளம்தான் அவற்றில்அணிவடிவில் வெளிப்பட்டது//
அன்புள் ஜெ. கதாநாயகன் வரும்வரைதான் ஏக்கம் எல்லாம் அவன் வந்தபின்பு வில்லன் எப்பவருவான் என்ற ஆவல்தான் நெஞ்சை இழுக்கும். காலம் போகின்றதே என்று தவிக்கவைக்கும். நம்ம கதைநாயகன் கண்ணன்வந்துவிட்டான். எப்போது இந்த வில்லன் சிசுபாலன் வருவான் என்று காத்திருந்தேன். வந்த உடனேயே ஆரம்பித்தான் பாருங்கள் அங்கு நிற்கின்றீர் ஜெ. சேவகனைத்திட்டி அவன்மீது தாம்பூலம் எறியும் அற்புத அறிமுகம். நாளைக்கான இன்றைய ஒத்திகை. இந்த இடத்தில் கைத்தட்டுகின்றேன். கண்ணனை எங்கு உட்கார வைப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன். ஐயத்ரதன், சிசுபாலனுக்கு இடையில் உட்காரவைத்து உள்ளீர்கள் அதுவே ஷத்ரியர்களை யாதவன் பிரித்து வைத்ததுபோல் உள்ளது. சிசுபாலன் சேவகனிடம் ஏதோ சொல்ல அதற்கு பல அரசர்கள் புன்னகைப்புரிவது. சிசுபாலன் ஷத்ரியர்களின் ஒன்று திரண்ட முகம் என்பது தெரிகிறது. சேவகனை இழிவு செய்வதன் மூலம் அவன் யாதவனை உரசிப்பார்க்கின்றான். இந்த “கரி“க்குள் இருக்கம் நெருப்பை ஊதுகின்றான் சிசுபாலன்.
ஆட்டை வெட்டுபவன் மனதில் ஏதாவது ஒரு மூலையில் அதன் வலியை உணர்வானா? அந்த வலியை உணர்ந்தால் அவன் அதை இன்னும் வேகமாக வெட்டுவான். பகன் அளவுக்கு கருணையே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன் இல்லை. அவன் அளவுக்கு வலி அறிந்தவனும் இல்லை. அவனுக்குள் இருந்த அந்த தாய்மைதான் அவனுக்கு அந்த வலியை அறிய சொல்கின்றது. அந்த வலிஅறிதல்தான் அவனை கொன்று கொண்டே இருக்கவும் செய்தது. பசிதீர உணவும் அந்த வலிதீர ஒரு மரணமும் அவனுக்கு வேண்டி இருந்தது. பசியும் வலியும் உணவும் கொலையும் என்ற உடன்படிக்கை செய்து கொள்ளவைத்தது. வரலாற்றில் இப்படி ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்ட இன்னொரு மனிதன் இருப்பானா? அந்த பகனைக்கொன்றவன் பீமன். பீமனுக்குள் எமனும்,தாய்மையும் பகனைவிட முடிவிலிக்கொண்டு இருக்கிறது. அவன் சகுனியின் வலியறியும் அழகுதான் எத்னை பெரிய தாய்மனம். அதன் எதிர்முனையாகிய எமன் எத்தனை கொடியவன். வெண்முரசியல் இதுமாதரியான இடங்கள் எல்லாம் காவியத்தை தாண்டிய பெருமைக்கொண்டவை ஜெ. அதை வெண்முரசின் பெயரில் உலகுக்கு தரும் அன்னை சரஸ்வதிக்கு எனது வணக்கம்.
//பீமன் சகுனிக்காக இரக்கம் கொண்டான். அவரது வலி அந்தபெருமண்டபத்தின் தரைவழியாகவே அவனைவந்தடைவதுபோலிருந்தது//
எதிரியின் வலியை இத்தனை நுட்பமாக அறியும் பீமன், தங்களுக்கு ஏற்பட்ட வலியை, என்றொ ஒரு ஏற்படபோகும் தனது பிரியசதியின் வலியை எத்தனை அதிநுட்பமாக அறிவான். காலமே பெரும்தாயை படைக்கும்போதே அவள் ஒரு பெரும் காலன் என்றே படைக்கின்றாய்.
அற்புதம்..அற்புதம்..மகாஅற்பு தம் ஜெ.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.