இனிய ஜெயம்,
பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின. எத்தனை இறுக்கமான , செறிவான, கச்சிதமான வார்த்தைகளால் ஆன வர்ணனை.
கர்ணனின் கவசமும் குண்டலங்களும் ஒவ்வொரு தருணமும் காண்போர் அகத்தின் ஒவ்வொரு நிலையை பிரதி பலிப்பது போல, பிரயாகை நெடுகிலும் வரும் துருவ நட்சத்திரம் அதன் நிலை தன்மை , ஒவ்வொருவர் அக நிலையிலும் ஒவ்வொரு அழுத்தம் கொள்கிறது.
மாயை துருவ நட்சத்திரத்தை நோக்கும் கணம், மேலிருந்து துருவ நட்சத்திரமும் கீழே நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் நோக்குவது போல ஒரு உளமயக்கு உருவாகி, அனைத்தும் ஒரு முழுமையில் நின்றது.
காந்தாரி ஹச்தினாபுரி நுழைகையில் குருதி [வண்ண]மழை. திரௌபதி காம்பில்யம் நீங்குகையில் வன நெருப்பு.ஊழித் தீயின் மதலை. வினை முடித்தனள் இனியள்.
கடலூர் சீனு