திரௌபதியின் சுயம்வரத்தின் போது, பாரதத்தின் பெரும் அரசுகள் இரண்டு தான்.
1. அஸ்தினாபுரம்,
2. மகதம்.
அவற்றில் அஸ்தினபுரி அதன் பழம் பெருமையாலும், காந்தாரத்தின் கருவூலத்தினாலும், படைகளாலும், பிதாமகர் மீதான அபிமானத்தினாலும் மட்டுமே அஞ்சப்பட்டது. மகதம் கங்கை வழி வாணிகத்தின் மூலம் பெரும் செல்வத்தின் மூலமும், பிற ஷத்ரியர்களோடான கூட்டுறவின் மூலமும் பலம் பெற்றிருக்கிறது. மேலும் ஜராசந்தன் அதன் தலைமையில் இருக்கிறான். இவற்றினோடு சற்றும் சம்பந்தமே இல்லாமல் துருபதனின் பாஞ்சாலம் ஒரு மிகப் பெரிய படையைச் சேர்க்கத் துவங்கி விட்டது. துரோணர் மூலம் தானடைந்த அவமானம் மற்றும் திரௌபதி பாரதத்தை ஆளப் போகும் சக்கரவர்த்தினி போன்ற சூதர் பாடல்கள் போன்ற திரைகளுக்குள் பாஞ்சாலம் தன்னை வலிமையாக்கிக் கொண்டது. அஸ்வத்தாமனின் சத்ராவதி மீது படையெடுக்காமல் ஷத்ரியர்களின் கூட்டுப் பகையையும் சம்பாதிக்காமல் இருக்கிறார் துருபதன்.
இந்த நிலைமையில் கிருஷ்ணன் இப்போது தான் வளர்ந்து வரும் ஒரு தேசத்தின் அதிபதி. துவாரகையின் செல்வம் இப்போது தான் வரத் துவங்கியிருக்கிறது. அவன் இன்னமும் யாதவன் தான். மேலும் இன்னும் அவனிடம் போதுமான படை பலம் இல்லை. என்ன தான் தனிப் போரில் கிருஷ்ணனும், பலராமனும் வெல்லுவதர்கரியவர்கள் என்றாலும் போர் என்று வரும் போது படைகளின் எண்ணிக்கை வெற்றியைத் தீர்மானித்த காலம் தான் அது. எந்த ஒரு ஷத்ரியனும் அன்றிருந்த யம ஸ்மிருதியின் படி துவாரகையை அழிக்கவே முயன்றிருப்பான். கிருஷ்ணனுக்கு பாதுகாவலாக இருந்தவை இரண்டு.
1. துவாரகையின் அமைவிடம் - இன்றளவிலும் கட்ச் பகுதி வறண்ட நிலம். அத்தகைய பெரும் வறண்ட நிலத்தைக் கடந்து எந்த பெரும் படையும் வர இயலாது. அல்லது அந்த அளவுக்கு அந்த போர் மதிப்புள்ளதாக இருக்காது.
2. அஸ்தினபுரி - என்ன தான் பாண்டவர்களின் இன்மை என்பது அஸ்தினபுரியின் தோழமையில் ஒரு மாற்றைக் குறைத்திருந்தாலும், குந்தி கிருஷ்ணனுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் கீழ்மை கொண்டவரல்ல திருதராஷ்டிரர்.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் கிருஷ்ணன் நிச்சயமாக திரௌபதியைத் திருமணம் செய்து கொள்வது என்பது நிச்சயம் தற்கொலைக்கு ஒப்பானதே. உடனடியாக அனைத்து ஷத்ரியர்களும் திரள்வார்கள். ஆகவே தான் அவன் அந்த ஐந்தாவது கிளியை அடிக்கவில்லை. அது ஒரு விவேகியின் முடிவு. உண்மையில் துரியோதனன், பாண்டவர்கள் அல்லது ஜராசந்தன் இம்மூவரைத் தவிர வேறு யார் வென்றிருந்தாலும் அன்று ரத்த ஆறு தான் ஓடியிருக்கும். ஏனென்றால் ஏற்கனவே திரௌபதியை வெல்பவன் பாரதத்தை ஆளப் போகிறான் என்று சூதர்களால் நிறுவப் பட்டுவிட்டது. எனவே அவளை வெல்பவன் இயற்கையாகவே மற்ற ஷத்ரியர்களிடம் அச்சத்தைத் தோற்றுவிக்கிறான். அச்சத்தால் அனைவரும் ஒன்றானால் நிச்சயம் ஒரு மன்னனால் அனைத்து ஷத்ரியர்களையும் எதிர்த்து வென்றிருக்க முடியாது.
இனி திரௌபதி விஷயத்துக்கு வருவோம். அவள் நிச்சயமாக கிருஷ்ணனை விரும்பவுமில்லை, அவனை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. மேற்கூறிய அனைத்து அரசியல் சமநிலைகளும் அவளுமே புரிந்து தான் வைத்துள்ளாள். அவள் நிச்சயம் தன் சுய விருப்பத்தால் அர்ஜுனனுக்கு மாலை இட முடிவெடுக்கவில்லை. அவள் எடுக்கும் முடிவு முன்பு சல்லியனைத் துறந்து பாண்டுவைத் தேர்ந்தெடுத்த குந்தியின் முடிவுக்குச் சமமானது. மீண்டும் தந்தையும் மகனும் ஏமாறுவது தான் விதியின் உக்கிரமான விளையாட்டு. நல்ல வேளை, திரௌபதியால் இன்னொரு கர்ணன் உருவாகவில்லை!!!
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.