Sunday, January 18, 2015

நதிச்சுழல்



அன்புள்ள ஜெ சார்

பிரயாகையின் கடைசி சில அத்தியாயங்கள் சுழற்றி அடித்து விட்டன. அதை மனதில் கண்டுதான் பிரயாகை என்றே பெயர் வைத்தீர்கள் என நினைக்கிறேன்.  நாவல் பீமன் இடும்பவனத்தில் இருப்பதுவரை சுமுகமாக சென்றுகொண்டிருந்தது. அழகான ஒழுக்கு. அதன்பின் கொஞ்சம் வேகம்பிடித்து கர்ணன் மற்றும் அரண்மனைச்சதிகள் வழியாக மேலே சென்றது. பாஞ்சாலி வந்தபின்னர் அது சென்ற வேகம் அபாரம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன்னென்னவோ ஆழங்கள். அதை வாசிப்பதற்கே ஒருநாள் போதவில்லை. காலையில் ஒருமுறை வாசித்துவிட்டு நண்பர்களிடம் ஒருமுறை பேசிவிட்டு மீண்டும் வாசிப்பேன்.  நிறைய அர்த்தங்களை நண்பர்களிடம் பேசிப்பேசித்தான் அடைந்தேன். மகாபாரதம் தெரிந்த கதைதான். ஆனால் அதில் நீங்கள் ஏற்றும் அர்த்தங்கள் தெரியாதவை.


ஆரம்பத்தில் மகாபாரதக் கதையுடன் ஒப்பிட்டு நானே நிறையக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படிக் கேட்பது அறிவார்ந்து இதை அணுகுவது என்ற எண்ணமும் இருந்தது. அப்படி இல்லை என்பது பிறகுதான் புரிந்தது. இந்த அத்தியாயங்களை கூர்ந்து வாசிப்பதற்கு இது மூலத்தில் எங்கே வருகிறது என்றும் மூலத்தில் இருந்து எப்படி மாறுகிறது என்றும் யோசிப்பதுதான் பெரிய தடை. அப்படியே விட்டுவிட்டு இதில் ஏன் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிரது என்ற அளவிலே வாசித்தேன். அது தந்த அனுபவத்தையே வெண்முரசின் அனுபவம் என்று எடுத்துக்கொண்டேன்.

இப்போதுகூட பலபேர் என்னிடம் மூலத்திலே வேறுமாதிரி இருக்கிறது என்பதுண்டு. மூலத்தில் துருவனின் கதை எப்படி இருந்தது என்று கேட்பேன். அவர்கள் உளறுவார்கள். மூலத்தில் துருவனின் கதை நாலைந்து வரிதான். அதைத்தான் அவ்வளவு சிக்கலான மனநாடகமாக ஆக்கியிருக்கிறீர்கள். அதில் நீதிக்கும் ருசிக்குமான போர் உள்ளது. அந்த விளக்கம் நீங்கள் அளித்தது. அது இரு பெண்களுக்கு இடையே உள்ள மனோதத்துவப்போராக உள்ளது. அதுவும் நீங்கள் அளித்தது. அந்த விளக்கம்தான் இந்நாவலின் சிறப்பே. இது வியாக்கியானம் இல்லை. இலக்கியம்.

ஒவ்வொரு இடத்திலும் வந்துகொண்டிருந்த இந்த இலக்கிய சித்தரிப்பை நான் தொட்டுத்தொட்டு எழுதவேண்டும். முடியாது. மீண்டும் மீண்டும் வாசிக்கத்தான் முடியும் நன்றி

விஜயபாஸ்கர்