திசைதேர்வெள்ளம் முழுக்க முழுக்க வருவது பொருளின்மை என்பதன் அறைதல். எதற்கும் பொருள் இல்லை, எதற்கும் மதிப்பில்லை, அறம், குலம், நெறி, நிலை என அனைத்தும் அவிழ்ந்து விலங்காக நிற்கிறார்கள் ஒவ்வொருவரும். இதன் உச்சமே காருஷர் க்ஷேமதுர்த்தியின் நிலை மாறல்கள். அன்னையின் வஞ்சம் எழுந்தாக வேண்டும் என்ற தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை சொல்லுக்காக அங்கும் இங்கும் அலைகிறார் அவர். தன் கன்னியழகை கவர்ந்தெடுத்து தன் வாழ்வைக் கெடுத்தார்கள் காரூஷர்கள் என பத்ரை அன்னை வஞ்சம் கொண்டிருக்கலாம். எனவே அவர்களை மதிப்பிழக்க வைத்து உயிர் பறிக்க இந்த அணிமாறல்களை நிகழ்த்தியிருக்கலாம் என இந்நிகழ்வுகளைப் பார்க்க இயலும். ஆனால் வெண்முரசின் வாசிப்பு அதை விலக்கி விடுகிறது. இங்கே ஒரு தெய்வம் அதன் நிலைத்தன்மையில் இருந்து பிறழ்ந்துள்ளது. ஆம், தெய்வமே ஆனாலும் வஞ்சம் என்பது நிலைபிறழல் தான். அன்னையின் வஞ்சம் உண்மையில் யாரோடு என்பதில் அன்னைக்கே வரும் குழப்பம்.... அம்பைக்கும் இதுவே. பத்ரை அன்னையின் கவர்தலும், வாழ்வும் அம்பையின் வாழ்வுக்கு எவ்விதத்திலும் குறைவல்ல. ஆனால் வஞ்சம் என்பது இங்கே எவர் மீது? மானுடன் மீதா, மானுடனை அவ்வாறு செய்யத் தூண்டி அதை நியாயப்படுத்திய நெறிகள், வேதங்கள், தெய்வங்கள் மீதா!!! இக்குழப்பமே காரூஷரை அங்குமிங்கும் அலைகழிக்க வைக்கிறது. இதை புரிந்து கொண்டதால் தான் துரியன் அவரை மீண்டும் மீண்டும் ஏற்கிறான். அவன் குருதியின் வாயிலாக உணர்ந்த ஒன்றை இன்னும் காரூஷரும், அன்னையும் அறியவில்லை!!!
இந்த இரு பகுதிகளும் எனக்கு Kill Bill படத்தின் பின்வரும் வசனத்தை நினைவூட்டியது!
“Revenge is never a straight line. It’s a forest, and like a forest it’s easy to lose your way… to get lost… to forget where you came in.”
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்