Sunday, November 11, 2018

புன்னகை


இனிய ஜெயம் 

இன்று பீஷ்மரின் வில் தாழும் தருணம் வந்து நிற்கும் சிகரம் ,எத்தனை கூர்மையான சித்திரத்தின் பகுதிகளால் நிறைந்தது என வாசிக்க வாசிக்க வியப்பு பெருகுகிறது . பாதாள தெய்வங்கள் முதல் வானத்து தேவர்கள் தொடர்ந்து , இவர்களை இவர்களின் அங்கங்களை ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அத்தனை ஆற்றல்களும் , [அத்தனை ஆற்றல்களும் கொண்டு உடல்களை பிழுது நிலத்தில் சொறியப்படும் குருதியை அருந்த எழுந்து வரும் தெய்வங்கள் வேறு இறுதில்  ] ஒன்றை ஒன்று மோதி முயங்கி சுழிக்கின்றன . 

டொர்னாடோ அதன் உச்ச விசையில் உயர்ந்து ,உறைந்து நிற்க அதை ஊடுருவி கடந்து செல்கிறார் பால்கிகர் எனும் தேவன் .  எஞ்சிய இரு சகோதரர்கள் துணை நிற்க களத்தில் ,பார்த்தனை எதிர்கொள்கிறார் பீஷ்மர் . இங்கே இதுவரை பீஷ்மர் எதிர் கொள்ளாத ஒன்றை ,ஆனால் பார்த்தன் ஏற்க்கனவே எதிர்கொண்டு 'கடந்து வந்து 'விட்ட ஒன்றை முதன் முதலாக எதிர்கொண்டு திகைத்து வில்லை நழுவவிடுகிறார் பீஷ்மர் .

காண்டீபம் ,கிராதம் இரண்டிலும் அர்ஜுனன் புற உலகில்  நிகழ்த்தும் பயண சாகசங்களுக்கு இணையாக அவன் அக உலகில் . யோக நிலையில் எதிர்படும் இடர்களை அவன் உடைத்தெறிந்து முன்னேறும் சித்திரங்களும் வரும் .  வித விதமான தோற்றம் கொண்டு முன்னெழுந்து வரும் குந்தியை ,தாண்டுவது துவங்கி ,தனது மைந்தனின் உயிரை ஈடாக தந்து மற்றொரு மைந்தனின் உயிரை காப்பது தொடர்ந்து , அவனை தடுத்தாட்கொள்ள வரும் நேமி நாதர் வரை , அவன் சற்றும் சஞ்சலமே இன்றி உடைத்தெறிந்து கடந்து வந்த பல இடர்கள் பல . அவன் காண்டீபத்தின் வன்மைக்கு துணை நிற்கும் இவற்றில் பலவற்றை ,பீஷ்மர் இப்போதுதான் இந்த போர்க்களத்தில்தான் முதன் முதலாக பார்க்கிறார் .பார்த்தன் கடந்து வந்த ஒவ்வொரு இடரின் அதே இடரின் பிறிதொரு வடிவே பீஷ்மர் முன் வித விதமாக எழுகிறது ,அத்தனை முன்பும் ,அர்ஜுனன் வென்று கடந்து வந்த ஒவ்வொன்றின் முன்பும் பீஷ்மர் தோற்கிறார் .

இரண்டாவது வாய்ப்பு  என ஒன்றிருந்தால் பீஷ்மர் இவற்றை வென்றிருப்பார் .மாறாக இரண்டாவது வாய்ப்பே இனி கிடையாது எனும் களத்தில்தான் பீஷ்மர் முதன் முதலாக இதை சந்திக்கிறார் . அர்ஜுனனுக்கு இதில் பல , அவன் கடந்து வந்தவை என்றாலும் ,முதன் முதலாக இவற்றை காணும் போது அவனும் தோற்றுத்தான் போகிறான் . உதாரணமாக காண்டவ வனம் எரிந்து இறுதியாக தப்பிப் பிழைக்கும் நாக குழந்தையின் சித்திரம் வரும் தருணம் .

நீலன் சொல்கிறான் -. பார்த்தா விடாதே கொல் அதை .  

அர்ஜுனன்- இல்லை கிருஷ்ணா என்னால் இயலாது .

நீலன் -பகையையும் நெருப்பையும் மிஞ்ச விடலாகாது .கொல் கொல் அதை .

அர்ஜுனன் -இல்லை கிருஷ்ணா .....அது குழந்தை .

நீலன்- அது உன் எதிரி .கொல் அதை .

அர்ஜுனன் -இல்லை கிருஷ்ணா ..என் அறம் அதை தடுக்கிறது .

நீலன் புன்னகைத்து -எனில் அவ்வாறே ஆகுக .

அன்று அர்ஜுனனை தடுக்கும் எனது அறம்.அதுவே இன்றும் நீலனை முற்றிலும் சரண் புகுவதில் இருந்து அர்ஜுனனை தடுகிறது . அன்று அர்ஜுனனை தடுத்த , 'எனது அறம்' அதுவே இன்று பீஷ்மரை தடுக்கிறது . 

இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒன்று தெளிவாகிறது ,அர்ஜுனனானால் ,பீஷ்மரால்  எனது அறம் எனும் தளை கைவிடப்பட வேண்டும் என்றால் .அவர்கள் தாங்கள் கொண்டிருக்கும்  சத்ரியர்கள் எனும் தன்னுணர்வு அதை துறக்க வேண்டும் . 

அவர்களால் இயலாத ஒன்றினை இயல்வதன் பொருட்டே ஒருங்கு திரண்ட களம் .  அதற்காக நிகழும் குருதிப் பலியாலான விளையாட்டு . இந்த விளையாட்டை வேடிக்கப் பார்த்து நிற்பதால் விளைந்தது .,அங்கே நிரந்தரம் கொண்டு நிற்கும் நீலனின் புன்னகை .  

கடலூர் சீனு