Wednesday, November 28, 2018

மழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்

மகாபாரதத்தை மீட்டுருவாக்கம் செய்து ஜெயமோகன் எழுதி வரும்வெண்முரசுநாவல் வரிசையில் இரண்டாவது நாவல்மழைப்பாடல்”. இதன் இறுதிப்பகுதி மிக முக்கியமானதாகும். அதுவும் கடைசி நான்கு அத்தியாயங்கள் பெரும் திருப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இப்பகுதியில்தான் பாண்டுவின் மரணம் ஏற்படுகிறது. குந்திதேவியின் மனம் நிலையான ஒரு வாழ்க்கைப் போருக்குத் தயாராகிறது என்று கூடச் சொல்லலாம். மேலும் இப்பகுதியில்தான் தருமனின் ஆளுமை தெரியத் தொடங்குகிறது எனலாம்.
   

இந்தக் கடைசிப் பகுதிக்குமழைவேதம்எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது   மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ஏனெனில் இப்பகுதி முடியும்போது பல்லாயிரம் தவளைகள் மழை வேண்டி வேத மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்குகின்றன. இப்பகுதியின் முதல் அத்தியாயம்மாலை இருளத் தொடங்கியபோதுதான்என்று தொடங்குவது வரப்போகும் துக்கத்தை முன்கூட்டியே உணர்த்துவது போல் இருக்கிறது.              
    

பாண்டுவைக் காணவில்லை என்றபோது குந்தி அவளின் மன ஆழத்தில் வரப்போகும் துக்கத்தை அதாவது பாண்டுவின் மரணத்தை முன்கூட்டியே ஊகித்து உணர்ந்து விட்டாள் என்று தெரிகிறது. அஸ்தினாபுர அரண்மனையில் இருப்பவர்களுக்கு அச்செய்தி புதிதாக அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் பாண்டுவின் உடலையும் உள்ளத்தையும் நன்கு அறிந்த குந்தி பாண்டுவின் மறைவு எப்பொழுதும் நிகழலாம் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். பின்னால் குந்தி பாண்டு கிடப்பதைக் கண்டபோது தன் விருப்பத்தையே உண்மை என உணர்ந்தாள் என்று ஆசிரியர் ஜெ. எழுதுகிறார்.  
       

பாண்டுவைத் தேடப் போகும் முன் குந்திபீமன் எங்கேஎன்றுதான் கேட்கிறாள். காரணம் அவன்தான் காட்டுவழிகளையும் அதன் சூழல்களையும் நன்கு அறிந்தவன். பீமன் வருவதற்காக நெருப்பிடச் சொன்னாள். “பச்சை இலைகளையும் குங்கிலத்தையும் போடுங்கள்; புகை வானில் எழ வேண்டும்என்று கட்டளை இடுகிறாள். இதுதான் அவள் இடும் கடைசிக் கட்டளை என அவளுக்குத் தெரியவில்லை.  ஏனெனில் இதன் பின் தருமன் எல்லாவற்றையும் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டு விடுகிறான்.
    

பீமன் வந்தவுடன் தருமன் குந்தி ஆகியோர் மூவராகப் பாண்டுவைத் தேடிப் போகிறார்கள். சாதகத் தீவை நோக்கிச் சென்ற மேட்டுவழியில் பீமன் திரும்பியதும் தருமனின் கட்டளை பிறக்கிறது. “மந்தா, அங்கே செல்வதற்கு முன் அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டார்களா என்று மோப்பம் கொண்டு பார்என்பது தருமன் கூற்று. அதைக் கேட்ட குந்தி திகைப்புடன் தருமனைப் பார்க்கிறாள். ஐந்து வயதான சிறுவனின் பேச்சுப்போல இல்லை அது. ஜெயமோகன் இந்த இடத்தில் அருமையாகதருமன் குழந்தைப் பருவத்தில் கால் வைக்காமலேயே அதைக் கடந்துவிட்டான்என்று எழுதியிருக்கிறார்.
    

மேலும் அவர்கள் அந்த இடத்தைவிட்டுத் திரும்பி இருந்தால் நாம் அங்கே செல்வது வீண்தானே என்ற தருமனின் முன்யோசனையும் தெரிகிறது. இதிலிருந்து தருமனின் சொல்படிதான் எல்லாமே நடக்கிறது. மறுபக்கம் மலைச்சரிவில் பீமன்அங்கேஎன்று இரு பாதத்தடங்கள் போயிருப்பதைக் காட்டுகிறான். அப்போது குந்திக்கு முன்னால் தருமன், “மந்தா, நில்நீ அங்கே செல்லலாகாது. அன்னை மட்டும் சென்று பார்க்கட்டும்என்று கூறுகிறான்.
    

இங்கும் தருமனின் உள்ளுணர்வும் அறிவும் வேலை செய்கின்றன. அவர்கள் தனியாகச் சென்றுள்ளனர். அங்கு எந்நிலையில் இருக்கிறார்களோ எனவே பீமன் செல்வது முறையன்று அவன் எண்ணுகிறான் போலும். குந்தி திரும்பித் தருமனைப் பார்க்கிறாள். இதுவரை பார்க்காத ஒரு தருமனைப் பார்ப்பது போல உணர்கிறாள். அது மட்டுமன்று. ’”அன்னையே நீஙகள் அங்கே சென்றதும் குரல் கொடுங்கள். மந்தன் வந்து உங்களுக்கு உதவுவான். இந்தப் பாதங்களைத் தொடர்ந்து செல்லுங்கள். ஓசை எழுப்ப வேண்டியதில்லை எனத் தருமன் குந்திக்கே கட்டளை இடுகிறான்.
    

அப்போது குந்தி அவள் வாழ்நாளில் இன்னொருவர் கட்டளையை ஏற்பதை உணர்கிறாள். அத்துடன்இவன் எங்கும் எவரிடமும் ஆணையிடவே பிறந்தவன்என்று எண்ணுகிறாள். தருமனின் ஆளுமையை அவள் உணரத் தொடங்கும் கட்டளை இது.
    

அங்கே பாண்டுவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. குந்திதருமா, மந்தாஎன்றழைக்கிறாள். வந்த பீமன் குழந்தைபோல தந்தைக்கு உடல்நலமில்லையா?” எனக் கேட்கிறான். ஆனால் வந்த தருமனோ பக்குவப்பட்டவன் போலமந்தா விலகுஎனச் சொல்லி பாண்டுவின் முகத்தருகே செவியை வைத்துப் பார்த்து தந்தையார் இறந்து விட்டார் எனச்சொல்கிறான். ஒரு ஐந்து வயதுப்பையன் மிகவும் வளர்ந்து விட்ட வாலிபனாகி விட்ட உணர்வில் இருப்பதை நாம் அறிய முடிகிறது. குந்தியும் அவன், ”குருதியையும் கண்ணீரையும் வெறும் நீரென என்னும் சக்ரவர்த்திஎன்றெண்ணுகிறாள். உண்மைதானே! தருமனின் பக்குவமே அவனைச் சக்ரவர்த்தி என்ற நிலைக்கு உயர்த்துகிறது. எல்லாவற்றையும் முன்கூட்டியே ஊகித்தறியும் குந்தி இதையும் உள்ளுணர்வால் அறிகிறாள்.
      

பாண்டுவுக்கு இறுதிச் சடங்கு சேவையைச் செய்யும் அனைவருக்கும் பொன் நாணயங்கள் வழங்க வேண்டுமென்பதற்காகத் தருமன், குந்தியிடம், “இங்கே பொன் நாணயங்கள் உள்ளனவா?” என்றான். இந்த இடத்தில் குந்தி தருமனின் கண்களைப் பாராமல்ஆம்என்கிறாள். குந்தி ஐந்து இடங்களில் பொன்னைப் புதைத்து வைத்து இருக்கிறாள். அது தருமனுக்குத் தெரியும் என்பதை அவன் தன் கேள்வியிலேயே உணர்த்தி விட்டான். தான் செய்த தவற்றால் குந்திக்குத் தருமன் கண்களைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் பின்னால் எல்லாம் தருமனுக்குத் தானே போய்ச் சேர வேண்டும் அவனிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா? குந்திக்கே ஏதேனும் நேர்ந்துவிட்டால் பொன் வீணாகத்தானே போகும். குந்தியின் குற்றம் அவளுள் குறுகுறுக்கிறது.
      

பாண்டுவின் மரணச் சடங்குகள் தொடங்கும்போதே மாத்ரி ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல் தெரிகிறது. இது ஒரு காட்சி மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எல்லாரும் உட்காரும்போது அனகையும் சேடியரும் குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர். நகுலனையும், சகதேவனையும் மாத்ரியிடம் அவர்கள் தருகின்றனர். அந்த இடத்தில் “அவர்களை மாத்ரியின் மடியில் வைக்கப்போனபோது அவள் கை நீட்டி குந்தியிடம் கொடுக்கும்படி சொன்னாள்” என்று இருக்கும் வரி இனிமேல் அவர்களுக்கு எல்லாம் குந்திதான் என்றும் அவர்களைக் குந்தியிடம் ஒப்படைப்பது போலவும் உணர்த்துகிறது.
    

குந்தி இனி தான் தன்னந்தனியாய் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும் என முடிவு செய்துகொள்கிறாள். இல்லையேல் ”அவளின் மைந்தர்கள் மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்கள் வாழ்க்கைக்குச் சென்று விடுவார்கள்” என்றும் எண்ணுகிறாள். குந்தி எப்படி எப்படியோ நிலைப்பாடுகள் எடுத்தும் பாண்டவர்கள் நாடற்று அலையும் நிலை பின்னால் வருகிறது. குந்தி அந்த முடிவே எடுக்காவிடில் அவர்கள் சேவகர்களாகாகவே ஆகியிருப்பார்களோ என்னும் ஐயம் வருகிறது.
    

திடீரென குந்திக்கு நினைவுகள் பின்னோக்கிப் போகும்போது விதுரனின் மனைவி சுருதையின் நினைவு வருகிறது. ”அவள் மெல்லிய மாநிறமான நீள்முக அழகி” என்றெண்ணும் போதே அவள் உள்ளத்தின் அடியில் இருக்கும் பொறாமை தெரிகிறது. தனக்குக் கிடைக்காத தாம்பத்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற எண்ணமோ தெரியவில்லை. ”குந்தி உமிக்குவியலுக்குள் கனலும் நெருப்பென ஒன்றை தன்னுள் உணர்ந்து உடனே தன்னை விலக்கிக்கொண்டாள்” என்ற எழுத்து நம்மைப் பல வித ஊகங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
    

இங்கே குந்திக்கு ஓர் உவமை கூறப்படுகிறது. அதுதான் எறும்புகள் இழுத்துச் செல்லும் மண்புழு. குந்தி மண்புழுதான். மண்புழு மண்ணை விட்டு அகலாது. அதுபோலக் குந்தி அஸ்தினாபுரம் விட்டு அகலாமனம் கொண்டவள். எறும்புகள் இழுத்துச் செல்வது போல அவளும் இனிப் பலரால் இழுத்துச் செல்லப்படத்தான் போகிறாள்.
    

”நதி மலைச்சரிவிலிறங்குவது போல அங்கே காவிய மொழி ஒளியும் ஓசையும் விரைவும் கொந்தளிப்பும் பெற்றது” என்னும் வரிகள் அற்புதமானவை. கம்பன் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி என்று கூறுவது இங்கு நினைவுக்கு வருகிறது
    

இந்த இடத்தில் குந்தியின் பற்றற்ற, துணிவுள்ள எதையும் எதிர்கொள்ளத் தயாரான மனநிலை நமக்குத் தெரிகிறது. கணவனின் பிணம் கிடக்கிறது. குந்தியோ சந்திரவம்சக் கதையைக் கேட்கிறாள். அது மட்டுமன்று அதில் வரும் ஹஸ்தியின் தோளையும் பீமனின் தோளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
    

மாத்ரி தான் எரிசெயல் புகுவதற்குச் சொல்லும் காரணங்கள் முக்கியமானவை. பாண்டுவின் மரனத்திற்குத் தான் உடன்பட்டதுதானே காரணம் என்ற எண்ணத்தை அவள் சொல்லவில்லை ஆனால் மௌனமாக அதை நினைத்து அவள்  வருந்துகிறாள். போருக்குச் செல்பவரும் மறு உலகு செல்பவரும் வாழ்வில் முழுமையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாண்டு காமத்தை முழுமைசெய்யவில்லை. எனவே தான் அவருடன் சென்றுவிட வேண்டும் என மாத்ரி சொல்வது சரியான காரணம். தான் அங்கு போயாவது அவர் காமத்தை முழுமை அடையச் செய்ய வேண்டும் என அவள் எண்ணுகிறாள்.


”இல்லையேல் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே இருக்கும் வெளியில் ஊழிக்காலம்வரை தவிக்க வேண்டும்” என்கிறாள் மாத்ரி. நிறைவேறாத ஆசைகளுடன் இறப்பவர்கள் அங்கும் செல்லமுடியாமல் இங்கும் நிலையான உடலுடன் வாழமுடியாமல் ஆவியாகப் பேயாக அலைவார்கள் என்று கூறுவார்கள். அந்நிலையிலிருந்து பாண்டுவை மாற்றவே மாத்ரி பாண்டுவுடன் எரிபுகுவதாகச் சொல்லும் காரணம் மறுக்க முடியாது.
      

இப்பகுதியின் மூன்றாம் அத்தியாயத்தில் சுருதை விதுரனிடம் பேசுகின்ற இடத்தில் இருவரின் வார்த்தை விளையாட்டு தெரிகிறது. பெரும்பாலும் அரசியல், இலக்கியம், தொழிற்சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டு தம் நேரத்தை இல்லத்திற்கு வெளியில் கழிப்பவர்கள் மீது சொல்லும் வார்த்தைகளைத் தான் விதுரனைப் பற்றி சுருதை சொல்கிறாள். “தாங்கள் இங்கே இருப்பதே இல்லை. மைந்தர்களைத் தொட்டே பல நாள்களாகின்றன”
    

அதற்கு விதுரன் சொல்லும் மறுமொழி இலக்கியமானது. அவன் ”சில தருணங்களில் பாகன் யானையைச் சுமப்பான் என்று ஒரு பழமொழி உண்டு” என்றான்.
    

அஸ்தினாபுரம்தான் விதுரனைச் சுமக்க வேண்டும். ஆனால் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளால் விதுரன் அதைச் சுமக்க வேண்டியதாயிற்று என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.
    

விதுரன் இல்லாவிடினும் அஸ்தினாபுர அரசு செவ்வனே நடக்கும். பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போகாது என்று கூறுகிறோமே? அது போல சுருதை ஓர் உதாரணம் சொல்கிறாள்.    ”கங்கை தன் வழியைத் தானே கண்டுகொள்கிறது. அதை எவரும் ஆட்சி செய்யவில்லை.


     விதுரனின் அன்னை சிவை இறந்து போகிறாள். இந்த இடத்தில் ஒரு வரி வருகிறது.“விசித்ரவீரியனின் பார்வஷி என்னும் நிலையில் அவளுக்குரிய சடங்குகள் அரன்மனையிலும், பின்னர் கங்கையிலும் முறைப்படி நடந்தன.”     இதில் ‘பார்வஷி’ என்னும்சொல்லுக்குப் பொருளை என்னால் உணர முடியவில்லை.


     பொதுவாக உலகில் நம்மை யார் நெருங்குகிறாரோ அவரைத்தான் நாம் நேசிக்கிறோம். பசுக்கள் ஒரே தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் வரை நெருக்கமாக இருப்பதால் ஒன்றை ஒன்று நேசித்துக் கொண்டிருக்கும். அதுவே வேறு தொழுவம் போய் அங்கு இருக்கும் வேறு பசுக்களுடன் நெருக்கமாகிவிட்டால் அவற்றை நேசிக்கத்தொடங்கி விடும். அன்னைக்குச் சடங்குகள் செய்யும்போது இதேபோல்தான் மனிதர்களும் என்று விதுரன் எண்ணுவது சிந்தனைக்குரியது.


அஸ்தினாபுரத்துக்கு பாண்டுவின் இறப்புச் செய்தி வந்தவுடன் விதுரன் உடனடியாக ஆணைகளைப் பிறப்பிக்கிறான். நாட்டில் இப்போது ஒரு தலைவர் மறைந்தவுடன் கடையடைப்பு, பேருந்துகள் நிறுத்தம் கல்வீச்சு மற்றும் கலவரங்கள் ஏற்படுகின்றன. இது அக்காலத்திலும் நடக்கும் போலிருக்கிறது. விதுரனின் ஆணை அதைத்தான் உணர்த்துகிறது.
    

”படைத்தலைவர்கள் நகரை எட்டுப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். எட்டுப் பகுதிகளும் தனித்தனியாக படைகளால் காக்கப்பட்டும். மக்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடி நெரிசல் எழாமல் அது தடுக்கும். அனைத்து ஒருக்கங்களும் முடிந்தபின்னர்தான் செய்தி முறையாக முரசறையப்படவேண்டும்”
    

”மனிதருக்கு இன்று கூடச் சாவு என்பது இருவிதமாகத்தான் மனத்தால் உணரப்படுகிறது” என்று இந்த இடத்தில் விதுரன் வழி நின்று ஜெ. கூறுவது மிகப் பொருத்தமாக உண்மையானதாக இருக்கிறது. தன் சாவு, தன்னைச் சார்ந்தவர்களின்சாவு என்பதுதான் துக்கத்தைத்தரும் சாவாகக் கருதப்படுகிறது. பிற சாவுகள் எல்லாம் செய்திகள்தாம். அவை அந்த அளவுக்கு மனத்தை உருகவைப்பதில்லை. அச்செய்தி வந்தவுடன் போய் விசாரித்துவிட்டு வரவேண்டுமே என்ற எண்னத்தோடு அது நின்று விடுகிறது.


சத்தியவதி காடேகக் கிளம்புகிறாள். அப்போது விதுரன் ”அன்னையே! எதனால் இந்த முடிவு?” என்கிறான். அதற்குச் சத்தியவதி கூறும் மறுமொழி கவிநயத்தோடு ஓர் உவமையாக மிளிர்கிறது.
    

”கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத் தெரிகிறது. அவ்வளவுதான்” என்கிறாள் அவள்.


விதுரன் மீண்டும் தான் ஏதேனும் பழிசெய்து விட்டேனா என்று வினவ, அதற்குச் சத்தியவதி, “நீயா இதைக் கேட்பது” இத்தனை காவியம் படித்தும் இம்மனநிலையை உன்னால் உணர முடியவில்லையா என்ன?” என்கிறாள்


நூலறிவு தேவைதான். ஆனால் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் மிக முக்கியமானது. அதுவும் தனக்கு என்று ஒரு துக்கம் வரும்போது அந்த நூலறிவும் வேலை செய்ய மறுக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளும் இடம் இதுவாகும்.


பாண்டுவின் மரணம், மாத்ரி எரிபுகல், சத்யவதி, அம்பிகை, அம்பிகாலிகை காடேகல் என இப்பகுதி பல திருப்பங்களை ஏற்படுத்தி நிறைவு பெறுகிறது.