அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நான் வெண்முரசின் பலவருட வாசகன்.எனக்கு இதில் ஒரு சின்ன சந்தேகம்.நீங்கள் இதில் வரும் பாத்திரங்களை குறிப்பிடும்போது சிலரை அவன்,இவன் என்றும், சிலரைமட்டும் அவர் இவர் என்றும் குறிப்பிடுகிறீர்கள்.இதை எப்படி பிரிக்கிறீர்கள்.உங்கள் வயதை வைத்தா?. ஏனென்றால் இதை தொடர்ந்து வாசிக்கும் போது ஆசிரியரின் வயது தர்மருக்கு இளையவராகவும், துரியோதனன், பீமனுக்கு மூத்தவராகவும் தோன்றுகிறது.ஒருவேளை மூலமே அப்படியென்றால் வியாசர் வயது என்ன? .மன்னிக்கவும் பைத்தியக்காரத்தனமான கேள்வியாக தோன்றினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும்.
பாபநாசம் முருகானந்தம்
அன்புள்ள முருகானந்தம்
பொதுவாக அப்படி இன்னாரை இப்படிச் சொல்லவேண்டும் என வகுத்துக்கொள்வதில்லை. அப்படி திட்டமிட்டு வகுத்துக்கொள்ளக்கூடாது என்றே நினைக்கிறேன். எந்த இடத்தில் விதுரன் விதுரர் ஆகிறார் என்பதை தன்னுடைய ஆழ்மனதின் தற்செயலுக்கே எழுத்தாளன் விட்டுவிடவேண்டும். இதில் வயது மட்டும் அளவுகோல் அல்ல. அர்ஜுனன் அவன் தான். இளைய யாதவர் அவர் ஆகிவிட்டார். யுதிஷ்டிரர் அவர் ஆகிவிட்டார். சமூகநிலையும் அளவுகோல் அல்ல. எளிய மருத்துவர்கள் அவர் ஆக இருக்கையில் துரியோதனன் அவன் ஆக இருக்கிறான். வயது, தொழில், சமூகநிலை, அணுக்கம் என பலகாரணங்கள்
அந்த இடத்தை வாசகனே நிரப்பிக்கொள்ளவேண்டியதுதான்
ஜெ