Thursday, November 29, 2018

சிறிய கதாபாத்திரங்கள்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் திசைதேர்வெள்ளம் தொடங்கியபோது ஒரு பெரிய சந்தேகம் இருந்தது. வெறும்போரையே எத்தனை பக்கங்கள் எழுதமுடியும் என்று. ஒருநாவலிலேயே போரை எழுதிமுடித்துவிடுவீர்கள் என்றுதான் நினைத்தேன். மகாபாரதத்திலேயே துணைக்கதைகள் மற்றும் உபதேசங்களைத் தவிர்த்தால் போரின் அளவு கம்மிதான். ஆனால் நீங்கள் ஒவ்வொரு அணுவையும் விரிவாக்கி நாவலை முழுமைசெய்துவிட்டீர்கள். இந்நாவலின் அழகே இதிலுள்ள சின்னச்சின்னக் கதாபாத்திரங்கள்தான். நாவல் சின்னக் கதாபாத்திரம் ஒன்றின் கனவு – சாவுக்குப்பின்னால் உள்ள காட்சிகளில் தொடங்கி இன்னொரு சின்னக் கதாபாத்திரத்தின் சாவுக்குப்பின்னாலுள்ள கனவில் நிறைவெய்துகிறது. அற்புதமான ஒரு முடிவு. தன் பிணத்தருகே தானே சிதை எரியும் முறை வருவதற்காகக் காத்து நிற்பதென்பது ஒரு பெரிய காட்சிதான். அப்படி அங்கே பல்லாயிரம்பேர் காத்துநின்றிருக்கிறார்கள் என தோன்றுகிறது

ஆர்.எஸ்.சுரேஷ்குமார்