Friday, November 16, 2018

தொடர்ச்சி



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று காலையில் வெண்முரசு படித்துவிட்டு தூக்கம் வராமல் என்ன பண்ணலாம் என எண்ணும்போது விஷ்ணுபுரம் படிக்கலாம் என தோன்றியது.
கருப்பு காலபைரவனின் ரகளையான அறிமுகத்தோடு ஸ்ரீபாதம் படிக்க ஆரம்பித்தவன் திடீர் என அனைத்தும் உள்ளுக்குள் அணைந்துபோன ஒரு மனநிலையோடு உறைந்து விடியலை பார்த்து உட்கார்ந்திருந்தேன். மனம் முழுதும் ஒரே கேள்வி "இவர் எழுதுவதுக்கு ஆதாரம் என்ன? " என்று,ஏன் என்றால் நானும் ஏன் வாழணும் என்ற கேள்வியோடு போராடிகொண்டிருப்பவன். இன்றுவரை விடை தெரியாமல்.

ஆனால் ஒரு விஷயம் பிடிகிட்டியது. நீங்கள் தனி மனிதர் என உங்களை உணரவில்லை, யாரோ ஒருவரின் தொடர்ச்சி என்றே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் என. 

வெண்முரசில் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைவருக்கும் எதோ ஒரு தருணத்தில் அவர்கள் முன்ஜென்மகதை  உக்கிரமான தருணத்தை  எதிர்கொள்ள கூர்மை கொள்ளும் ஒரு வாழ்வாகவே சொல்லபடுகிறது.அது சிறிது மாற்றமடைந்தோ இல்லை நேர் எதிராகவோ இந்த வாழ்வில் நடப்பதாக வருகிறது.இதற்கு எடுத்துகாட்டுலாம் தேவை இல்லை, ஏனென்றால் வெண்முரசின் கட்டுமானமே இதன் மேல் நிற்பதாக தோன்றுகிறது.

இன்று பிருஹத்பலன்- அபிமன்யு கதை படித்ததும் இதை ஆழமாக உணரமுடிந்தது. காலத்தை கி.மு. கி.பி என பிரிப்பது போல் கிழக்கத்திய சிந்தனைகளுக்கும் மேற்கத்திய சிந்தனைகளுக்கும் இடையில் நிற்கும் பெருஞ்சுவர் அல்லவா இது என தோன்றியது.

நானும் தேடலை தொடங்கிவிட்டேன் "நான் யாரின் தொடர்ச்சி என?' , ஏன் என்றால் என்னை பற்றி எனக்கு தானே தெரியும் வெண்முரசின் கதாபாத்திரங்களை போல

ஸ்டீபன் ராஜ்