Tuesday, November 20, 2018

பீ மதாசர்கள்



இனிய ஜெயம் 

பீமனை தேடி சாரி சாரியாக வந்து ,காத்திருந்து ,அவனுடன் மல்யுத்தம் செய்து ,மண்மறைந்து ,பீமன் கையால் நீத்தார் கடன் பெறும் பீமதாசர்களின் சித்திரத்தை முதல் கணம் வாசிக்கையில் திகைப்பாக இருந்தது .மறு முறை வாசிக்கையில் ஆம் அது அவ்வாறன்றி ,வேறு எவ்வகையிலும் சென்று முடியாது என்றும் தோன்றியது . அவர்கள் ஒவ்வொருவரும் அடைந்தது மரணம் அல்ல .அது அவர்கள் ஆயுளின் முடிவும் அல்ல .அது அவர்கள் வாழ்வின் நிறைவு . வண்ணக்கடல் இளநாகன் காணும் காளாமுகர்கள் தங்கள் தவத்தின் நிறைவை எங்கே எய்துகிறார்கள் ? முப்புரிவேலை நட்டு வைத்து , மேலிருத்து அதில் நெஞ்சு காட்டி பாய்ந்து விழுவதன் வழியாகத்தானே . நிறைவு காண  அது காளாமுகர்கள் வழி ,பீமதாசர்களுக்கு இது வழி. விசோகனின் பார்வையில் வரும் பீமன் ,இவன்தான் பீமன் என துல்லியமாக வகுத்து வைக்க படுகிறான் .இதற்க்கு மேல் வரையறையே இல்லை என்பதை போன்றதொரு துல்லியம் . குறிப்பாக  ஒரு சொல் 'அவர் இந்தக் களத்தில் தோற்க்கமாட்டார் எனும்' சொல் .ஒரு காட்சி  'ஒவ்வாதது ஊட்டப்பட்ட குழந்தை போல ' அவன் கண்ணுக்கு காட்சி தரும் பீமனின் சித்திரம் . பீமனின் மெய்யான சித்திரமும் அதுதான் . அதை விசொகன் போன்ற பீமதாசர் அன்றி யாரால் நெருங்கி அறியக் கூடும் . 

குழந்தைக்குரிய அதே கள்ளமின்மை கொண்டே ,பீஷ்மரை அறமற்று கொல்லத்துனியும் முயற்சியை எதிர்க்கிறான் . ஒவ்வாதது ஊட்டப்பட்ட குழந்தையாகவே அந்த அவையை விட்டு வெளியேறுகிறான் பீமன் 

கடலூர் சீனு