வெண்முரசின் தீவிர வாசகர்களான உங்களுடன் உரையாடுவதில் எப்போதும் போல் நான் இன்றும் பரவசத்தில் இருக்கிறேன். இந்தக் குழுவைப்போன்ற அறிவு சார்ந்த நண்பர்களை நான் வெளியில் கொண்டிருக்கவில்லை என்பதால் உங்களுடைய இத்தொடர்பை நான் எப்போதும் உயர்வாகவும் முக்கியமாகவும் கருதுகிறேன்.
வெண்முரசின் இரண்டாவது நூலான மழைப்பாடலில் மழை வேதம் முடிவுப் பகுதியாக இருக்கிறது. ஆனால் அது இப்பெருங்கதையின் திருப்பு முனையாக இருக்கிறது. இராமாயணத்தில் சூர்ப்பனகை இராமனை பார்க்க நேர்வது அக்கதையின் ஒரு முக்கிய திருப்பு முனை, அதாவது கதையை அதன் நோக்கமான இராவண வதத்தை நோக்கி செலுத்தும் நிகழ்வு. அதைப் போன்றே மழைவேதத்தில் வரும் பாண்டுவின் இறப்பும் மகாபாரதக் கதையை அதன் பாதையில் செலுத்தும் ஒரு திருப்பமாகும்.
உண்மையில் பார்த்தால் பாண்டுவின் இறப்பு என்பது எவரும் எதிர்பார்க்கவியலாத ஒன்றல்ல. குரு வம்ச பரம்பரையில் ஒரு குறைபட்ட மரபணுக்கூறுவாக இருக்கும் பலகீனத்தை பாண்டுகொண்டிருக்கிறான். ஆகவே அவன் எப்போது வேண்டுமானாலும் இறந்துபோவதற்கான சாத்தியம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. அவன் இறந்த விதமும் ஒன்றூம் அதிர்ச்சியளிப்பதல்ல. முன்னரே ஒரு முறை இப்படி உறவாட முயன்றதில் அவன் உடல் நலம் மிகவும் சீர்கெட்டு இறப்பு வரை சென்று வந்தவன். அவன் இப்படி சீக்கிரத்தில் இறப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல என இருந்தாலும், ஏன் அது ஒரு திருப்பு முனைஎன நான் கருதுகிறேன் என்று இங்கு சொல்ல விழைகிறேன்.
பாண்டுவின் இறப்பு அஸ்தினாபுர அரசியலை முழுவதுமாக மாற்றி விடுகிறது. உண்மையில் பாண்டு வனம் சென்றதை சத்தியவதி,விதுரன் உட்பட அனைவருக்கும் ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சைத்தான் தந்திருக்கும். அவர்கள் அனைவரும் அஸ்தினாபுரத்தின் மணிமுடி பாண்டுவிற்குப்போனதை எதிர்பார்க்காதவர்கள். மீண்டும் அது திருதராஷ்ட்டிரருக்கு தற்காலிகமாக
திரும்ப பாண்டுவின் வனவாசம் உதவியது. ஆனால் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றுல், பாண்டு ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையென ஆனது. அதுவும் அவன் மூத்த மகன் திருதராஷ்டிரனின் மூத்த மகனைவிட வயதில் மூத்தவனாக இருப்பது. மணிமுடியை மீண்டும் திருதராஷ்டிரனின் மகனிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவு அரச குடும்பத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவு. அது அவை ஒப்புதல் பெற்ற அரசியல் முடிவல்ல. ஆகவே பின்னர் சிக்கல் எழாமல் தவிர்ப்பதற்கு பாண்டுவின் ஒப்புதல் வேண்டும். பாண்டு இறக்காமல் இருந்திருந்தால் இந்தச் சிக்கல் தோன்றவே வாய்ப்பிள்ளை. அவன் வனத்திலேயே அவன் பிள்ளைகளுடன் இருந்திருப்பான்.
அதற்குள் துரியோதனன் பட்டத்து இளவரசன் என அஸ்தினாபுரத்தில் நிறுவப்பட்டிருக்கும். பாண்டு பீஷ்மர் சொல்லைத் தட்டியிருக்க மாட்டான். ஆனால் இப்போது பாண்டுவின் இறப்பினால் மணிமுடி குந்தியின் ஆளுகைக்குச் சென்றுவிட்டது.
பாண்டுவின் பிள்ளைகள் உடன் நாடு திரும்புவார்கள்.
இப்போது அவர்கள் அஸ்தினாபுரி மணிமுடிக்கு உரியவனின் பிள்ளைகள். குந்தியின் அரசியல் கனவை மெய்ப்படுத்த விதி எடுத்த முடிவுதான் பாண்டுவின் இறப்புபோலும். ஆகவே மகாபாரதக் கதை குருஷேத்திரப் போரை நோக்கி திரும்புவதற்கான ஒரு பெரிய நிகழ்வாக பாண்டுவின் மரணத்தை நான் பார்க்கிறேன்.
தருமன் பாண்டுவினால் வளர்க்கப்பட்டவன். பாண்டு தன் இயலாமையை தன் குறைகளை எல்லாம் தருமனை வைத்து நிறைத்துக்கொள்ள நினைத்திருக்கிறான். பாண்டு தான் அடைந்த அறிவு ஞானம் முழுதும் தருமனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக புகட்டியிருக்கிறான். தருமன் அந்த ஞானத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறான் என்பது நமக்கு தெரிகிறது. அதனால் பிள்ளைப்பருவத்தை தாண்டிய முதிர்ச்சியை தருமன் அடைந்திருக்கிறான். குந்தி தருமனில் ஒரு பேரரசனைக் கண்டு வியக்கும் தருணத்தை மழைவேதத்தில் காண்கிறோம். அவனை அந்த நிலைக்கு கொண்டுசெல்வதை தன் கடமையென குந்தி உறுதி பூணுகிறாள். அதே நேரத்தில் துரியோதனன் தன் மாமன் சகுனியால் வளர்க்கப்படுகிறான் என்பது ஒரு வரியில் மழைவேதத்தில் சொல்லப்படுகிறது. அவன் தன் அரசியல் பெருங்கனவை அந்த சிறுவனின் உள்ளத்தில் புகட்டிவிடுகிறான். அது துரியோதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பாதிப்பைச் செலுத்துகிறது. துரியோதனன் மண் மீது கொண்ட பெரும்பற்றுக்கு காரணமாக அமைகிறது.
இரு வளர்ப்புகள் எப்படி ஒரு நாயகனாக ஒரு எதிர் நாயகனாக உலகம் கருதக்கூடியவர்களை உருவாக்குகிறது என்பதை இப்பகுதி கோடிட்டுக்காட்டுகிறது.
மாத்ரியை பாண்டு மணமுடிக்கும் நிகழ்வு ஒருவகையில் குந்தியை அவமானப்படுத்துவது என்றே கொள்ளலாம். அவள் யாதவ குடியினள் என்று சிறுமைப்படுத்துவதுதான் அது. ஆகவே குந்தி மாத்ரியை வெறுப்பதற்கு பகை கொள்வதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அவள் அந்த உளநிலையை மாத்ரியை தன் மகளெனக் கொள்வதன் மூலம் சமன் செய்துகொள்கிறாள்.
விந்தனும் அனுவிந்தனும் எப்படி நட்பானார்கள் என்பதைப்பற்றி வெண்முரசு திசைதேர்வெள்ளத்தில் ஒரு குறிப்பு வரும். அவர்களுக்கு எதிரே அணைத்துக்கொள்ளுதல் அல்லது பகை கொள்ளுதல் என்ற இருவழிகளே இருக்கும். அவர்கள் அணைத்துக்கொள்வதை தேர்ந்தெடுத்துக்கொள்வதன் மூலம். நெருக்கம் நிறைந்த உறவு அமைந்து வலிமையடைவார்கள். குந்தி மாத்ரியை இப்படி அணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கிடையே உறவில் நெருக்கமும் இணக்கமும் அமைகிறது. ராமகிருஷ்ணனின் உப பாண்டவத்தில் குந்தியின் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்காமல் மாத்ரி கணவனுடன் எரிபுகுவாள் என இருக்கும். ஆனால் குந்தியின் வேண்டுகோளைத்தாண்டி மாத்ரி எரிபுகுவதாக வெண்முரசு கூறுவதே பொருத்தமாக இருக்கிறது.
இறந்த கணவன் உடலை கிடத்தி வைத்து காத்திருக்கும் இரவில் குந்தியின் மனம் ஓடும் விவரணை மிகுந்த உளவியல் நுட்பம் வாய்ந்தது. எப்படிச் சிந்திப்பது எதைச் சிந்திப்பது எனத் தெரியாமல் மனம் சிறு விஷயங்களில் அலைந்து திரிவது, எதிர்பாராது அடைந்திருக்கும் பாதிப்பை மனம் உள்வாங்க முடியாமல் தத்தளிப்பது, இனி எதிர்காலத்தை எதிர்கொள்வது எப்படி என்ற திகைப்பு, அதை எண்ணாமல் தள்ளிப்போடப்பார்ப்பது என மனம் செல்லும் வழிகள் இங்கே காட்டப்படுகின்றன. இதற்கிடையில்
குந்தி தான் வலிந்து தவிர்த்துவிட்ட விதுரனின் மீதான தன் இயல்பான காதலை ஒரு சிறுவரியில் வெண்முரசு நினைவுபடுத்திச்செல்கிறது.
எந்த ஒரு இறப்பும் மனிதனுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது வாழ்க்கையின் அர்த்தமின்மையைத்தான். அம்பிகை அம்பாலிகை இதுவரை தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த வஞ்சத்தின் காரணங்களை பாண்டுவின் இறப்பு அர்த்தமிழக்க வைக்கிறது. அஸ்தினாபுரம் வந்த நாள் முதல் அவர்கள் பகை கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அவர்கள் மனதிலிருந்து துடைத்தகற்றப்படுகிறது. தான் போடும் கணக்குகளையெல்லாம் கலைத்துப்போட்டு விளையாடும் காலத்திடம் முழுதும் தோற்றுப்போனவளாக சத்தியவதியும் ஆகிறாள். அஸ்தினாபுரத்தை கட்டிப்பிடித்திருந்த தம் இலக்குகள் பொருளிழந்துபோனதை அறிந்து அவர்கள் மூவரும் அந்த நகர்விட்டு நீங்குகிறார்கள். ஆனால் அவர்கள் பாதியில் விட்டுப்போன
சதுரங்க ஆட்டத்தைத் தொடர சகுனியும் குந்தியும் எதிரெதிர் பக்கங்களில் அமரவிருக்கிறார்கள் என்ற குறிப்போடு மழைப்பாடல் நிறைவடைந்திருக்கிறது. பாண்டவர்களின் மற்றும் துரியோதனன் முதலான கௌரவர்களிலன் பிறப்பைப்பற்றி கூறி வந்த இந்த நூல் பாண்டுவின் இறப்பு என்ற நிகழ்வோடு முடிந்திருப்பது ஒரு முழுமையை அளிப்பதாக இருக்கிறது. .
த.துரைவேல்