Monday, November 26, 2018

பீஷ்மர்கள்




அன்புள்ள ஜெ,

பீஷ்மர் வேறு ஊடகங்கள் வழியாக நிறையவே பார்த்த கதாபாத்திரம். ஆனால் வெண்முரசில் அவருடைய ஆளுமை இன்னும் துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தது. நமது தந்தைகளைப்போலவே அவர் இருக்கிறார். என் பெரியப்பாவை பீஷ்மர் என்றுதான் நான் வெண்முரசு வாசித்தபின் சொல்வேன்/ எங்கள் தாத்தா செத்துப்போனபோது அவருக்கும் 9 வயது. அவர் அப்போதே பால் சொசைட்டியில் பால் வினியோகிக்கும் வேலைக்குச் சென்றார். நல்ல உயரமான மனிதர். நாளொன்றுக்கு 100 கிமி சைக்கிள் ஓட்டுவார். குடும்பப் பொறுப்பை அவரே ஏற்றுநடத்தினார். தம்பி தங்களை வளர்த்து படிக்கவைத்தார். அவர் கல்யாணம்செய்துகொண்டது தம்பிகள் கல்யாணம் முடித்தபின்னாடிதான். அவருக்கு பிள்ளைகள் கிடையாது. பிறகு கடுமையான ஆளாக மாறிவிட்டார். எல்லாமே அவர்தான் செய்வார். ஆனால் எவரிடமும் முகம்கொடுத்துப் பேசமாட்டார். நல்லதாக ஒன்றுமே எவரைப்பற்றியும் சொல்லமாட்டார்.

இப்போது வயசாகிவிட்டது. இப்போது எதைப்பற்றியும் பற்றில்லாமல் இருக்கிறார். இப்போது ஒரு பேஷன் மட்டும்தான் டிராக்டர் ரிப்பேர் செய்வார். ஒருநாளுக்கு பத்துமணிநேரம் அந்த வேலையை மட்டும்தான் செய்வார்.  அப்படியே எல்லா குணங்களும் பீஷ்மரைப்போலத்தான். ஆகவே இன்று பீஷ்மர் களத்தில் விழுந்தபோது என் கண்களிலிருந்து கண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் பலலட்சம் பீஷ்மர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்

ராஜேந்திரன்