அன்புள்ள ஜெ
அபிமன்யூ இந்நாவல்கள் முழுக்க ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்துடன் இருந்துகொண்டிருக்கிறான். அவனை முழுமையாகப் பார்ப்பவர்களால்தான் புரிந்துகொள்ளமுடியும். வெண்முரசின் கதாபாத்திரங்களிலேயே சிக்கலானது அபிமன்யூவின் கதாபாத்திரம்தான்.
அவனுடைய கண்வழியாக எதுவுமே சொல்லப்படவில்லை. அவனை மற்றவர்கள் பார்ப்பதுதான் வெளியாகிறது. அவ்வப்போது சின்னச்சின்னக் குறிப்புகள் வெளியாகின்றன. அவற்றினூடாக இணைத்துக் கிடைக்கும் கதை மிகவும் சோகமானது. சோர்வை அளிப்பது
அவனுடைய அதீதமான உற்சாகமும் முந்தும்தன்மையும் கொஞ்சம் மிகையாகவே ஆரம்பத்தில் காட்டப்பட்டன. டிப்ரஷன் உள்ளவர்களின் இயல்பு அந்த மிகையான உற்சாகம். ஆகவே அவனுடைய டிப்ரஷன் இனிமேல் சொல்லப்படும் என்று அப்போதே நினைத்தேன் அதற்கேற்றார்போல அவனுடைய போர்க்காட்சிகளில் எதிர்பாராத குரூரம் வெளிப்பட்டது. அதுவும் ஹைப்பர்டென்ஷனின் விளைவே
கடைசியில் மகாபாரதப்போரில் அவனுடைய செயல்பாடுகள் எல்லாமே ஆழ்மான மனச்சோர்வையும் கடும் கசப்பையும் அடைந்தவனுக்குரியவையாகவே உள்ளன. அதை மாளவமன்னன் கூவிச்சொல்லும்போதுதான் எல்லா சித்திரங்களும் தெளிவடைகின்றன
பாவம் இனிமேல் நேராக வியூகத்துக்குள் செல்வது மட்டுமே ஒரே வழி அவனுக்கு
மகாதேவன்