Thursday, November 15, 2018

வெண்முரசு வாசிப்பு



அன்புநிறை ஜெ,

என் வாழ்வில் நான் இழந்த மிகப்பெரிய தருணங்களில் ஒன்று கட்டண உரை மற்றும் அதற்கடுத்தநாள் நடந்த சிற்ப பயணம். தங்களுடன் சேர்ந்து சிற்ப பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் தீரா ஆவல். ஆனால் அந்த இழப்பிற்கு ஆறுதலாக அன்றைய பொழுதே சு. தியோடார் பாஸ்கரன் எழுதிய சூழியல் கட்டுரைகள் மொத்தமாக தொகுத்து உயிர்மை பதிப்பகம் மைமேல் இருக்கும் பூமி என்ற பெயரில் புத்தகமாக வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அறிவிப்பு கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி. உங்கள் உரையைத்தான் தவறவிட்டுவிட்டேன் இக்கூட்டத்திற்கு கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அந்த நூல்வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்துக்கொண்ட திருப்தி. சு. தியோடார் பாஸ்கரனை அன்றுதான் முதன்முதலாக சந்தித்தேன். மனுஷ்யபுத்திரன், பர்வீன்சுல்தானா, தங்கம் தென்னரசு போன்றோர் வந்திருந்தனர். பர்வீன்சுல்தானா பேச்சு கேட்டவுடன் புத்தகம் வாங்க வேண்டாம் என்று எண்ணுபவர்கள் கூட புத்தகத்தை கண்டிப்பாக வாங்கியே தீரவேண்டும் என்ற முடிவை எடுத்துவிடுவர். புத்தகத்தின் பல சிறப்பம்சங்களை பட்டியல்போட்டு கூறினார். நானும் ஒரு புத்தகத்தை வாங்கினேன். தங்கள் நிகழ்வில் கலந்துக்கொள்ள இயலவில்லை என்ற கவலை இருந்தாலும் அதை சற்று ஆறுதல்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததில் பெருமகிழ்ச்சி. 

தங்களின் வெண்முரசு நாவலை படித்துவருகிறேன். இப்பொழுது பிரயாகை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால் இவ்வளவு அப்பட்டமாக அனைத்து எண்ணங்களையும் எண்ணியப்படி கோர்வையாக தத்துவமாக கூறிவிட முடியும் என்று வியக்கிறேன். என்னைப்பொறுத்தவரை வெண்முரசு ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பலர் அதன் தன்மை தெரியாமல் மகாபாரதத்தை திருப்பி எழுதுதல் என்ற ஒற்றைச் சரடிற்குள் தங்களை தக்கவைத்துக்கொள்கின்றனர். தாங்கள் மட்டும் அதில் சிக்காமல் பிறரையும் சிக்கவைக்கின்றனர். நானும் அவ்வாறு முதலில் எண்ணிக்கொண்டு அதை வாசிக்காமல் இருந்தேன். அப்படி சொல்பவர்களுக்கு தாங்கள் அளித்த பதிலில் இருந்து வெண்முரசிற்கு வந்தேன். ஆரம்பத்தில் முதற்கனல் சற்று கடினமாக இருந்தது. அதைத்தாண்டி மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் இப்பொழுது பிரயாகை வந்து சேர்ந்துள்ளேன். முதல் இரண்டு புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட நீலமும், பிரயாகையும் பலமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலம் விட பிரயாகையின் தாக்கம் அதிகம். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும்பொழுதும் வெண்முரசு எழுத்துக்கள் நம் அகத்தை கீறி நம் முன்னே வைக்கிறது. வெண்முரசில் வரும் வாழ்க்கை சார்ந்த தத்துவ விளக்கங்கள் மட்டுமே தனியான நூல் தொகுப்பிற்கு ஏற்ற கரு. அத்தகைய கருவில் இருந்து பல நூல்களை ஏற்படுத்தலாம். தாங்கள் தரும் அனுபவ வரிகள் பல என்னை வியக்கவைக்கின்றன. ஒரு பேட்டியில் தங்களுக்கு பிடித்த வெண்முரசு கதாபாத்திரமாக பீ‘ஷ்மரை குறிப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் என் அகத்தை கவர்ந்த கதாபாத்திரம் விதுரரும், பீமனும் தான். பீமன் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் என்று எனக்கே தெரியவில்லை. என் அகம் விதுரரை நாடிய பொழுது என் புறம் பீமனை நாடியது என்னுள் நடந்த இந்த மாற்றத்தை மிகப் பிந்தியே கவனித்தேன். எனக்கே வியப்பாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் இடத்தில் கூட பீமனோ, விதுரரோ இருந்திருந்தால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்று தான் என் எண்ணம் எழுகிறது. புனைவிலும், வாழ்விலும் இவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றுதான் எண்ணுகிறேன். இப்பொழுதெல்லாம் அதிகமாக பேசக்கூட முடிவதில்லை. அமைதியாக சுற்றி நடப்பதை கவனித்துக்கொண்டு அதற்கேற்றவாறு வினையாற்றுகிறேன். இம்மாற்றத்திற்கு முக்கிய காரணம் இவ்வரிகள் தான், எண்ணங்கள் ஆயிரம் எழலாம். நாக்கு தெய்வங்களால் கண்காணிக்கப்படுகிறது. சொல் பிறப்பது ஓர் உடலெழுவது போல. அது தொட்டு உணரும் பருவடிவம். நம்முடன் உடனிருக்கு இருப்பு எழுந்த சொல் அழிவதில்லை. இங்கு தெய்வம் என்பதை நான் நம் எதிரிலிருக்கும் மனிதர்கள் தான் என்று பொருள்கொள்கிறேன். அவர்கள் நம் சொற்களை கண்காணிக்கிறார்கள். தவறுதலாக ஏதேனும் பேசிவிடக்கூடாது என்ற கட்டுப்பாடு அதனால் ஏற்படுகிறது. இவ்வரிகள் அப்படியே திருக்குறளில் இருக்கும் பயனில சொல்லாமை எனும் அதிகாரம் தான் முன்னால் வந்து நின்றது. நான் நிச்சயமாக பேசுவதைக் குறைத்துவிட்டேன் என்பதை தெரிந்துக்கொள்ளவும் தாங்கள் மற்றொரு வாய்ப்பை அமைத்துதந்தீர்கள் இவ்வரிகள் மூலம், ஒவ்வொரு கணமும் சொல்லும் சொற்களை கண்காணித்துக்கொண்டிரு. சொன்னபின் சொன்னவற்றை மீண்டும் எண்ணிப்பார். அப்படிப் பார்க்கத்தொடங்கினாலே காலப்போக்கில் உன் சொற்கள் சுருங்கிவிடும். பல மாற்றங்கள் என்னுள் நான் காண்கிறேன். ஐந்தாவது நூல் படிக்கும்பொழுதே இவ்வளவு செறிவான வாழ்க்கைத் தத்துவங்கள் கூறிவிடும்பொழுது இன்னும் 15 புத்தகங்களில் எவ்வளவு தத்துவங்கள் இருக்கும் என்று எண்ணும்பொழுதே வியப்பாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் வலி என்று எண்ணும்பொழுது வலிப்பற்றிய தங்கள் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.  வலியால் ஆன காலம். வலியால் ஆன தாளம். கேட்கும் ஒலிகளெல்லாம் வலியால் ஆனவையான இருந்தன. விழிதூக்கி நோக்கியபோது அத்தனை காட்சிகளும் வலியால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணத்துடனும் வலி இருந்தது. தங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் அனுபவ வரிகள் என்று படிப்பவர்கள் உணர்ந்துக்கொள்வார்கள். மனிதர்கள் எங்கோ எப்பொழுதோ ஏதோ ஒரு சரடில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் தங்கள் அனுபவ மொழிகள். தங்கள் வரிகளின் வெளிப்பாடு பலவற்றை படிக்கும்பொழுது அட இது நமக்கும் நடந்துஇருக்கே! என்று வியக்கும் தருணம் மனிதர்கள் அனைவரும் அனைத்தாலும் ஒன்றுதான் என்பதற்கு நிரூபணம்.

வெண்முரசில் தங்களின் தத்துவ வரிகளை தனியாக சேமித்து வைத்துள்ளேன். எப்பொழுதேனும் மனம் சஞ்சலப்பட்டால் அதை எடுத்து படிப்பேன். பின்பு மீண்டு தெளிவேன். இந்த வயதில் இவ்வளவு தத்துவங்களை விரிவாக என்னால் அறிந்துக்கொள்ள முடிகிறது என்று எண்ணும்பொழுது தங்களுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவேன் என்று தெரியவில்லை. மானுட அகம் எந்த பாவனையையும் மேற்கொள்ளும். ஒருவாரம் ஒரு பாவனையை மேற்கொண்டால் அது நம் அகத்தில் உண்மையென்றே நிலைக்கொண்டுவிடும் எவ்வளவு உண்மையான வரிகள். தங்களின் பல வரிகள் படிப்பவரின் அகத்தைக் கீரி இதுதான் நீ என்று முன்னால்வந்து பாரபட்சமின்றி வைக்கிறது. படிக்கும் எங்களுக்கே அப்படியென்றால், அதை எழுதும் தங்களின் அகம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதை நினைத்துக்கொள்கிறேன். ஒருவரின் அகத்தை மற்றொருவர் அறிந்துவிட்டேன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனமானது என்பதை தங்கள் இந்த வரிகள் மூலம் எண்ணிக்கொண்டேன். இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிடமுடியுமென்ற அக எழுச்சி அனைவருக்கும் ஏற்படுகிறது. முதுமை நெருங்க நெருங்க அது திறந்த வெளியின் தீபச்சுடர் எவ்வாறெல்லாம் நெளியும் என்று கணிப்பதற்கு நிகரான வீண்வேலை என்று தெரியவரும். ஒரு சுடரை அசைபவை இப்புவியின் காற்றுவெளியின் திசைமாற்றங்கள். அதை நிகழ்த்துவது வான்வெளி. வானை அறிந்தாலொழிய சுடரை அறியமுடியாது எனும் வரி பல முறை மீண்டும் மீண்டும் என்னுள் நான் சொல்லிக்கொண்டது. எவ்வளவு பெரிய உண்மையை மிகச்சுலபமாக கூறிக்கடந்துவிட்டீர்கள் இப்படி பல வரிகள் என் மனதில் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்வதுண்டு. இவற்றின் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இந்த இரண்டு வரிகள் என்னைப் பல நாட்கள் வாயடைக்க செய்துவிட்டது பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவே வெளிப்படும். நடத்தைகளில் சொற்களில். பல சமயம் எளிய உடலசைவுகளில். ஏனென்றால் பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள். அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ள முயல்வார்கள். நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே. மற்றொன்று நல்லவர்கள் பிறரை நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரை கூர்ந்து நோக்குவதில்லை ஆகவே அவர்கள் பிறரை அவர்கள் அறிவதுமில்லை. தீயவர்கள் பிறரை அணுஅணுவாக கூர்ந்து நோக்கி அறிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை நன்கறிந்த ஒருவர் நாம் அவரை சற்றும் அறியாமலிருக்கையில் மிக எளிதாக நம் அகத்தை மாற்றிவிட முடியும். இவ்வரி இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிட முடியாது என்று முன்பு தாங்கள் கூறிய வரிக்கு சிறந்த நிகழ்தகவு. ஒருவன் உள்ளத்தை மற்றொருவன் அப்படி கூர்ந்துநோக்கி தெளிகிறான் என்றால் அவன் ஒன்று இப்பேரண்ட பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தீயவனாக இருக்க வேண்டும். இப்பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவர்கள் மானுடராக இருப்பதில்லை. ஆகவே மனிதர்கள் மனதை கண்டடைய முடியாது. அப்படி கண்டடைகிறார்கள் என்றால் அவர்கள் ஒன்று புறம் கூறவேண்டும் இல்லையெனில் தீயவர்களாக இருக்க வேண்டும் எனும் தெளிவு வியப்பை தருகிறது. 

கடைசியாக என்னை மிக அதிகமாக பாதித்த வரி கர்ணன் பரசுராமர் மாணவ-ஆசிரிய உறவுபற்றிய தங்களின் இவ்வரிகள் 
ஆசிரியருடன் மாணவன் கொள்ளும் உறவென்பது ஆடிப்பாவையை நோக்கி விடப்பட்ட அம்பு போன்றது. நெருங்கிநெருங்கிச் செல்லும் முதற் காலகட்டம். அவரைத் தொடும் கணம் நிகழ்ந்ததுமே அவன் விலகிவிலகிச் செல்லத் தொடங்குகிறான். மேலும் மேலுமென அவரில் தன்னைக் காண்கிறான். பின் தன்னை விலக்கி விலக்கி அவரைக் காண்கிறான். விதைமுதிரும்போது கனியின் காம்பு நொய்கிறது. விதைக்குள் இருக்கும் முளை மண்ணுக்காக ஏங்குகிறது.

கல்விமுடிந்தது என்பதை முடிவுசெய்பவர் ஆசிரியர். அதன்பின் அவன் அவருக்கு அயலவன். மாணவனிடம் அவர் காணிக்கை கேட்பதே அவன் அயலவனாகிவிட்டான் என்பதனால்தான். அம்முடிவை நோக்கிச் செல்வதென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே நிகழும் நுண்மையான சமர். தான் கற்றதென்ன என்பதை மாணவன் அறிவான். ஆகவே அவன் விடுபட விழைகிறான். அவன் மேலும் கற்கவேண்டியதென்ன என்று ஆசிரியரே அறிவார். அவர் அதை அவனுக்கு உணர்த்த விழைகிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறார்கள்.

இளவரசே, ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம் தோறும் வளர்வது. பிரிவதென்பது வளரும் பெருவலியுடன் ஒவ்வொரு சரடாக வெட்டிக்கொள்வது. எத்தனை எழுச்சியுடன் அணுகினார்களோ அத்தனை துயர் மிக்கது அகல்வது. நான் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் என் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் சொற்களில் அவர் தன்னை கண்டெடுத்துக்கொண்டிருந்தார். துலாமுள் நிலையழிந்தாடிக்கொண்டிருந்த நாட்கள்.

இவ்வரிகள் படித்து முடித்தவுடன் என் மனதிற்கு நெருங்கிய ஆசிரியர்களை எண்ணிக்கொண்டேன். இவ்வாறு பலவற்றை சொல்லிக்கொண்டே செல்லலாம். நான் முழுமையாக படித்துமுடித்தவுடன் இத்தத்துவங்களைப் பட்டியலிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதுவரை என்னால் பொறுக்கமுடியவில்லை. மனம் அழுந்திக்கொண்டேயிருக்கிறது. அகம் ஏதோ இழந்ததுபோன்று ஒரு உளமயக்கம் ஏற்படுகிறது. இதை எழுதிதீர்த்தால் சற்று விடுபடுவது போன்ற உணர்வு ஏற்படும் என்று எண்ணுவதால் எழுதுகிறேன். இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் மிக மிக நீண்டு தெரிகிறது. அந்த தூரத்தைக் கடக்க இடையில் நேரும் ஈடர்களை கலைத்து உதவும் நண்பனாக தங்கள் வரிகள் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

வெண்முரசை மகாபாரதத்தின் மறுஎழுத்து என்று வசையாடுபவர்கள் ஒருமுறையேனும் வெண்முரசின் முதல் இரண்டு புத்தகங்களையாவது படித்து தெளியவேண்டும். என்னைப்பொறுத்தவரை வெண்முரசை இழப்பவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வாழ்க்கையின் உண்மையை இழப்பவர்கள். 

ஒற்றைவரியில் நன்றிக் கூறுவது என்பது அக முரண்பாடாக இருந்தாலும் முறைமைச் சொற்களை தவிர்க்கமுடியாது தானே. பிரம்மகற்ப நன்றி!

அன்புடன்
ரா.பாலசுந்தர்