Sunday, November 18, 2018

திசைதேர் வெள்ளம்



அன்புள்ள ஆசிரியருக்கு


திசைதேர் வெள்ளம்' -குருஷேத்ரப் போர் நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன சளைக்காமல்.  எத்தனை பெயர்கள், ஆயுதங்கள், சூழ்கைகள், வெறும் மரணங்கள்...திணறுகிறது உள்ளம்.  மேலும் என்ன இருக்கமுடியுமென்று எண்ணும்தோறும் எண்ணிலடங்கா பரிமாணங்களில் விரிந்து பரவுகிறது.   நான் ஒருவன் மட்டும் ஆயுதமற்று இடையே திரிவதைப்போல் உணர்கிறேன்.  மழைப்பாடலில் திருதராஷ்ட்ரனின் காந்தார நகர் நுழைவில் நிகழும் சிறு போரைப் படிக்கும்போதே மனதில் குருஷேத்ரம் பற்றிய ஆவல் எழுந்து அதன் பேருருவை கற்பனை செய்ய இயலாமல் ஆவலாக மட்டுமே எஞ்சி காத்திருந்தது.  ஆனால் இப்போது திசை தேர் வெள்ளத்தில் போர்க்காட்சிகள்  முற்றிலும் வேறு அனுபவத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.   வீரம் தாண்டி வெவ்வேறு உணர்வெழுச்சிகளின் வெளிப்பாடுகளுக்கும் அங்கே இடமிருப்பதும் அதைச்சார்ந்த விரிவான வர்ணனைகளும் வேறு வேறு தளத்தில் நிறுத்தி உள மயக்கை அளிக்கின்றன. சில அத்தியாயங்கள்  முடிந்தபோது வெறுமையும் தளர்வுமாக  உளச்சோர்வை உணர்ந்தேன்.  மூன்றிலொரு பங்கு போரே முடிந்திருக்கும் நிலையில் மேற்கொண்டு வரும் நிகழ்வுகளை எதிர்பார்ப்பின்றி அனுமதிப்பதொன்றே வழியெனத் தோன்றியது.

நீலமும், சொல்வளர்காடும் அளித்த ஆழத்தின் அமைதிக்கு நிகரான எதிர்விசையுடன் திசைதேர் வெள்ளம் அடித்துகொண்டுதான் செல்கிறது. (சொல்வளர்காடு முடிந்தவுடன் என்று நினைக்கிறேன்) தங்கள் உளச்சோர்வையும் அதனால் மேற்கொண்ட ஒரு வடக்கு நோக்கிய  தனியான பயணத்தையும் பதிவிட்டிருந்தீர்கள்.  'திசை தேர் வெள்ளம்' நிச்சயம் உங்கள் உழைப்பையும் உள்ளார்ந்த விசையையும் பெருமளவு கோரியிருக்குமென நினைக்கிறேன். அது எவ்வாறு சாத்தியமென்று தோன்றிக்கொண்டேயிருந்தது.  அதற்கு அருகான ஒரு விடையாக இன்றைய பதிவில் வந்த வரிகள் இருந்தன
" ஒவ்வொரு நாளும் போருக்குப் பின் எழும் பெரும் சலிப்பிலிருந்தும், சோர்விலிருந்தும் சினத்தைத் திரட்டி அதை பெருக்கி மறுநாள் மேலும் விசை கூட்டிக் கொள்வது அவன் வழக்கம்”.    உங்களுள் இயங்கும் அந்த சக்தி இதுவா அல்லது  இதன் மறுபக்கமான  பெரும் உத்வேகமும் உற்சாகமும் கூட்டிக்கொள்ளும் ஏதோ ஒன்றா என்று சொல்ல முடியவில்லை. 

அந்த சக்தியின் ஒரு சிறு பிரதிபலிப்பேனுமின்றி எந்த வாசகரும் 'திசை தேர் வெள்ளத்தை' கடக்கமுடியாதென்றும்  அதை வணங்கி மேற்செல்வதே என்னால் இயல்வதென்றும் தோன்றியது.

 உங்களுள் தொடர்ந்து நிகழும் அந்த சக்திக்கு என் வணக்கங்கள்!

உடலும்  உள்ளமும்  நலமுடன் திகழ்வதாக!

நன்றியுடன்
நா. சந்திரசேகரன்