Wednesday, November 14, 2018

வண்ணக்கடல்



அன்புள்ள ஜெ ,


வண்ணகடல் துவங்கியிருக்கிறேன்  , இளநாகன்  கூட பயணத்தில் இருக்கிறேன் !
சத்காரிய வாதம் என்பது வேறொரு வார்த்தை வழியாக இந்த இருநாட்கள்  மனதில் தங்கியிருந்தது  , நான் முன்பு படித்த பவுத்த வாதம் ஒன்றின் பெயர் இது என நினைத்திருந்தேன் , கபிலரின்  சாங்கிய தரிசனம் பகுதியில் இந்த வார்த்தையை பார்த்து அரண்டு  விட்டேன் , காலையில் மனதில் இருந்த வார்த்தை அன்றே நூலில் காண்பது சார்ந்த ஆச்சிரியம் . 

இது போலவே நேற்றைக்கு முன்தினம் உங்கள் சங்க உரை காத்திருந்தேன்  , அதில் இருந்த பல படிம உவமைகள்  ஈர்த்திருந்தன  , காடே  செங்காந்தள்  பூவினால்  சிவப்பாக  இருந்தது எனும் படிமம் , அதை இளநாகன் தன்னை காளமுகர்கள் சேர்த்துக்கொள்ள  வேண்டிய பாடலில் எரிகாந்தள் வார்த்தை பார்த்து சிலிர்த்தேன்  , கூடவே கரியுரி (  யானை தோல்) , யோக பிறை (தந்தம்) எல்லாம் மனதில் இந்த பாடலோடு  கலந்தன  . உண்மையில் ஒரு விருப்பத்தில்  ,விருப்ப நோக்கில் செல்லும் போது நாம் படிக்கும் கேட்கும் எல்லாமும் அதில் பொருந்தி வருவது கடவுளின் வரம்தான்  , இனியாவது ஈடுபட வேண்டும் .


இன்னொன்று சைலஜ சூதர் ( சாங்கியம்  ), சௌநகரின்  நண்பரான  கூத்தர்( தருக்கம்  )  , காளமுகர்  , கீககர்  இவர்கள் எல்லோரையும் கவனிக்கும் போது  அந்நேர பாரதம் தத்துவத்தில்  ,இறை தேடலில்   திளைத்திருப்பதை உணர முடிகிறது .

ஸ்தூலகர்ணன் சிகண்டி கதையில் இருந்து திரும்ப துரியோதனன் கதையில் பார்த்தேன் , பெண் என்பது அன்பும் கூட என தோன்றியது , பெண் தன்மை நீங்கவும்  அன்பும் நீங்கி விடுகிறது என எண்ணினேன் .