Saturday, November 10, 2018

நீலம் பற்றி...



ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

கானுறைவோய்கடலுறைவோய்வானுறைவோய்வளியுறைவோய்எங்குளாய் இலாதவனாய்?’

இது வரை வெண்முரசு வாசிப்பனுபவம் குறித்து எந்தப் பகிர்வும் செய்ததில்லை. கடந்த ஒரு வருடமாகப் படித்து, பன்னிரு படைக்களம் வரை முடித்துள்ளேன்.. சொல்வளர்காடு இனிமேல் தான் துவங்க வேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட நீலம் தான் சரியான வழியாகத் தெரிந்தது. திரும்ப வாசித்தேன். நீலம் மலர்ந்த நாட்கள் பதிவையும் படித்தேன்.


நிதானமாய் ஒரு வாரம்.. வரிவரியாய் வாசித்தேன்.. நானே ராதையாய் குளிரில் சுருண்டேன், கனவில் தத்தளித்தேன்,.நீலக்கடம்பின் சிறுகிளை என் தலையணையின் கீழ் வைத்தேன்..கண்ணனின் தளிர் உடலை, மென்மையை, அள்ளிக் கொஞ்சி முகர்ந்து, அலைந்தேன்..”விழிகளாலேயே முத்தமிட்டு முத்தமிட்டு முத்தங்களே கணங்களாகி காலமாகி முடிவிலியாகி” மிதந்தலைந்தேன்..ஈரமும், குழலிசையும்,எங்கும் பரவிய நீலமும் நான் என்னுள்ளே மூழ்கித் திளைத்தேன்.. எல்லா நிகழ்கணங்களும்,அதன் அழுத்தங்களும் என்னை விட்டு உதிர உதிர நீலம் என் மேல் வந்து அப்பிக் கொண்டது.


பெண்ணாய் பிறந்ததன் கர்வம் உணர்ந்த தருணமே நீலம் வாசிப்பு.. இத்தனை உணர்வெழுச்சியும், நெகிழ்ச்சியும், பரவசமும் நனவு வாழ்க்கையில் எங்கு தேடினும் கிடைக்காது. இத்தகைய சூழலை உங்கள் வார்த்தையின் வழி சாத்தியமாக்கியதற்கு எத்தனை எத்தனை நன்றி சொல்வது? நான் என்றும் உவப்பது பாரதியின் கண்ணன் பாட்டினை.. இன்று அதைப் படிக்கையில், நீலப்பீலி விழி என்னை உற்று நோக்கியது..
நன்றி


பவித்ரா..பாலு