அன்புள்ள ஜெ
நாமனைவருக்குமே
நமக்குள் இருக்கும் மூதாதையைக் கொலைசெய்தல் என்பது ஒரு பெரிய சவால். ஒரு பெரிய துன்பம்.
அதேசமயம் பெரிய விடுதலை. மரபின் பெருமையை நினைவுறுத்தக்கூடியவர்கள் தந்தைகள். பெரிய
சவால்களை அளித்து நம்மை நம்முடைய சொந்தச் சின்னத்தனங்களில் அமைந்துவிட சம்மதிக்காதவர்கள்.
படி படி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் தப்பு என்று சொல்கிறார்கள்.
எவ்வளவு பெரிய விஷயங்கள் மிச்சமிருக்கின்றன என்கிறார்கள்.
அதேசமயம் நம் சொந்தப்பயணங்களை
கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் வழிகளை நம்மிடம் காட்டிக்கொண்டே
இருக்கிறார்கள். ஆகவே நாம் தந்தையை ஒரு பிராயத்தில் கொலைசெய்ய ஆரம்பிக்கிறோம். நாம்
ஏதாவது சாதித்ததும் தந்தையை அடையாளம் கண்டு கண்ணீர் மல்கவும் ஆரம்பிக்கிறோம். எழுத்துலகில்
உங்கள் அடுத்த தலைமுறைக்கும் உங்களிடம் இந்தமாதிரி உறவு உண்டா என்ற சந்தேகம்தான் எனக்கு
அவ்வப்போது எழுகிறது
மகேஷ்