Friday, November 16, 2018

ஆடிகள்



அன்புள்ள ஜெ,

'கதிரோன்' பகுதியில் சஞ்சயன் தொலைநோக்கிப்பார்க்கும் ஆடிகள் ஓர் அற்புதமான கவிதைப்படிமம். குறிப்பாக ஆடிகளும் கண்களும் நீர்த்தத்துளிகள் போன்றவை என்ற வரி. அதிலிருந்து மேலதிகமாக ஆடிக்கும் இரு கண்களுக்கும் காட்சிக்கும் பொருளுக்கும் காண்பவனுக்குமான உறவு விரிந்துகொண்டே வந்தது. ஆடிகளை, கண்களை பற்றிய உவமை, காட்சிக்கட்டமைப்பு பற்றிய உவமையாக மாறியது. 

மேற்குலகில் பதினேழாம் நூற்றாண்டில் குழி, குவி ஆடிகளின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டது. அறிவின் ஒளியைக்கொண்டு சரியான கேள்விகளை எழுப்பியபடி அவற்றின் வழியே மனிதன் நோக்கியதால், ஒரே நேரத்தில் தொலைகிரகங்களின் உலகங்களும் நுண்ணுயிர்களின் உலகமும் நமக்கு அணுக்கமாகி வந்தது. கடந்த வாரம் இந்த தொழில்நுட்பங்கள் உருவாகி வந்த முக்கிய களமான அம்ஸடர்டாம் சென்றிருந்தபோது முன்னால் வாசித்திருந்த இந்த கருத்தை எண்ணிக்கொண்டேன். 

அதே இடத்தில் இந்த அத்தியாயங்களையும் வாசிக்க நேர்ந்தது. அப்போது தோன்றியது. வெளியில் மிகப்பெரியத்தையும் மிகச்சிறியதையும் மிக நுணுக்கமானத்தையும் எப்படி ஆடிகளைக்கொண்டு குவித்தும் பிரித்ததும் நம்மால் அணுகமுடிகிறதோ காலத்தையும் அப்படி அணுகும் ஆடியோன்றைக்கொண்டுதான் சஞ்சயன் போரை நோக்குகின்றானோ என்று. 

இது வரலாறரெழுத்துக்கான படிமமாக எழுந்தது. அவன் தேர்ந்தெடுத்து போகஸ் செய்து பார்க்கும் பகுதிகளைத்தான் நம்மால் பார்க்கமுடிகிறது. வரலாறு என்பதே அதுதான் போல. இன்றைய தேவைக்காக ஆடிகளை இங்கும் அங்கும் சுழற்றி முன்னும் பின்னும் திருப்பி ஓர் ஒழுங்கை வடிவமைத்துக்கொள்வது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தை பின்னுவது போல். 

அது கணநேரத்தில் சஞ்சயன் முடிவெடுத்து சுழற்றிப்பார்க்கும் ஒரு செயலாக மாறுகிறது. 'இருவிழிகள் மீது நான்கு விழிகளை பொருத்தி தொட்டும் தொகுத்தும்' போர்களைத்தை காண்கிறான். 'இத்தேர்வுகளை யார் இயக்குகிறார்கள்? யாருடைய புனைவின் கரு நான்?' என்று அவன் தன்னை கேட்டுக்கொள்ளும் இடம் கதைசொல்லிகளின் நிறை நம்முன் அணிவகுத்து வருகின்றது - சஞ்சயன், வியாசர், வைசம்பாயனர், உக்ராஸ்ரவஸ் சௌதி என்று. ஒவ்வொரு கதைசொல்லியும் ஓர் ஆடி. 

ஒட்டுமொத்த வரலாற்றை கூர்மையான resolution-ல் காணும் ஆடிகள் நம்மிடம் இல்லையா? அதைக்காணும் வல்லமை நமக்கு உண்டா? சஞ்சயன் கதையில் அதுவும் வருகிறது என்று சொல்லலாம். இறுதியில் போரை தெய்வங்களுக்கான போராக, பிரபஞ்ச சக்திகளுக்கு மத்தியிலான போராக அவன் காணும் இடம். அது ஒரு உடைவுப்புள்ளி, ஒரு பித்துநிலை. ஒரு கட்டத்தில் ஆடிகளே இல்லாமல் அந்த காட்சியை அவன் காண்கிறான். வரலாற்றெழுத்தாளன், கதைசொல்லி, குறிசொல்லி என்ற  படிகளில் அவன் இறங்குகிறான். பால்ஹிகரும் அந்த பால்மணம் கமழும் குழந்தையும் தோன்றுமிடம் காலம் உடல்மடிந்து தன்னை அறியும் இடம். காலத்தை அள்ளுவது, காரணங்களை கண்டுபிடிப்பது, எல்லாமே மடத்தனம் தானா, எஞ்சுவது என்ன, என்ற உணர்வு ஏற்பட்டது.

ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கவனித்தேன். பொதுவாக வாசிக்கும்போது காட்சிகள் ஒரு குறிப்பிட்ட ஒளி அமைப்புடன், குறிப்பிட்ட நிறதொகுப்போடு, வடிவமுறையில் தோன்றும். வாசிக்கும்போதே கண்களை மூடி கூர்ந்து கவனித்தால் இன்னமும் துலங்கி வரும் காட்சிகள் உள்ளன. புகையாக மூட்டம்கொள்ளும் காட்சிகள் உள்ளன. ஆனால் அடிப்படை ஒளி-நிற அமைப்பு மாறாது. ஒரு குறிப்பிட்ட கதையை எப்போது நினைவில் எடுத்து பார்த்தாலும் அதே அமைப்பில் தோன்றும். இங்கு சஞ்சயன் போரை திருதராஷ்ட்டிரரிடம் சொல்லும் சொற்கள் முன்பு வாசித்த அதே சொற்களில். ஆனால் முன்னால் வாசித்த காட்சிகள் மொத்தமும் நிறங்களிலும், இந்த அத்தியாயங்கள்  கருப்பும் ஒரு வெளிர்நீலவெள்ளையிலும் தோன்றின. செய்தித்தாள் படத்தைப்போல, அல்லது பிக்காஸோவின் குவர்னிகா ஓவியத்தைப்போல். எவ்வளவு நோக்கினாலும் வண்ணங்களை அடையாளம் காண முடியவில்லை. வாசிப்பில் இந்த மாயங்கள் புரிதலுக்குள் சிக்காதவை.

சுசித்ரா