Saturday, November 24, 2018

பீஷ்மரின் வீழ்ச்சி




அன்புள்ள ஜெயமோகன் சார்,

பெண்விரதம் கொண்டவன் பெண்ணும் ஆணும் அல்லாதவனால் வீழ்த்தப்படுகிறான். எனக்கு சிறுவயதில் மகாபாரத கதை கேட்கும்போது கிருஷ்ணனும் சிகண்டியும் ஒன்றுபோலவே தோன்றும். பிறகு கிருஷ்ணனின் படங்களை பார்க்கும்போதும் அவர் ஆணா பெண்ணா என ஒரு ஒவ்வாமை வரும். வெண்முரசில் நீங்கள் அர்ஜுனை நிறைய தடவை ஆணிலியாக சித்தரித்திருக்கிறீர்கள்,அப்போது எல்லாம் ஒரு எரிச்சல்,கசப்பு தோன்றும். கிறிஸ்துவின் படங்களை பார்க்கும்போதும் அந்த முடியும் கண்களும் ஆணா பெண்ணா என்று சந்தேகம் கொள்ள வைக்கும். இன்று சிகண்டி,கிருஷ்ணன், அர்ஜுன் இந்த மூன்று பேரும் சேர்ந்து பீஷ்மரை கொல்லும்போது மூன்று பேர் மீதும் கடுமையான வெறுப்பு வந்தது

ஆரம்பம் முதலே நெகிழும் தன்மை கொண்டதாகவே பாண்டவபடை இருந்துள்ளது.ஒருவரை ஒருவர் கட்டுபடுத்திக்கொண்டு முன்னெடுத்து போர் புரிகிறார்கள்.பீஷ்மர் இறந்தபின் தர்மர் அழும்போது அனைவரும் அவரை கொலைவெறியுடன் பார்க்கிறார்கள். அது வாசகர்களின் மனநிலையும் கூட. இப்போது யாரும் போர்புரியும் மனநிலையில் இல்லாதபோது பீமன் போர்புரிய கூப்பிட அனைவரும் ஒன்றுபோல் இப்போதுதான் மறுக்கிறார்கள்.இதற்கு பின்தான் பாண்டவர்களின் படையில் பெரிய ஓட்டை விழும் என நினைக்கிறேன்.

ஆனால் கவரவர் தரப்போ ஒரு பிளாஸ்டிக் தன்மை கொண்டதாகவே இருக்கிறது,அதற்கு அவர்கள் கடந்த காலங்களில் கூறப்பட்டவைகளை அப்படியே பின்பற்றுவதுதான். ஆனால் பாண்டவரோ எதிர்காலத்திற்கான ஒரு கோட்பாட்டிற்கு போர் புரிகிறார்கள். அது திட்டவட்டமாய் தெரியாமல் நெகிழ்ந்து நெகிழ்ந்து செல்வது.நம்மாலேயே உறுதியாக கூற முடியாதது.கடந்த காலத்தை எதிர்காலம் வென்றே தீரும் போல.

போர்வீரர்களின் நிலைமைதான் பயங்கரமாய் இருக்கிறது. கவரவர்கள் களம் பட்டதை அறிந்தவுடன் மீண்டும் பாண்டவபடைகளுக்கு வெறி வருவது எதற்காய் என புரியவே இல்லை.அதுதான் மானிட மனம் போல.தங்கள் முன் வீழ்பவர்களின் ரத்தத்தை குடித்து உங்க தாத்தனின் குருதி என கூறுகிறார்கள்.அனைவரும் போரில் இத்தனை நாட்களாக பீஷ்மரைதான் நினைத்துகொண்டு இருந்திருப்பார்கள் போல.நிறைய சொத்து உள்ள முதியவர்க்காக அனைவரும் கட்டிபிடித்து அழுது புரண்டு அவரின் சடலத்தை எரித்துவிட்டு வந்த பின் யாரோ ஒருவரின் ஒரு சொல்லை பிடித்துகொண்டு சொத்துக்காக அடித்து உருள்வது போல் உள்ளது. என்ன வெறி

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்